குஷியோ குஷி.. சென்னை - சிங்கப்பூர் இடையே சொகுசு கப்பல்.. விசாகப்பட்டினம் வழியாக விரைவில் சேவை
சென்னை: சென்னை - இலங்கை இடையே சொகுசு கப்பல் சேவை இயக்கப்பட்டு வரும் நிலையில், அதேபோல் சென்னை - சிங்கப்பூர் இடையே சொகுசுக் கப்பல் சேவை தொடங்கப்பட இருக்கிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சென்னை - இலங்கை இடையே கொர்டெல்லா என்ற சொகுசுக் கப்பல் சேவை தொடங்கப்பட்டது. பலரும் அதில் பயணித்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்து வந்தன. ஹனிமூன் செல்லும் புதுமண தம்பதிகள் தொடங்கி யூடியூபர்கள் வரை பலரும் போட்டிப்போட்டுக்கொண்டு அந்த சொகுசுக் கப்பலில் பயணித்து வீடியோக்களை வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் கடல் வழி பயண விரும்பிகளுக்கு மேலும் குட் நியூஸ் வந்து உள்ளது.

அதுதான் சென்னை - சிங்கப்பூர் இடையிலான சொகுசு கப்பல் சேவை. பிரபல கப்பல் நிறுவனமான லிட்டோரல் க்ரூசஸ்தான் இந்த கப்பல் சேவையை தொடங்க இருக்கிறது. சென்னை - சிங்கப்பூர் இடையேயான இந்த கப்பல் சேவை, 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஆந்திர மாநில கடலோர நகரமான விசாகப்பட்டினம் வழியாக இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. விசாகப்பட்டினம் துறைமுகத்தில் சர்வதேச கப்பல் போக்குவரத்து முனையம் அமைக்கப்பட்டு வந்த நிலையில் அண்மையில் அது திறப்பு விழா கண்டது.
கடந்த செப்டம்பர் மாதம் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் இந்த கப்பல் முனையத்தை திறந்து வைத்தார். இந்த நிலையில் அந்த முனையத்தின் வழியாக சென்னை - சிங்கப்பூர் இடையிலான சொகுசு கப்பல் சேவை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக லிட்டோரல் க்ரூசஸ் கப்பல் நிறுவனத்தின் புரோமோட்டர் ராஜா வைஸ், தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தின் டிராபிக் மேலாளர் பிராபகர் இடையே மும்பையில் நடைபெற்ற உலகளாவிய கடல்சார் இந்திய உச்சி மாநாட்டில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுகுறித்து, லிட்டோரல் க்ரூசஸ் கப்பல் நிறுவனத்தின் புரோமோட்டர் ராஜா வைஸ் தெரிவிக்கையில், "ஆந்திர பிரதேச சுற்றுலா துறை அமைச்சர் ரோஜாவிடம் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவர்கள் சென்னையை உள்நாட்டு துறைமுகமாக கொண்டு இரண்டு சொகுசு கப்பல்களை இயக்குவதற்கு திட்டமிட்டு உள்ளனர். இந்த கடல் வழி சுற்றுலாவில் கண்களுக்கு குளிர்ச்சியூட்டும் கடல் மற்றும் பள்ளத்தாக்கு பகுதிகள், புத்தமத தலங்களை காண முடியும்." என்றார்.
உலகளாவிய கடல்சார் இந்திய உச்சி மாநாட்டில் இந்தியா - மாலத்தீவுகள் - இலங்கை இடையே சொகுசு கப்பல் சேவை தொடங்குவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ரூ.1,200 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளார். இந்த திட்டப் பணிகள் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட உள்ளன. இதன் மூலம் இந்தியாவில் 3,000 கடல் சார்ந்த வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications