நெற்றியில் எப்படி திலகம் வைக்கலாம்? மம்மூட்டியை ‘நாய்' என விமர்சித்த நபர்.. காமெடி நடிகர் கொடுத்த பதிலடி
திருவனந்தபுரம்: இஸ்லாமியராக இருந்து கொண்டு எப்படி நெற்றியில் திலகம் வைக்கலாம் என்று நடிகர் மம்மூட்டிக்கு எதிராக நெட்டிசன் கொந்தளித்து அவரை நாய், முட்டாள் என்று விமர்சித்தி எதிர்ப்பு தெரிவித்த நிலையில் காமெடி நடிகர் அந்த நபருக்கு பதிலடி கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.

கடந்த 2024ம் ஆண்டின் ஜனவரி 1ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்திடம் சென்சார் சான்று வாங்கிய திரைப்படங்களுக்கு 72வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. இந்த விருதுகள் கடந்த 22ம் தேதி குஜராத்தின் ஏகதா நகரில் வைத்து வழங்கப்பட்டது.
ஜனாதிபதி திரெளபதி முர்மு விருது வென்றவர்களுக்கு தேசிய விருதுகளை வழங்கினார். மலையாள நடிகர் மம்மூட்டிக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. பிரமயுகம் படத்தில் அவரது நடிப்பை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது. இது மம்மூட்டியின் 4வது தேசிய விருதாகும்.
இதனால் மம்மூட்டி ரசிகர்கள் ஹேப்பியாகினர். மம்மூட்டி தேசிய விருது வாங்கிய போட்டோ, வீடியோக்கள் இணையதளங்களில் வேகமாக பரவின. அந்த வகையில் தேசிய விருது விழாவிற்கு சென்ற மம்மூட்டியின் நெற்றியில் திலகம் வைத்து வரவேற்பு வழங்கப்பட்டது. நம் நாட்டில் பல இடங்களில் இந்த வகையான வரவேற்பு வாடிக்கையான ஒன்றாக உள்ளது.
மம்மூட்டியின் நெற்றியில் திலகம் இடும் வீடியோவும் இணையதளங்களில் பரவியது. இந்த வீடியோவை பார்த்த அப்பாஸ் என்ற நபர் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதுபற்றி அவர், ''மம்மூட்டி போன்ற நபர் தொழுகை செய்வதில் என்ன பிரயோஜனம். நெற்றியில் திலகம் வைக்க குனியும் அவர் ஒரு முட்டாள்'' என்று விமர்சனம் செய்திருந்ததோடு, நாய் என்றும் விமர்சனம் செய்திருந்தார்.
இதற்கு மலையாள காமெடி நடிகர் ஹரிஸ்ரீ யூசுப் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், ''மம்மூட்டி ஒரு கலைஞர். நானும் ஒரு சிறிய கலைஞர் தான். எங்களை போன்ற கலைஞர்களுக்கு குறுகிய மனப்பான்மை இருப்பது இல்லை. நாங்கள் சற்று பரந்த கண்ணோட்டத்துடன் சிந்திக்கிறோம். நெற்றியில் திலகம் வைத்தது பெரிய தவறு போல் அப்பாஸ் என்ற நபர் கமெண்ட் செய்துள்ளார். மனதிற்குள் மதத்தை மட்டுமே சுமந்து கொண்டிருப்பவர்கள் இப்படித்தான் சிந்திப்பார்கள்.
முக்கிய நிகழ்வுகள் மற்றும் ஹோட்டல்களில் விருந்தினர்களுக்கு திலகம் இடுவது வழக்கமான உபசரிப்பு முறை. உலகெங்கிலும் உள்ள மலையாளிகளால் மதிக்கப்படும், போற்றப்படும் ஒரு நபரை நீங்கள் இழிவுப்படுத்தி உள்ளீர்கள். மம்மூட்டி பல குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்காக பண உதவி செய்துள்ளார். மதத்தை தாண்டி மம்மூட்டி இந்த சமுதாயத்துக்கு ஆற்றி உள்ள நல்ல விஷயங்களை பாருங்கள்'' என்று பதிலடி கொடுத்துள்ளார்.
இப்படி மம்மூட்டிக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டுள்ள ஹரிஸ்ரீ யூசுப் மலையளத்தில் காமெடி நடிகராக நடித்து வருகிறார். இவர் மியாவ், இனி உததரம், அமர், அக்பர் அந்தோணி உள்பட இன்னும் பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் ஹரிஸ்ரீ யூசுப்பின் இந்த வீடியோவிற்கு ஆதரவுகள் குவிந்து வருகிறது.


Click it and Unblock the Notifications
