10 நாள் ஆச்சு.. பிரிட்டன் போர் விமானம் கேரளாவிலேயே இன்னும் நகராம இருக்கே.. உண்மையில் என்ன காரணம்?
திருவனந்தபுரம்: கடந்த ஜூன் 14ம் தேதி திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்கிய பிரிட்டிஷ் ராயல் கடற்படையின் அதிநவீன F-35B லைட்னிங் II போர் விமானம் இன்னும் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சுமார் 110 மில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த விமானம் 10 நாட்களாக அங்கேயே இருப்பது ஏன் என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளன இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
பிரிட்டன் நாட்டிற்குச் சொந்தமான அதிநவீன F-35B லைட்னிங் II போர் விமானம் கடந்த ஜூன் 14ம் தேதி திருவனந்தபுரத்தில் தரையிறங்கியது. விமானத்தில் இருந்த வந்த எமர்ஜென்சி கோட்டை தொடர்ந்தே விமானம் தரையிறங்க அனுமதி தரப்பட்டது. திருவனந்தபுரம் விமான நிலையத்தின் பே-4ல் நிறுத்தப்பட்டுள்ள இந்த பிரிட்டிஷ் போர் விமானத்திற்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

என்ன காரணம்?
முதலில் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக விமானம் அவசரமாகத் தரையிறங்கியதாகக் கூறப்பட்டது. இருப்பினும், அதன் பிறகே ஹைட்ராலிக் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே விமானம் தரையிறக்கப்பட்டது தெரிய வந்தது. பிரிட்டிஷ் குழுவினரின் தொடர் முயற்சிகள் எடுத்தும் விமானத்தை மீண்டும் இயக்க முடியவில்லை.
மழைக் காலம் என்பதால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அந்த விமானத்தை ஹேங்கருக்கு எடுத்துச் செல்ல முன்வந்தது. இருப்பினும், பிரிட்டிஷ் கடற்படை அதனை ஏற்கவில்லை. இதற்கிடையே அந்த ஜெட் விமானத்தில் ஏற்பட்ட பிரச்சனை என்ன, அது ஏன் இன்னும் இயக்க முடியாமலேயே உள்ளது என்பது குறித்துப் பல கேள்விகள் எழுந்து உள்ளன.
என்ன நடந்தது?
ஹெச்எம்எஸ் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் கேரியர் ஸ்ட்ரைக் குழுவின் (HMS Prince of Wales Carrier Strike Group) ஒரு பகுதியாக இருந்த பிரிட்டிஷ் ராயல் கடற்படையின் F-35B லைட்னிங் II போர் விமானம் ஜூன் 14ம் தேதி திருவனந்தபுரத்தில் தரையிறங்கியது.
கேரள கடற்கரையிலிருந்து சுமார் 100 கடல் மைல் தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பிரிட்டிஷ் விமானம் தாங்கி கப்பலில் இருந்து இந்த ஜெட் புறப்பட்டதாகத் தெரிகிறது.. எரிபொருள் குறைவு, மோசமான வானிலை என விமானம் முதலில் தரையிறங்க பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன. அதன் பிறகே ஹைட்ராலிக் கோளாறு தான் பிரச்சினை என்பது தெரிய வந்தது.
அனுமதி வழங்கப்பட்டது
இந்தியப் பெருங்கடலில் நடந்த கூட்டுப் பயிற்சியின் ஒரு பகுதியாக இந்த ஜெட் விமானம் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது தான் பிரச்சினையை உணர்ந்து ஜெட் விமானம் எமர்ஜென்சி கோட் SQUAWK 7700-ஐ அனுப்பியுள்ளது. அதைத் தொடர்ந்தே விமானம் தரையிறங்க அனுமதி தரப்பட்டது.
ஜெட் விமானம் தரையிறக்கிய பிறகு எரிபொருள் நிரப்புவது உட்பட அனைத்து உதவிகளையும் இந்திய விமானப்படை செய்தது. அப்போது புறப்படுவதற்குத் தயாரானபோது, விமானத்தில் ஹைட்ராலிக் கோளாறு ஏற்பட்டு விமானம் புறப்பட முடியாமல் போனதாகக் கூறப்படுகிறது. போர் விமானத்தில் தரையிறங்கும் கருவி, பிரேக்குகள் போன்ற முக்கிய செயல்பாடுகளை ஹைட்ராலிக் அமைப்புகள் தான் கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் காரணமாகவே விமானத்தை மீண்டும் பறக்க வைக்க முடியவில்லை.
வல்லுநர்கள் முயற்சி
இப்போது பிரிட்டன் தொழில்நுட்ப வல்லுநர்கள் திருவனந்தபுரத்திற்கு வந்துள்ளனர். அவர்கள் விமானத்தைச் சரி செய்ய முயன்று வருகிறார்கள். இருப்பினும், ஒரு வேளை அவர்களால் விமானத்தைச் சரி செய்ய முடியாவிட்டால், ராணுவ சரக்கு விமானம் மூலம் இந்த ஜெட் விமானம் பிரிட்டனுக்கு எடுத்துச் செல்லப்படும்.
அதிநவீன F-35B போர் விமானம் குறுகிய தூரத்தில் டேக் ஆஃப் மற்றும் செங்குத்தாகத் தரையிறங்கும் திறன் கொண்டது. மேலும் மேம்பட்ட சென்சார் அமைப்புகளைக் கொண்ட உலகின் மிகவும் விலையுயர்ந்த மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட போர் விமானங்களில் இதுவும் ஒன்றாகும். அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த விமானம், எதிரிகளின் ரேடார்களில் இருந்து தப்பிக்கும் திறன் கொண்டது. F-35 போர் விமானம் அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட பல நேட்டோ நாடுகளிடம் உள்ளது.
இப்படி விமானத்தில் இருக்கும் மேஜர் சிக்கல் காரணமாகவே விமானத்தை மீண்டும் கிளப்ப முடியவில்லை. இன்னும் எத்தனை காலம் அந்த ஜெட் விமானம் அப்படியே அங்கு இருக்கும் என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications