புதுச்சேரி டூ சபரிமலை.. கும்பிடப்போன தெய்வம்.. குறுக்கே வந்ததம்மா.. கிடைத்த 20 கோடி பரிசு
திருவனந்தபுரம்: கும்பிட போன தெய்வம்.. குறுக்கே வந்தால் எப்படி இருக்கும்.. அப்படித்தான் நடந்துள்ளது. சபரிமலைக்கு சாமி கும்பிட போன புதுச்சேரியைச் சேர்ந்தவர், திருவனந்தபுரத்தில் வாங்கிய லாட்டரிக்கு 20 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது.
லாட்டரி பல குடும்பங்களை கண்டிப்பாக ஏமாற்றத்தில் தள்ளும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.. உழைக்காமல் பணக்காரன் ஆக வேண்டும் என்ற ஆசையை தூண்டும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. அதிர்ஷ்டத்தை நம்ப வைக்கும் வாழ்க்கை முறைக்கும் அடிமையாக்கும்.. இந்த மூன்று விஷயத்தை உண்மை என்பதை பலர் நிரூபித்துள்ளனர்.

லாட்டரியை நம்பிக்கொண்டு சம்பாதித்த பணத்தை எல்லாம் லாட்டரி வாங்கி செலவழித்த ஏழைகளே அதற்கு முக்கிய காட்சி. அதன் காரணமாகவே தமிழகத்தில் லாட்டரி தடை செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் சில நேரம் அதிர்ஷ்டமும் அடிப்பது உண்டு. கேரளா உள்பட இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இன்னமும் லாட்டரி விற்பனை நடந்து வருகிறது. கேரளா செல்லும் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் லாட்டரி வாங்கி பார்ப்பார்கள். குறிப்பாக சபரிமலை செல்வோர் லாட்டரி வாங்கிக்கொண்டு ஊருக்கு திரும்புவது வாடிக்கை.. அப்படித்தான் புதுசேரியைச் சேர்ந்தவர் வாங்கி உள்ளார்.
புதுச்சேரியைச் சேர்ந்த 33 வயதாகும் இளைஞர் ஒருவர் சொந்த தொழில் செய்து வருகிறார். ( பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுவாக பரிசு பெறுவோரின் பெயர் மற்றும் புகைப்படங்களை கேரள அரசு வெளியிடுவது இல்லை) இவர் அண்மையில் சபரிமலைக்கு யாத்திரை சென்றுள்ளார். சபரிமலைக்கு சென்றவர், புத்தாண்டு கிறிஸ்துமஸ் பம்பர் பரிசு லாட்டரியை வாங்கினார். திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் அருகே லாட்டரி கடை வைத்திருக்கும் லட்சுமி என்ற சப்ஏஜெண்டு மூலம் வாங்கியிருக்கிறார்.
அந்த லாட்டரிக்கு 20 கோடி ரூபாய் பம்பர் பரிசு விழுந்தள்ளது. இதைக்கேட்டு புதுச்சேரியைச் சேர்ந்த தொழிலதிபர் மகிழ்ச்சி அடைந்ததுடன், திக்குமுக்காடிப்போனார். கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது போல் நடந்த சம்பவத்தால் நெகிழ்ந்து போய் திருவனந்தபுரத்திற்கு வந்தார். அதேநேரம் பரிசு விழுந்த முடிவை ரகசியமாக வைத்திருந்த அதிகாரிகள், அண்மையில் தான் தெரிவித்தனர். பரிசு விழுந்த புதுச்சேரி தொழிலதிபர், வெள்ளிக்கிழமை அன்று லாட்டரி இயக்குனரகத்திற்கு வந்தார்.
லாட்டரி இயக்குனர் அலுவலகத்திற்கு வெளியே ஊடகவியலாளர்கள் அதிகம்பேர் இருந்தனர், அவர்களைப் பார்த்து அவர் பீதியடைந்தார். அதேநேரம் அவரது பெயர் அல்லது முகவரியைப் பகிர வேண்டாம் என்று செய்தியாளர்களிடம் லாட்டரி இயக்குனரக அதிகாரி கேட்டுக்கொண்டார். அதன்பேரில் அவரது பெயர் மற்றும் புகைப்படங்களை பகிரவில்லை..
கிறிஸ்துமஸ்-புத்தாண்டு பம்பர் லாட்டரி என்பது திருவோணம் பம்பருக்குப் பிறகு இரண்டாவது அதிக பரிசுத் தொகை கொண்ட லாட்டரி சீட்டு ஆகும். இந்த ஆண்டு கிறிஸ்துமஸ்-புத்தாண்டு பம்பர் முதல் பரிசாக ரூ.20 கோடியும், இரண்டாம் பரிசாக தலா ரூ.1 கோடியும் 20 பேருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. முதல் பரிசை வென்ற புதுச்சேரி தொழிலதிபருக்கு வரி மற்றும் ஏஜென்ட் கமிஷன் கழித்த பிறகு சுமார் ரூ.12 கோடி கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications