இறந்த தாய்க்கு இறுதி சடங்கு செய்யாமல்! வீட்டிலேயே வைத்து பூஜை செய்த மகன்! கொல்லத்தில் ஷாக்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் குளத்துப்புழா அருகே இறந்த தாயின் உடலை வீட்டிலேயே வைத்து 5 நாட்களாக அவரது மகன் பூஜை செய்து வந்ததை அறிந்த போலீஸார் அங்கு சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொல்லத்தை அடுத்த குளத்துப்புழாவை சேர்ந்த சின்னத்தம்மா. இவர் தனது மகன் கிருஷ்ணசாமியுடன் ரப்பர் தோட்ட எஸ்டேட்டில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை சின்னத்தம்மா (90), வயோதிகத்தால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டார். அவர் இறந்த விஷயத்தை அவரது மகன் கிருஷ்ணசாமி யாரிடமும் சொல்லவில்லை என தெரிகிறது.
இந்த நிலையில் தனது பாட்டியை பார்க்க கிருஷ்ணசாமியின் மகள் சென்றிருந்தாராம். அப்போது அங்கு தனது பாட்டியின் உடல் இருந்ததை அறிந்ததும் உறவினர்களுக்கும் போலீஸுக்கும் தகவல் கொடுத்தார்.
இதுகுறித்து போலீஸார் கூறியிருப்பதாவது: சின்னத்தம்மா இத்தனை நாட்களாக படுத்த படுக்கையாக இருந்து வந்தாராம். அவர்தான் தாயை பார்த்துக் கொண்டிருந்தாராம். கிருஷ்ணசாமி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் தெரிகிறது.
தனது தாயின் இறப்பை அவரால் ஏற்க முடியவில்லை, இதனால் அவர் தாயின் உடலை வீட்டிலேயே வைத்திருந்ததாக சொல்கிறாராம். தினமும் தனது தாயின் உடலை ஈரத்துணியால் துடைத்து துர்நாற்றத்தை தவிர்க்க பவுடர் போட்டு ஒரு வெள்ளைத் துணியால் மூடி வைத்துவிட்டு பூஜைகளை செய்திருந்தாராம். இவ்வாறு போலீஸார் தெரிவித்திருந்தனர்.
குளத்துப்புழா போலீஸ், மூதாட்டியின் மரணத்தை இயற்கைக்கு மாறான மரணம் என்றே வழக்குப் பதிவு செய்துள்ளனர். சின்னத்தம்மாவின் உடலை மீட்டு பரிப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கிருஷ்ணசாமியிடம் விசாரணை நடத்தப்படுகிறது. அவருக்கு மனநலம் எப்படி இருக்கிறது என்பது குறித்து ஆய்வுகள் செய்யப்படுகிறது. கிருஷ்ணசாமி யாரிடமும் அதிகம் பேச மாட்டாராம். அதனால் அவரது வீட்டிற்கு என்ன நடக்கிறது என யாருக்குமே தெரியாது என அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications
