கடவுள் தேசத்துக்கு வந்த சோதனை.. பவுன்சர்களுக்கு வலை வீசும் தனியார் மருத்துவமனைகள்! காரணம் இதுதான்
திருவனந்தபுரம்: கேரளாவில் சில தனியார் மருத்துவமனைகள் பாதுகாப்பு கருதி பவுன்சர்களை வேலைக்கு ஆட்கள் எடுக்க ஆரம்பித்து இருக்கிறார்களாம். மருத்துவமனையில் நோயாளிகளால் மருத்துவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கும் நிலையில், பவுன்சர்களை சில மருத்துவமனைகள் பாதுகாப்புக்காக இறக்கி விட்டுள்ளன.
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டாரக்கரை தாலுகா மருத்துவமனையில் 23 வயதான வந்தனா தாஸ் என்ற பயிற்சி மருத்துவர் சிகிச்சைக்கு வந்த நோயாளியால் கொலை செய்யப்பட்டார். கடந்த 10 ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் கேரளா மட்டும் இன்றி ஒட்டுமொத்த நாட்டையும் அதிர வைத்தது.

மதுபோதையில் அடிதடியில் ஈடுபட்டதால் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருந்த அரசு முன்னாள் ஆசிரியர் சந்தீப் என்பவருக்கு சிகிச்சை அளிக்க போலீசார் மருத்துவமனை அழைத்து சென்றனர். அப்போது தான் மருத்துவமனையில் இருந்த கத்திரிக்கோலை எடுத்து மருத்துவமர் வந்தனா தாசை சரமாரியாக தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்த மருத்துவர் வந்தனா தாஸ் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
நாடு முழுவவதும் பெரும் அதிர்வலைகளை இந்த சம்பவம் ஏற்படுத்தியது. இதையடுத்து மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் அவசர சட்டத்தை கேரள அரசு அண்மையில் கொண்டு வந்தது. இந்த நிலையில், கேரளாவில் உள்ள தனியார் மருத்துவனைகள் சில மருத்துவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய பவுன்சர்களை நியமிக்க ஆலோசித்து வருவதாக தெரிகிறது.
அந்த வகையில், கொச்சியை சேர்ந்த எர்ணாகுளம் மெடிக்கல் செண்டர் மருத்துவமனையில் 4 பவுன்சர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். கருப்பு நிற சஃபாரி உடையில், நிற்கும் இந்த பவுன்சர்கள், மருத்துவமனைக்கு வரும் ஓவ்வொருவரையும் உன்னிப்பாக கண்காணிக்கிறார்கள். இது குறித்து கொச்சி மருத்துவனையின் நிர்வாகிகள் கூறுகையில், மருத்துவமனைக்கு வரும் நபர்கள் சிலர் வன்முறையில் ஈடுபடும் சம்பவங்கள் நடைபெற்றதால் மருத்துவமனையின் பாதுகாப்புக்காக பவுன்சர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
சில விரும்பத்தகாத நிகழ்வுகளில் நோயாளிகள் ஈடுபட்டால் அதை எப்படி கையாள வேண்டும் என்றும் மருத்துவ ஊழியர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்ந்தால் எச்சரிக்கை குறியீடு வெளியிடப்படும். இது போன்ற குறியீடு வெளியிடப்படும் போது மருத்துவர்கள் பாதுகாப்பான இடத்தில் மொத்தமாக கூட முடியும். இதனால் மருத்துவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்" என்றனர்.
பவுன்சர்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளில் ஏற்படக் கூடாது எனவும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர மருத்துவ ஊழியர்களுக்கு உதவி செய்தால் போதும். கொச்சியில் உள்ள மற்றொரு மருத்துவமனையும் பவுன்சர்கள் பாதுகாப்புக்கு வேண்டும் என கோரியிருப்பதாகவும் பவுன்சர்களை வேலைக்கு அனுப்பும் ஏஜென்சி தெரிவித்தது.
அதேபோல், திருவனந்தபுரத்தில் உள்ள கிம்ஸ்ஹெல்த் மருத்துவமனையிலும் நீண்ட காலமாகவே பவுன்சர்கள் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்ட்டு இருப்பதாக மருத்துவமனையின் சிஇஓ ஜெர்ரி பிலிப் கூறினார். இது குறித்து அவர் கூறுகையில், "எங்கள் மருத்துவமனையில் நீண்ட காலமாக நாங்கள் பாதுகாப்புக்காக பவுன்சர்கள் நியமித்து இருக்கிறோம்.
பவுன்சர்கள் இருப்பதால் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற உணர்வு மருத்துவர்கள் மத்தியில் உள்ளது. நிலைமையை கண்காணிக்க வேண்டும் எனவும் சிக்கலை தீர்க்க முயற்சிக்க வேண்டுமே தவிர சொந்தமாக நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று நாங்கள் அறிவுறுத்தியிருக்கிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications