மத அடிப்படையில் குடியுரிமையா? சிஏஏவை கேரளாவில் அமல்படுத்த மாட்டோம் -முதலமைச்சர் பினராயி விஜயன் உறுதி
திருவனந்தபுரம்: கேரளாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தனது அரசு அமல்படுத்தாது என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் உறுதியளித்துள்ளார்.
கேரள மாநில முதலமைச்சராக 2 வது முறை பினராயி விஜயன் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவுபெற்றதை கொண்டாடும் வகையில் விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், "நமது நாடு மதசார்பின்மை என்ற கொள்கையை அடிப்படையாக கொண்டு செயல்படுவதாக அரசியலமைப்பு சட்டத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மதசார்பின்மையை தகர்க்க சதி
ஆனால், தற்போது மதசார்பின்மையை தகர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு குறிப்பிட்ட பிரிவை சேர்ந்த மக்கள் இதனால் பெரும் கவலை அடைந்து இருக்கின்றனர். சமீபத்தில் மதத்தின் அடிப்படையில் குடியுரிமையை நிர்ணயம் செய்கின்றனர். கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு அதை எதிர்ப்பதில் உறுதியாக இருக்கிறது.

மத பதற்றத்தை ஏற்படுத்த கணக்கெடுப்பு
நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்களிடையே மத பதற்றத்தை ஏற்படுத்துவதற்காக பல்வேறு கணக்கெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் இங்கு சமுதாயத்தில் மிகவும் வறுமை நிலையில் உள்ள குடும்பங்களை கண்டறிய கணக்கெடுப்பை நடத்தினோம். இந்த கணக்கெடுப்பு தொடர்பாக அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறோம்.

சி.ஏ.ஏ.வை அமல்படுத்த மாட்டோம்
கேரளாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அரசு அமல்படுத்தாது. மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்குவதை நமது அரசு உறுதியாக எதிர்க்கிறது. கடந்த மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மேற்குவங்க மாநில சிலிகுரியில் உரையாற்றும்போது, "கொரோனா பரவல் முழுமையாக குறைந்த பிறகு இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

குடியுரிமை திருத்தச் சட்டம்
குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இதுவரை அது அமல்படுத்தப்படவில்லை. இந்த சட்டத்தின்படி கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசத்தை சேர்ந்த இந்து, சீக்கியர்கள், பௌத்த மதத்தினர், ஜைனர்கள், பார்சிக்கள், கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்கலாம்.

எதிர்ப்பு ஏன்?
இந்த சட்டத்தில் இஸ்லாமியர்கள் இல்லை எனவும், இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கான அம்சங்கள் இடம்பெறவில்லை எனவும் கூறி போராட்டங்கள் நாடு முழுவதும் வெடித்தன. குறிப்பாக சிஏஏ, என்.ஆர்.சி., என்.பி.ஆர். நடைமுறைகளால் இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியர்களின் குடியுரிமை பறிபோகும் அபாயம் இருப்பதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.












Click it and Unblock the Notifications