மூளைக்கு ஏறிய மூட நம்பிக்கை! வைகுண்ட ஏகாதசியில் தந்தைக்கு சமாதி கட்டிய மகன்கள்.. கேரளாவில் ஷாக்
திருவனந்தபுரம்: வைகுண்ட ஏகாதசியில் மரணித்தால் சொர்க்கத்திற்கு போகலாம் என்று சொல்வதை நம்பி, உயிருடன் இருந்த தனது தந்தைக்கு மகன்கள் சமாதி கட்டியுள்ளனர். தந்தையின் விருப்பத்தின் பேரில்தான் இப்படி செய்தாக மகன்கள் கூறியுள்ளனர். தற்போது சடலமாக தந்தையின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது.
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. திருவனந்தபுரத்தை ஒட்டியுள்ள நெய்யாற்றின்கரை பகுதியில் கோபன் என்பவர் வசித்து வந்திருக்கிறார். இவரை அப்பகுதி மக்கள் சுவாமி கோபன் என அழைத்து வந்தனர். காரணம், அவர் மிகுந்த பக்தி கொண்டவராக இருந்திருக்கிறார். தன்னுடைய வீட்டில் சிவனுக்கு கோயில் கட்டி வழிபடும் அளவுக்கு அவருக்கு பக்தி இருந்திருக்கிறது. இவரின் பக்தி செயல்பாடுகள்தான் கோபனை சுவாமி கோபனாக அப்பகுதி மக்களிடையே மாற்றியுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் தனது மகன்களான ராஜசேனா மற்றும் சனந்தன் இருவரையும் அழைத்த கோபன், "மகன்களே என்னுடைய நாட்கள் முடிவை நெருங்கிக்கொண்டிருக்கின்றன. வருகிற வைகுண்ட ஏகாதசி அன்று என் உடலை விட்டு உயிர் பிரிந்துவிடும். எனவே, வீட்டில் எனக்காக ஒரு சமாதியை எழுப்புங்கள். அங்கு நான் சென்று அமர்ந்து தியானம் செய்கிறேன். அங்கேயே என் உயிர் பிரிந்துவிடும். என்னுடைய சடலத்தை நம் குடும்பத்தினர் தவிர வேறு யாரும் பார்க்க கூடாது" என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து அவருக்காக மகன்கள் சமாதியை எழுப்பியுள்ளனர். திட்டமிட்டவாறு கடந்த 10ம் தேதி சமாதியில் வந்து கோபன் அமர்ந்திருக்கிறார். அவரை சுற்றி சமாதி எழுப்பி மூடப்பட்டிருக்கிறது. பூஜைகள் சிறப்பாக நடைபெற்றிருக்கின்றன. சமாதியில் தந்தை கோபன் உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்கு பிறகுதான் விஷயம் வெளியில் தெரிய வந்திருக்கிறது. அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் இது தொடர்பாக புகார் அளித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் வீட்டிற்குள் கோபன் உயிருடன் சமாதி கட்டி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. கோபனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்ப போலீசார் முயன்றிருக்கின்றனர். ஆனால் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பை தெரிவித்திருக்கின்றனர். அவர்களுக்கு ஆதரவாக உள்ளூர் சாமியார்களும், மடங்களும் குரல் கொடுத்திருக்கின்றன. எதிர்ப்பு ஓவராக இருக்கவே என்ன செய்வது என்று தெரியாமல் போலீசார் நிற்க.. உதவி ஆட்சியர் புகாரின் பேரில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டிருக்கிறது.
பிரேத பரிசோதனையில் கோபனின் உயிரிழப்பு இயற்கையானதாக இருப்பின், உடல் குடும்பத்தினருடன் ஒப்படைக்கப்படும். ஆனால், இயற்கைக்கு மாறான மரணம் எனில் நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியுள்ளனர்.

இந்தியாவில் அதிக கல்வியறிவு கொண்ட மாநிலமாக கேரளா இருக்கிறது. ஆனால் இங்குதான் இதுபோன்ற மூடநம்பிக்கை செயல்களும் அதிக அளவில் நடந்து வருகின்றன. அந்த வகையில் கோபனின் மரணம் கேரளாவில் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.












Click it and Unblock the Notifications