ராஜீவை போல்.. கேரளாவில் பிரதமர் மோடியை கொல்ல தற்கொலை படை தாக்குதல்.. பகீர் மிரட்டல்..பரபர கடிதம்
திருவனந்தபுரம்: பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக கேரளா செல்ல உள்ள நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்றது போல் தற்கொலை படைத்தாக்குதல் நடத்தி அவரை கொலை செய்வதாக கடிதம் எழுதப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக கேரளா செல்ல உள்ளார். அதாவது நாளை மறுநாளான 24 மற்றும் 25 ஆகிய 2 நாட்கள் பிரதமர் நரேந்திர மோடி கேரளாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளன. பிரதமர் மோடிக்கு பலஅடுக்கு பாதுகாப்புகளை வழங்க கேரள போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஒத்திகை பணிகளும் தொடங்கி உள்ளன. இந்நிலையில் தான் கேரளா செல்லும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்றது போன்று பிரதமர் மோடி கொலை செய்யப்படுவதாக மிரட்டல் கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது. இதன்மூலம் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தற்கொலை படைத்தாக்குதல் நடத்துவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கடிதம் பாஜக மாநில தலைவர் சுரேந்திரன் அலுவலகத்துக்கு வந்துள்ளது. மலையாளத்தில் எழுதப்பட்டு இருந்த இந்த கடிதத்தை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர் உடனடியாக கடிதத்தை போலீசில் ஒப்படைத்தார்.
இந்த சம்பவம் ஒரு வாரத்துக்கு முன்பு நடந்தது. இதையடுத்து மிரட்டல் குறித்த விபரங்களை போலீசார் வெளியிடாமல் ரகசியமாக விசாரித்து வந்த நிலையில் இன்று தான் பிரதமர் மோடிக்கு எதிரான கொலை மிரட்டல் தொடர்பான விபரம் வெளியாகி உள்ளது. மாநில உளவுத்துறை ஏடிஜிபியின் பத்திரிகை செய்தி மூலம் தான் இந்த தகவல் வெளியே கசிந்தது.
முன்னதாக இந்த விவகாரத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது கடிதத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி கொச்சியை சேர்ந்த என்கே ஜானி என்பவரை பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் தான் கடிதம் எழுதவில்லை என கூறினார். இருப்பினும் தன்மீதான காழ்ப்புணர்ச்சியால் மற்றவர்கள் அவரை சிக்க வைக்க கடிதம் எழுதி இருக்கலாம் என்றார்.

இதையடுத்து அவரை போலீசார் விட்டு சென்றனர். மேலும் மிரட்டல் கடிதம் எழுதிய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் பிரதமர் மோடியின் வருகையையொட்டி பாதுகாப்பை பலப்படுத்த இன்னும் விரிவாக திட்டமிடப்பட்டுள்ளது. இதுபற்றி என்கே ஜானி கூறுகையில், ‛‛போலீசார் வந்து விசாரித்தனர். அப்போது நான் மிரட்டல் கடிதம் எழுதவில்லை என கூறினேன். மேலும் என் மீது உள்ள வெறுப்பால் மற்றவர்கள் இப்படி செய்திருக்கலாம் என்றேன். மேலும் சிலரது பெயர்களை கூறினேன்'' என்றார்.
இதுபற்றி பாஜக மாநில தலைவர் கே சுரேந்திரன் கூறுகையில், ‛‛கேரளாவில் மத தீவிரவாத அமைப்புகள் மிகவும் வலுவாகவும், தீவிரமாகவும் உள்ளன. இதற்கிடையே தான் பிரதமர் மோடியின் சுற்றுப்பயணம் குறித்த விபரங்கள் தொடர்பான மாநில உளவுத்துறை தலைவரின் அறிக்கை ஊடகங்களில் வெளியாகி உள்ளது. தடைசெய்யப்பட்ட பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா, பிடிபி மற்றும் எஸ்டிபிஐ மற்றும் மாவோயிஸ்டுகள் உள்ளிட்ட பல அமைப்புகள் கேரளாவில் உள்ள நிலையில் போலீசார் அலட்சியம் காட்டுகின்றனர்'' என கொதித்துள்ளார்.












Click it and Unblock the Notifications