Exclusive: "மிக மோசமான பேரிடர்.." மீட்பு பணிகள் எப்போது முடியும்? மேஜர் ஜெனரல் வி.எல்.மேத்யூ தகவல்
திருவனந்தபுரம்: கேரளாவில் நிலச்சரிவு காரணமாக மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், ராணுவம் அங்கே மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே மீட்பு பணிகள் குறித்து ஒன் இந்தியாவுக்கு சிறப்பு பேட்டியளித்த மேஜர் ஜெனரல் வி.எல்.மேத்யூ, மீட்பு பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கடைசி நபரையும் பாதுகாப்பாக அழைத்து வருவதே ராணுவத்தின் பணி என்றும் தெரிவித்தார்.
அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த ஜூலை 30ம் தேதி அதிகாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு சில நாட்களாக கனமழை கொட்டி வந்த நிலையில், திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

நமது நாட்டில் சமீப காலங்களில் ஏற்பட்ட மிக மோசமான நிலச்சரிவுகளில் இதுவும் ஒன்று. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
பாலம்: நிலச்சரிவால் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்ட பகுதிக்கு செல்ல ஒரே ஒரு பாலம் மட்டுமே இருந்தது. அந்த பாலமும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட நிலையில், மீட்பு படையினரால் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல முடியவில்லை. மேலும், ராணுவத்தினராலும் மீட்பு பணிகளுக்கான உபகரணங்களை எடுத்துச் செல்ல முடியவில்லை. இதனால் அங்கு தற்காலிக பாலம் அமைக்கும் பணிகளை ராணுவம் மேற்கொண்டது. இந்த பாலம் முடிந்தால் சிறப்பு உபகரணங்களை அங்கு எடுத்துச் சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்த முடியும்.
இதற்கிடையே மீட்பு பணிகள் குறித்து களத்தில் இருந்து பணிகளை கவனித்து வரும் மேஜர் ஜெனரல் வி.எல்.மேத்யூ ஒன் இந்தியாவுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். பாலம் கட்டுமானம் நிறைவடைய போவதாகவும் கடைசி நபரையும் இங்கிருந்து பாதுகாப்பாக அழைத்து வருவதே ராணுவத்தின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேஜர் ஜெனரல் வி.எல்.மேத்யூ: இது தொடர்பாக களத்தில் இருந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வரும் மேஜர் ஜெனரல் வி.எல்.மேத்யூ மேலும் கூறுகையில், "முண்டக்கையின் பல்வேறு பகுதிகளில் 500 ராணுவ வீரர்கள் 6 குழுக்களாகச் சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நமது நாட்டில் சமீப காலத்தில் நடந்த மிக பெரிய மீட்பு பணி இது.. பாதிப்பு மோசமாக இருப்பதால் மீட்பு பணிகள் கடினமாக இருக்கிறது.
இரவில் மீட்பு பணிகளை மேற்கொள்வது மிக கடினமாக இருநத்து. எங்களால் முடிந்ததை இரவு செய்தோம். முடிந்த வரை மீட்பு பணிகளை தொடர்ந்து நடத்த முயன்றோம். தீவிர பாதிப்பு அடைந்த பகுதிக்கு செல்ல சுமார் இருநூறு அடிக்கு பாலத்தை ராணுவம் கட்டி வருகிறது. சீக்கிரம் இந்த பாலத்தின் பணிகள் முடியும். இனி இந்த பாலம் வழியாக எளிதாக மோசமாக பாதிக்கப்பட்ட இடங்களை அடையலாம்.
சிறப்பு உபகரணங்கள்: ராணுவத்திடம் தேடுதலுக்கு சிறப்பு உபகரணங்கள் உள்ளன. ஆனால் பாலம் இல்லாததால் அதை எடுத்து செல்ல முடியவில்லை. இப்போது பாலம் கட்டி முடிக்கப்படும் என்பதால் முண்டகை மற்றும் சூரல்மலை பகுதிக்கு சிறப்பு உபகரணங்களை ராணுவம் எளிதாக எடுத்து வரலாம். பாலம் இல்லாததால் இதுவரை உபகரணங்களை பயன்படுத்தாமல் மீட்பு பணிகள் நடந்து வருகிறது. பாலம் கட்டி முடிக்கப்பட்ட உடன் மீட்பு பணிகளில் இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். இதனால் மீட்பு பணிகள் துரிதமடையும்.
கடைசி நபரையும் அழைத்து வருவோம்: பாலம் கட்டும் பணி முடிந்ததும், அனைத்து உபகரணங்களும் முண்டகை மற்றும் சூரல்மலை பக்கம் கொண்டு வரப்படும். இத்காகவே இங்கு இந்த இருநூறு அடி நீள பாலம் கட்டப்பட்டு வருகிறது.. இந்த நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு இருக்கும் கடைசி நபரையும் பாதுகாப்பாக வெளியே அழைத்து வருவதே ராணுவத்தின் முதல் பணி.. இன்று மழை ஒரளவுக்கு குறைந்துள்ளது. இதனால் மீட்பு பணிகளையும் வேகப்படுத்தி இருக்கிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications