‛‛ராகுலை விட 2 மடங்கு அதிகம்’’.. சசிதரூர் எம்பியின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா? வாழும் குபேரர்
திருவனந்தபுரம்: கேரளா திருவனந்தபுரம் லோக்சபா தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் வேட்பாளராக சசிதரூர் எம்பி போட்டியிடுகிறார். இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியை விட சசிதரூர் 2 மடங்கு கூடுதலாக சொத்து வைத்துள்ளார். மேலும் அவரது மொத்த சொத்து மதிப்பின் விவரம் வருமாறு:
கேரளா தலைநகரான திருவனந்தபுரம் லோக்சபா தொகுதி எம்பியாக காங்கிரஸ் கட்சியின் சசிதரூர் உள்ளார். சசிதரூர் 3 முறை இந்த தொகுதியில் வென்றுள்ளார். கடந்த 2009, 2014, 2019 ஆகிய தேர்தல்களில் சசிதரூர் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட்டு எம்பியானார். மேலும் முதல் முறையாக எம்பியான போதே மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார்.

இந்நிலையில் தான் சசிதரூர் 4வது முறையாக மீண்டும் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பாஜகவில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடுகிறார். சசிதரூரை எதிர்த்து மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் அல்லது ஜெய்சங்கர் போட்டியிடுவார்கள் என கூறப்பட்டது.
இருவரும் தேர்தலில் போட்டியிட மறுத்ததாக கூறப்படும் நிலையில் பாஜக மேலிடம் சசிதரூரை எதிர்த்து ராஜீவ் சந்திரசேகரை களமிறக்கி உள்ளது. இதனால் இந்த முறை திருவனந்தபுரம் தொகுதி தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. கேரளாவை பொறுத்தமட்டில் திருவனந்தபுரம், ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு உள்பட மொத்தம் 20 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 26ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் தான் சசிதரூர் எம்பி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவரது சொத்து மதிப்பு விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி சசிதரூர் தனது கையில் ரூ.36 ஆயிரம் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் வங்கி கணக்குகள், பங்கு வர்த்தகத்தில் தனித்தனியாக பல லட்சம் முதலீடு உள்ளதாக தெரிவித்துள்ளார். Maruti Ciaz, Maruti XL6 என்ற 2 வாகனங்கள் உள்ளதாகவும், 534 கிராம் தங்க நகைகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதன்படி மொத்தம் அசையும் சொத்தாக ரூ.49 கோடியே 31 லட்சத்து 51 ஆயிரத்து 505 உள்ளதாக சசிதரூர் தெரிவித்துள்ளார். அதோடு அசையா சொத்தாக ரூ.6 கோடியே 75 லட்சத்து 4 ஆயிரத்து 621 உள்ளதாக கூறியுள்ளார். அதன்படி பார்த்தால் சசிதரூரிடம் மொத்தம் ரூ.56 கோடியே 6 லட்சத்து 56 ஆயிரத்து 126 மதிப்புள்ள சொத்துகள் உள்ளது.
இது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கேரளா வயநாடு தொகுதி வேட்பாளருமான ராகுல் காந்தியின் சொத்து மதிப்பை விட சுமார் 2 மடங்கு அதிகமாகும். அதாவது ராகுல் காந்தியிடம் ரூ.9 கோடியே 24 லட்சத்து 59 ஆயிரத்து 264 மதிப்பிலான அசையும் சொத்து, ரூ.11 கோடியோ 15 லட்சத்து 2 ஆயிரத்து 598 மதிப்பிலான அசையா சொத்துகள் என மொத்தம் ரூ.20 கோடியே 39 லட்சத்து 61 ஆயிரத்து 862 மதிப்பிலான சொத்து இருக்கிறது. அதனை ஒப்பிடும்போது ராகுல் காந்தியை கையில் இருக்கும் சொத்தை விட 2 மடங்கு கூடுதலாக சசிதரூர் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications