மம்மூட்டிக்கு கேன்சரா? கேட்டவுடன் ஆடிப் போன மோகன்லால்! உடனடியாக செய்த காரியம்..உசுரே நீதானே மொமெண்ட்
திருவனந்தபுரம்: மலையாளத் திரை உலகின் சூப்பர் ஸ்டாராக கருதப்படும் மம்மூட்டிக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக வெளியான தகவல் அவரது ரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் அதனை அவர் தரப்பு மறுத்த நிலையில் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்த நிலையில் மம்மூட்டியின் உடல் நலம் சிறப்பாக இருக்க வேண்டி மலையாளத்தின் மற்றொரு சூப்பர் ஸ்டார் ஆன மோகன்லால் செய்த காரியம் சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் திரை உலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமலஹாசன் போல மலையாளத் திரையுலகில் சூப்பர் ஸ்டார்கள் என்றால் அது மம்மூட்டியும் மோகன் லாலும் தான். மலையாளத்தின் மெகா ஸ்டார் என அழைக்கப்படும் மம்மூட்டி மலையாளம் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்திருக்கிறார்.

தமிழிலும் அழகன், தளபதி, ஆனந்தம் உள்ளிட்ட பல திரைப் படங்களில் நடித்துள்ளார். கேரளா மட்டும் இன்றி இந்தியா முழுவதுமே மம்மூட்டிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான பிரம்மயுகம் படம் மம்மூட்டிக்கு இந்திய அளவில் அதிக ரசிகர்களை பெற்றுக் கொடுத்தது. தற்போது மகேஷ் நாராயணன் இயக்கும் புதிய படத்தில் மற்றொரு மலையாள சூப்பர் ஸ்டார் ஆன மோகன்லாலுடன் மம்மூட்டி இணைந்து நடிக்கிறார்.
இதற்கிடையே கடந்த சில நாட்களாக சினிமா ஷூட்டிங்கில் மம்மூட்டி கலந்து கொள்ளவில்லை. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மம்மூட்டியின் உடல் நலம் குறித்த வதந்திகள் பரவியது. மம்மூட்டி புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக அவரது உடல் நலன் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால் படப் பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை என தகவல் பரவியது. இதனால் அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
அதே நேரத்தில் மம்மூட்டி தரப்பு அதற்கு மறுப்பு தெரிவித்தது. தற்போது ரமலான் நோன்பு மாதம் என்பதால் மம்மூட்டி படப் பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை. ரமலான் நோன்பு முடிந்தவுடன் மம்மூட்டி மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் மோகன்லால் உடன் இணைந்து நடிப்பார் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.
இந்த நிலையில் தனது சக சூப்பர் ஸ்டார் ஆன மம்மூட்டிக்காக சபரிமலை ஐயப்பனிடம் பிரார்த்தனை மேற்கொண்டு இருக்கிறார் மோகன்லால். இதற்காக இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பனை காண படிக் கட்டு வழியாக சன்னிதானம் சென்ற அவர் தொடர்ந்து 18 படிகளில் ஏறி ஐயப்பனை தரிசித்தார். மேலும் 'முகமது குட்டி, விசாகம் நட்சத்திரம்' என்று தரிசன சீட்டில் எழுதிக் கொடுத்து சிறப்பு அபிஷேகமும் செய்தார். முஹம்மது குட்டி என்பது தான் மம்மூட்டியின் இயற்பெயர் என்பது குறிப்பிடத்தக்கது. நண்பனுக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்த மோகன்லாலையும் அவரது நட்பையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மம்மூட்டியும் மோகன்லாலும், மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் நடித்து வருகின்றனர். பெயர் வைக்கப்படாத அந்த படத்திற்கு தற்போது இயக்குனர் மற்றும் நடிகர்களின் பெயர்களை சேர்த்து எம்எம்எம் என தற்காலிக பெயர் இடப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் பகத் ஃபாஸில், நயன்தாரா உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications