Vairamuthu: பூ உடம்பு மறையலாம்; புகழ் உடம்பு மறையாது! சௌகார் ஜானகி மறைவுக்கு வைரமுத்து இரங்கல்
சென்னை: மறைந்த பழம் பெரும் நடிகை சௌகார் ஜானகியின் மறைவுக்கு கவிப்பேரரசு வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். பதிர் பருவம் முதல் உதிர் பருவம் வரை நகர்ந்து கொண்டே சென்ற நட்சத்திரம் என குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

செளகார் ஜானகி
கலைப் பெண்களில்
பெருமைக்குரிய பெருமாட்டி
பதின்பருவம் முதல்
உதிர்பருவம் வரை
நகர்ந்துகொண்டே இருந்த
நட்சத்திரம்
400 படங்கள் என்பது
இனிவரும் தலைமுறைக்கு
வாய்க்காத வரலாறு
பெண்ணினத்தின்
காத்திரமான
பாத்திரங்கள் அனைத்தையும்
நடித்துக் காட்டிய நாயகி
'இரு கோடுகள், புதிய பறவை
படிக்காத மேதை, எதிர் நீச்சல்
பாக்கியலட்சுமி, ஒளிவிளக்கு
பெற்றால்தான் பிள்ளையா' இப்படி
எம்.ஜி.ஆர் - சிவாஜி - ஜெமினி
என்ற முப்பெரும் கலைஞர்களுக்கும்
ஈடுகொடுத்த ஒப்பிலா நடிகை
ரங்கராட்டினம் என்ற
ஒருபடத்தில் தவிர
அவர் எந்தப் படத்திலும்
கவர்ச்சி காட்டியதில்லை
உடலைவிட
உடல்மொழியை நம்பினார்
ஆங்கிலத்தைத்
தாய்மொழிபோல் பேசும்
சில நடிகைகளுள்
தலைசிறந்தவர் செளகார் ஜானகி
பத்மபூஷணுக்கே உரிய
பத்மஸ்ரீ அவர்
ஆந்திரா இந்தியாவிற்குக்
கொடுத்த கொடை முடிந்துவிட்டது
அவர்
பூ உடம்பு மறையலாம்;
புகழ் உடம்பு மறையாது
அவருக்கு என் அஞ்சலி;
கலையன்பர்களுக்கும்
குடும்பத்தார்க்கும்
ஆழ்ந்த இரங்கல்
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகிக்கு கடந்த சில தினங்களாக உடல்நலை பாதிப்பு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்க போதிலும் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பகல் 1 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 94.
சௌகார் ஜானகியின் மறைவுக்கு முதல்வர் விஜய், கமல்ஹாசன் எம்பி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
விஜய் இரங்கலில், "பழம்பெரும் திரைப்பட நடிகையும், தனது தனித்துவமான நடிப்பால் பல தலைமுறை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவருமான திருமதி சௌகார் ஜானகி அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
திரைத்துறையில் 70 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்து, எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டிய அவரது கலைப்பணி என்றும் போற்றத்தக்கது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல்வேறு மொழிப் படங்களில் நடித்து சாதனை படைத்துள்ளதோடு, பத்மஸ்ரீ விருது, கலைமாமணி விருது, நந்தி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள திருமதி சௌகார் ஜானகி அவர்களின் மறைவு திரையுலகத்திற்கு பேரிழப்பாகும்.
திருமதி சௌகார் ஜானகி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைத்துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடிகளில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்." இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அது போல் கமல்ஹாசன், "'பார்த்தால் பசி தீரும்' படம் தொடங்கி நாற்பதாண்டுக் காலப்பரப்பில் பல படங்கள் இணைந்து பணியாற்றியுள்ளோம். அவர் அம்மா, நான் பிள்ளை. தென்னிந்தியத் திரையின் தவிர்க்கவியலாத நடிப்புக் கலைஞர் சௌகார் ஜானகி.
அன்றைய கதாநாயகர்கள் அத்தனை பேரோடும் நடித்தவர். என் ஆசிரியர் கே.பாலசந்தரின் விருப்பத் தேர்வாக இருந்தவர். மறைந்துவிட்டார். அன்னை பிம்பம் ஒன்று விடைபெற்றது. கண்ணீரோடு வழியனுப்புகிறேன்." இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
