தென்னிந்தியாவில் எங்குமே இல்லாத 'ஜில்' கிளைமேட்.. ஊட்டி மற்றும் கொடைக்கானலில் மட்டும் இருப்பது ஏன்?
கொடைக்கானல் : தென்னிந்தியாவின் எந்த மலைவாசல் தளங்களிலும் இல்லாத மிகவும் குளிர்ந்த கிளைமேட் ஊட்டி மற்றும் கொடைக்கானலில் மட்டும் இருப்பது ஏன் தெரியுமா? நீங்கள் கூகுளில் ஊட்டி அல்லது கொடைக்கானலை அடித்து வானிலை இன்று என்ன என்று பார்த்தால் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருக்கும்.. அதிகபட்சம் 23 அல்லது 24 டிகிரியாகவும், குறைந்த பட்சம் 12 அல்லது 13 ஆகவும் இருக்கும்.
தமிழ்நாட்டில் சமவெளியாக உள்ள எல்லா ஊர்களிலும் வெயில் கடுமையாக உள்ளது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை பாரபட்சமே இல்லாமல் வெயில் கொளுத்துகிறது. மரங்களும், காடுகளும் அதிகம் உள்ள பகுதி மக்கள் வெயிலில் இருந்து தப்பிக்க அங்கு சென்றுவிட முடியும். ஆனால் சென்னை போன்ற கான்ங்ரீட் காடுகளில் வாழும் மக்கள் வெயிலில் இருந்து தப்பிக்க எந்த வழியும் இல்லை.. வீடுகளுக்கு உள்ளேயே ஏசியை போட்டு முடங்கி கொள்ள வேண்டிய நிலை இருக்கும்.. இல்லாவிட்டால் ஏதாவது ஒரு மாலுக்குள் சென்று அடைந்து கொள்ள வேண்டிய நிலை இருக்கும்..

மற்றபடி இயற்கையை ரசிக்கவோ, காடுகளை ரசிக்கவோ, மலைகளில் நடக்கவோ, அருவிகளில் குளிக்கவோ எந்த வாய்ப்பும் இல்லை.. இன்றைய சூழலில் சென்னையில் உள்ளவர்கள் ஜில் என்ற கிளைமேட்டை பார்க்க வேண்டும் என்றால் ஊட்டி அல்லது கொடைக்கானல் தான் வர வேண்டும். அதற்கு 550 கிமீ தூரம் பயணித்து வர வேண்டும். இதில் எந்த ஊருக்கு வர வேண்டும் என்றாலும் ஒரு நாள் இரவு முழுவதும் பயணிக்க வேண்டும் அல்லது ஒரு பகலை முழுமையாக கடக்க வேண்டியது வரும்..
சரி விஷயத்திற்கு வருவோம். தென்னிந்தியாவில் கோடைவாசல் தளங்கள் நிறையவே உள்ளன. கர்நாடாகவில் கூர்க், கேரளாவில் வயநாடு, மூணாறு, ஆந்திராவில் அரக்கு, தமிழ்நாட்டில் ஊட்டி, கொடைக்கானல், மேகமலை, ஏற்காடு, ஏலகிரி என மலைவாசல் தளங்கள் இருந்தாலும், ஊட்டி மற்றும் கொடைக்கானலில் மட்டுமே வானிலை அதிகபட்சம் 23 டிகிரி செல்சியஸ் என்கிற அளவில் இருக்கிறது. குறைந்த பட்சம் 12 டிகிரி செல்சியஸ் என்கிற அளவில் உள்ளது.
கொடைக்கானல், ஊட்டியை விட்டுத்தள்ளுங்க.. இங்கு வாழ்வது மட்டுமல்ல.. பயணிப்பதே இனிமையானது தான்!
இதற்கு அடுத்தபடியாக மூணாறுவில் 27 டிகிரி செல்சியஸ் அதிகபட்சமாகவும், 17 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்சமாகவும் இன்றைக்கு இருக்கிறது. இதேபோல் மேகமலை, ஏற்காடு, ஏலகிரி, வயநாடு என மற்ற எல்லா ஊர்களிலும் 32 டிகிரி அளவிற்கு வெப்பநிலை அதிகபட்சமாக இருக்கிறது. மரங்கள் காடுகள் அருவிகள் இருந்தாலும் வெயில், ஊட்டி மற்றும் கொடைக்கானலை விட மற்ற பகுதிகளில் அதிகமாகவே இருக்கிறது.
ஊட்டி மற்றும் கொடைக்கானலில் வெயில் குறைவாக இருக்க என்ன காரணம்: இரண்டு ஊர்களிலும் வெயில் குறைவாக இருக்க முக்கிய காரணம் அதன் உயரம் தான்.. கடல் மட்டத்தில் இருந்து இரண்டுமே மிக உயரமான இடத்தில் இருக்கின்றன.. ஊட்டியை பொறுத்தவரை கடல் மட்டத்தில் இருந்து 2,240 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. அதாவது நீலகிரி மாவட்டம் ஊட்டி 7,350 அடி உயரத்தில் இருக்கிறது.. கொடைக்கானலை பொறுத்தவரை 2,133 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. அதாவது திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் 7200 அடி உயரத்தில் இருக்கிறது.
அதேநேரம் மூணாறு 1,532 மீட்டர் உயரத்திலும், ஏற்காடு 1,515 மீட்டர் உயரத்திலும், ஏலகிரி 1,111 மீட்டர் உயரத்திலும், வயநாடு 700 மீட்டர் தொடங்கி 2100 மீட்டர் வரை உயரத்துடன் இருக்கிறது. ஊட்டியை ஒட்டிய கேரள பகுதிகள் வயநாட்டில் தான் வரும் என்பதால் அங்கும் கிளைமேட் சிறப்பாக இருக்கும்.. கர்நாடகாவின் கூர்க் 1,170 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. உயரம் கூடக்கூட வெப்பம் குறையும் என்பதால் ஊட்டி, மற்றும் கொடைக்கானலில் வெப்ப நிலை குறைவாக உள்ளது. தமிழ்நாட்டில் ஊட்டியில் தான் மிககுறைந்த வெப்பநிலை இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்குமே இருக்கிறது.
குளுகுளு கால நிலையை அனுபவிக்க ஊட்டி, கொடைக்கானல் செல்வோர், தயவு செய்து மலைச்சாலைகளில் பிளாஸ்டிக் பாட்டில்களை வீசாதீர்கள். மதுபாட்டில்களை பலர் குடித்துவிட்டு வீசுவதால் அங்கு வனவிலங்குகளும் காலநிலையும் பாதிக்கப்படுகிறது. அதேபோல் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சமயங்களில் ஏறி செல்லாதீர்கள். அதேபோல் நடுசாலைகளில் வாகனங்களை நிறுத்திவிட்டு போகாதீர்கள்.. அப்படி செய்தால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பலரும் பாதிக்கப்படுவார்கள்.












Click it and Unblock the Notifications