வால்பாறை போறீங்களா.. இந்த 20 இடங்கள் பக்கம் போயிடாதீங்க.. கோவை கலெக்டர் எச்சரிக்கை
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் குறிப்பிட்ட 20 இடங்களில் குளிக்கவோ, செல்பி எடுக்கவோ கூடாது, மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாட்ட ஆட்சியர் கிராந்தி குமார் எச்சரித்துள்ளார்.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே சுங்கம் என்ற பகுதியில் உள்ள சோலையார் ஆற்றில் குளிக்கும் போது தண்ணீரில் மூழ்கி 5 கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். வெளியூரில் இருந்து சுற்றுலா வந்த மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் கோவை மாவட்ட ஆடசியர் கிராந்தி குமார் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை மற்றும் அதை சுற்றியுள்ள ஆபத்தான ஆறு மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் பொதுமக்கள் செல்பி (Selfie) எடுப்பது மற்றும் குளிப்பது போன்றவற்றை தவிர்த்திட வேண்டும்.
கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறைக்கு சுற்றுலா சென்ற 5 கல்லூரி மாணவர்கள் கடந்த 20.10.2023 அன்று ஆற்றில் மூழ்கி இறந்துவிட்டனர். எனவே, ஆபத்தான ஆறு மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் குளிப்பது, புகைப்படங்கள் மற்றும் சுபடங்கள் (Selfie) எடுப்பதை குழந்தைகள் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் முற்றிலும் தவிர்த்திட வேண்டும். சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அஜாக்கிரதையாக இருப்பதினால், பல நேரங்களில் நீர்நிலைகளில் அடித்து சென்று உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பாக அமைந்துவிடுகிறது

இதுகுறித்து பொதுமக்களுக்கு வனத்துறை மற்றும் வால்பாறை நகராட்சி மூலம் வால்பாறை அதை சுற்றியுள்ள ஆபத்தான ஆறு மற்றும் நீர்நிலைகளான நீர்வீழ்ச்சி எஸ்டேட் நதி, கருமலை எரச்சை பாறை, கூலங்கல் ஆறு, சோலையர் வளைவு, ஸ்டான்மோர் நதி, கெஜமுடியில் கூடுதோரை, வெள்ளைமலை சுரங்கப்பாதை, கெஜமுடி சுரங்கப்பாதை, சக்தி எஸ்டேட் தங்கவேல் ஆறு, தாளனாரி நீர்வீழ்ச்சி, காதம்பரை அணை, மேல் ஆழியாறு அணை, காதம்பரை 501 சுரங்கப்பாதை, சந்தன அணை, சோலையார் அணை, முன்பக்க ஆறு, சின்னக்கல்லார் நல்லமுடி, பூஞ்சோலை பள்ளத்தாக்கு, வாட்டர் பால்ஸ் எஸ்டேட்டில் புலி பள்ளத்தாக்கு, அனலி நீர்வீழ்ச்சி, மனோம்பள்ளியில் தங்கவேல் ஆறு ஆகிய 20 இடங்களில் அபாய எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த இடங்களுக்கு அருகில் செல்ல வேண்டாம் எனவும், இந்த ஆற்றுப்பகுதி மிகவும் ஆழமானதாகவும், ஆபத்தானதாகவும் மற்றும் சுழல்கள் நிறைந்த பகுதியாக உள்ளதால் இப்பகுதியில் சென்று குளிக்கவோ, புகைப்படம் எடுக்கவோ அனுமதி இல்லை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ள நல்லகாத்து ஆறு மற்றும் கூழாங்கல் ஆறு ஆகிய இடங்களை நேற்று மாநில வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி நேரில் பார்வையிட்டார். மேலும், வால்பாறை வட்டம் சுற்றுலா இடமாக விளங்கும். நல்லகாத்து ஆறு மற்றும் கூழாங்கல் ஆறு ஆகியவற்றில் ஏற்படும் ஆபத்துகளை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துச்சாமி காவல்துறை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை வருவாய் துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்" இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications