திருவனந்தபுரம் இந்துஜா.. கல்யாணம் ஆன வெறும் 3 மாதத்திலேயே.. காதலன், கணவன் செய்த காரியம்
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பாலோட்டை சேர்ந்தவர் அபிஜித் தேவன் மற்றும் இந்துஜா ஆகியோர் கடந்த 3மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்தனர். இதில் இந்துஜா கடந்த 6ம் தேதி மதியம் சாப்பாடு பரிமாறினார். அதன்பிறகு அவர் அறையைவிட்டு வரவே இல்லை.. அவருக்கு என்ன நடந்தது. ஏன் போலீசார் கணவரையும் காதலனையும் கைது செய்தனர் என்பதை பார்ப்போம்.
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பாலோட்டை சேர்ந்தவர் 25 வயதாகும் அபிஜித் தேவன் (வயது 25). அதே பகுதியைச் சேர்ந்தவர் இந்துஜா (25). இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் கடந்த 3 மாதங்களுக்கு முன் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கல்யாணம் செய்து கொண்டனர். அவர்கள் திருமணத்திற்கு பிறகு சந்தோசமாக குடும்பம் நடத்தி வந்தார்கள்.

இந்தநிலையில் கடந்த டிசம்பர் 6-ந் தேதி மதியம் கணவர் அபிஜித் தேவனுக்கு மதிய உணவை பரிமாறிய இந்துஜா படுக்கை அறைக்கு சென்றிருக்கிறார். அதன்பின்னர் அறையை விட்டு இந்துஜா வெளியே வரவே இல்லை.. பிறகு நீண்ட நேரமாக இந்துஜாவை, அபிஜித் தேவன் கூப்பிட்டும்.. அவர் வெளியே வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் அபிஜித் தேவன் படுக்கை அறைக்கு சென்று பார்த்த போது ஜன்னல் கம்பியில் தூக்கில் தொங்கிய நிலையில் இந்துஜா உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை கண்ட அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உடனடியாக அவரை மீட்டு நெடுமங்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே இந்துஜா பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக தகவல அறிந்து வந்த நெடுமங்காடு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே பிரேத பரிசோதனை அறிக்கையில், இந்துஜா இறப்பதற்கு முன், அவரது உடலில் தாக்கப்பட்டதற்கான காயங்கள் ஆங்காங்கே இருந்தது. இதை தொடர்ந்து புதுப்பெண் தற்கொலை விவகாரத்தில் விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தினார்கள். இதில் திடீர் திருப்பமாக காதலன், கணவர் ஆகியோர் கொடுத்த தொந்தரவின் காரணமாக புதுப்பெண் உயிரையே விட்டது விசாரணையில் தெரியவந்ததது.
போலீசார் நடத்திய விசாரணையில், அபிஜித் தேவனை காதலிப்பதற்கு முன்பு இந்துஜா அஜாஸ் (25) என்பவரையும் காதலித்து வந்தாராம். பிறகு அவர்களுக்கிடையே மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்தனர். அதே சமயத்தில் அபிஜித் தேவனை மணந்த பிறகு அஜாஸ் உடனும் தொடர்பில் இருந்தாராம். இந்துஜா தற்கொலை செய்வதற்கு 2 நாட்கள் முன்பு அவரை காதலன் அஜாஸ் காரில் சங்கு முகம் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது உனக்கு மேலும் ஒருவருடன் தொடர்பு இருக்கிறது என கூறி திடீரென இந்துஜாவை தாக்கினாராம். இதுதவிர இந்துஜாவை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவரது கணவர் அபிஜித் தேவனிடமும் நடந்தவற்றை கூறிவிட்டாராம்
இதைத்தொடர்ந்து கணவர் அபிஜித் தேவனும், இந்துஜாவை தொந்தரவு செய்திருக்கிறார். முன்னாள் காதலன், கணவர் கொடுத்த தொந்தரவின் காரணமாக வாழ்க்கையில் வெறுப்படைந்த இந்துஜா உயிரை விட்டிருக்கலாம் என போலீசார் முடிவு செய்தனர். அதன்படி தற்கொலைக்கு தூண்டியதாக அபிஜித் தேவன், அஜாஸ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications