"நான் உங்க பெரிய Fan.. அந்த பாட்ட கொஞ்சம் பாடுறீங்களா" நஞ்சம்மா பாட்டியை நேரில் வாழ்த்திய அண்ணாமலை
திருவனந்தபுரம்: 'அய்யப்பனும் கோஷியும்' திரைப்படத்திற்காகத் தேசிய விருது பெறும் பாடகி நஞ்சியம்மாளை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் வாழ்த்தினார்.
நாட்டின் 68ஆவது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ் திரையுலகம் 10 விருதுகளைப் பெற்றது.
குறிப்பாக சூர்யா நடிப்பில் வெளியான "சூரரைப் போற்று" திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வாரிக் குவித்தது.

அய்யப்பனும் கோஷியும்
அதேபோல மலையாளத்தில் வெளியான 'அய்யப்பனும் கோஷியும்' திரைப்படம் மொத்தம் 4 விருதுகளை அள்ளியது. சிறந்த இயக்குநர், சிறந்த துணை நடிகை, சிறந்த சண்டை இயக்குநர் ஆகிய பிரிவுகளில் 'அய்யப்பனும் கோஷியும்' திரைப்படத்திற்குத் தேசிய விருதுகள் கிடைத்தன. குறிப்பாக அந்தத் திரைப்படத்தில் இடம் பெற்ற கிராமிய பாடலை பாடிய நஞ்சியம்மாவுக்கு சிறந்த பின்னணி பாடகர் (பெண்) விருது வழங்கப்பட்டது.

நஞ்சியம்மா
70 வயதான நஞ்சியம்மா பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் ஆவர். பழங்குடியின இளைஞர்கள் உருவாக்கிய இசைக்குழுவில் இவர் பாடகியாக இருக்கிறார். கேரளாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பாடி வந்த இவரை 'அய்யப்பனும் கோஷியும்' இயக்குநர் சச்சி, தனது படத்தில் பாட வைத்தார். இந்த பாடல் வெளியான உடனேயே ஹிட் அடித்தது. இதற்காகக் கடந்த ஆண்டு இவர் கேரளா மாநில விருதையும் பெற்று இருந்தார்.

அண்ணாமலை நேரில் வாழ்த்து
தேசிய விருது பெற்ற நஞ்சியம்மாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நஞ்சம்மாளை நேரில் சந்தித்து வாழ்த்தினர். கேரளாவில் நஞ்சியம்மா நேரில் சந்தித்து அவருக்குப் பொன்னாடை போர்த்தி, வாழ்த்தினார். நஞ்சம்மாளின் மிகப் பெரிய ரசிகர் என்று குறிப்பிட்ட அண்ணாமலை, அந்தப் பாடலின் சில வரிகளைப் பாடும்படி கேட்டுக் கொண்டார்.

பழங்குடியினரின் பெருமை
இதையடுத்து நஞ்சியம்மாள் அந்தப் பாடலை பாட, அண்ணாமலை ரசித்து கேட்டார். இந்த வீடியோவை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, "இருளர் பழங்குடியினரின் பெருமை, நஞ்சம்மா அவர்கள். தனது குரலால் கோடிக் கணக்கான மக்களை ஈர்த்துவிட்டார். அவரது ரசிகர்களில் ஒருவராக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன். அவரை சந்தித்தது போற்றுதலுக்குரியது. நஞ்சம்மா பாட்டிக்கு மலையாள திரைப்படமான 'அய்யப்பனும் கோஷியும்' படத்திற்காகச் சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது கிடைத்ததில் மகிழ்ச்சி'' என பதிவிட்டுள்ளார்.
Recommended Video

நெகிழ்ச்சி
முன்னதாக விருது பெற்ற நஞ்சியம்மாள் கூறுகையில், "ஆடு, மாடு மேய்ப்பது தான் எனது தொழிலாக இருந்தது. யாருக்கும் என்னைப் பற்றித் தெரியாது. அப்படியிருந்த என்னை வெளியுலகுக்குக் கொண்டு சென்றவர் இயக்குநர் சச்சி சார் தான். எனக்கு இந்த உலகத்தைக் காட்டிய சச்சி சார் இன்று இப்போது உலகத்தில் இல்லை என்பது வேதனையே. இன்று அவர் உயிருடன் இருந்திருந்தால் நான் விருது வாங்குவதை நினைத்துப் பெருமைப்பட்டிருப்பார்" என்றார்.












Click it and Unblock the Notifications