செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமாருக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸை எதிர்த்த வழக்கு இன்று விசாரணை!
சென்னை: அமலாக்கத்துறையின் லுக் அவுட் நோட்டீஸை எதிர்த்து திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தாக்கல் செய்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
அரசு வேலைக்கு பணம் பெற்றதாக கூறி திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு, செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார் உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில், அசோக் குமாருக்கு எதிராக அமலாக்கத் துறை, கடந்த ஆண்டு லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது. இந்த லுக்-அவுட் நோட்டீஸை திரும்பப் பெற அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக்கோரி அசோக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அசோக்குமாரின் மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர். இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இதற்கிடையே, தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக கூறப்படும் வழக்கில் செந்தில் பாலாஜி, அசோக்குமார் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராக சம்மன் வழங்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் பேரவைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரவிருப்பதாகவும், அப்போது ஆளுங்கட்சிக்கு எதிராக செயல்பட்டால் ரூ.35 கோடி வரை பணம் கொடுப்பதாக தன்னிடம் திமுகவினர் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகவும் ஊத்தங்கரை தவெகஎம்எல்ஏ இளையராஜா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
தவெக எம்எல்ஏ-விடம் கோடிக்கணக்கில் பணம் தருவதாக ஆசை காட்டி குதிரை பேரம் நடத்தியதாகப் பதியப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமாருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இருவரும் வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில், நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் திருவல்லிக்கேணி போலீசார் லுக் அவுட் நோட்டீஸையும் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
