விவகாரத்து வழக்கை வாபஸ் செய்கிறேன்.. சங்கீதா சொன்னதும்.. விஜய் தரப்பு கோர்ட்டில் சொன்னது என்ன?
சென்னை: தமிழக அரசியலிலும் திரை உலகிலும் கடந்த சில மாதங்களாக மிகப்பெரிய விவாதப் பொருளாக இருந்து வந்த முதல்வர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து விவகாரத்தில் தற்போது மிக முக்கியமான திருப்பம் ஏற்பட்டுள்ளது.
முதல்வர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி தாக்கல் செய்த மனுவை சங்கீதா அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, இந்த வழக்கை முற்றிலும் முடித்து வைப்பதாக செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம் அறிவித்துள்ளது.

காணொலி விசாரணையில் நிகழ்ந்த அதிரடி மாற்றம்
செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரான சங்கீதா லண்டனில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக நீதிபதி முன்பாக நேரில் ஆஜரானார். அவருடன் வழக்கறிஞர் ஒருவரும் ஆஜரானார். அப்போது, தான் தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை திரும்பப் பெற்றுக்கொள்வதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
தனது குடும்பச் சூழல், எதிர்கால நலன் மற்றும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளதாகச் சங்கீதா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காணொலி வாயிலாக சங்கீதாவின் வாக்குமூலத்தைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுவை வாபஸ் பெறுவதற்கான நடைமுறைகளை முன்னெடுத்தார்.
விஜய் தரப்பு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை
சங்கீதா தனது விவாகரத்து மனுவை வாபஸ் பெறுவதாக அறிவித்த நிலையைத் தொடர்ந்து, முதல்வர் விஜய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களிடம் நீதிபதி கருத்து கேட்டார். அதற்குப் பதிலளித்த விஜய் தரப்பு வழக்கறிஞர்கள், மனுதாரர் தனது விவாகரத்து கோரிக்கையைத் திரும்பப் பெற்றுக்கொள்வதில் எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை. மனுவை வாபஸ் பெறுவதை நாங்கள் முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.
இரு தரப்பிலும் மனுவை திரும்பப் பெறுவதில் எந்த முரண்பாடும் இல்லாததைத் தொடர்ந்து, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்ற நீதிபதி, சங்கீதா தாக்கல் செய்திருந்த விவாகரத்து வழக்கினை அதிகாரப்பூர்வமாக முடித்து வைத்து உத்தரவிட்டார்.
மீண்டும் இணைய வாய்ப்பு: ஆதரவாளர்கள் மகிழ்ச்சி
கடந்த சில மாதங்களாகவே இருவருக்கும் இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் முயற்சிகள் காரணமாக இந்த சமரசம் எட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. விவாகரத்து மனு வாபஸ் பெறப்பட்டுள்ளதால், விஜய் - சங்கீதா தம்பதியினர் மீண்டும் இணைந்து வாழப் போகிறார்கள் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த 1999-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெற்றோர் சம்மதத்துடன் திருமண பந்தத்தில் இணைந்த இந்த தம்பதியினருக்கு ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா ஆகிய இரு பிள்ளைகள் உள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் சங்கீதா தாக்கல் செய்த மனுவால் எழுந்த பல்வேறு சர்ச்சைகளுக்கும், ஊகங்களுக்கும் தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு, விஜய்யின் ஆதரவாளர்கள், தமிழக வெற்றித்துக் கழகத் தொண்டர்கள் மற்றும் திரை உலக ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில், இந்த வழக்கு சுமுகமாக முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து, அரசியல் களத்திலும் இந்த செய்தி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications
