கொடைக்கானல், ஊட்டியை விட்டுத்தள்ளுங்க.. இங்கு வாழ்வது மட்டுமல்ல.. பயணிப்பதே இனிமையானது தான்!
தேனி: இவ்வளவு அழகான மலைச்சாலையை இதற்கு முன்பு பார்த்ததில்லை.. இப்படிப்பட்ட ஊரில் வாழ்வது மட்டுமல்ல.. பயணிப்பதே இனிமையானது தான் என்று கண்டிப்பாக உங்களை பேச வைத்துவிடும். தேனி மாவட்டத்தின் போடி போடிமெட்டு மலைப்பாதையில் மூணாறு அல்லது கொழுக்குமலை பயணித்துள்ளீர்களா? கோடையில் கண்டிப்பாக போக வேண்டிய இடங்கள் ஆகும்.
ஏசி அறையில் குளுகுளுவென அமர்ந்து வேலை செய்வோருக்கு வெயிலின் கஷ்டம் புரியாது. ஆனால் கடுமையான வெயிலில் இருசக்கர வாகனத்தில் அலுவலகம் செல்வோருக்கு நிச்சயம் தெரியும். அதேபோல் சென்னையில் புழுக்கத்தின் அருமை ஏசி வீடுகளில் உள்ளவர்களுக்கு தெரியாது.. அதே நேரம் ஒழுங்காக ஓடாத மின்விசிறியை தினமும் வெறித்து பார்ப்பவர்களுக்கு நிச்சயம் தெரியும். அதேநேரம் மின்சாரம் மற்றும் அரைநாள் இல்லாமல் போனால், மொத்த சென்னைக்கும் இந்த வெயில் எப்படிப்பட்டது என்பது தெரிந்துவிடும்..

சென்னை மட்டுமல்ல, பெங்களூர், கோவை, திருச்சி, சேலம், நெல்லை என எல்லா ஊர்களிலும் வெயில் கடுமையாக உள்ளது. 106 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் மலைபிரதேசங்களுக்கு செல்ல பலரும் விரும்புவார்கள்.. ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, மூணாறு, வாகமன், கூர்க் என பல்வேறு கோடைவாசல் தளங்களுக்கு செல்ல மக்கள் ஆர்வம் காட்டுவார்கள்.
இதில் ஊட்டி, கொடைக்கானலுக்கு அடுத்தபடியாக மூணாறு செல்ல பலருக்கும் விருப்பம் இருக்கும். தமிழ்நாட்டில் இருந்து மூணாறு செல்ல இரண்டு வழிகள் உள்ளன. தேனி மாவட்டம் போடி மெட்டு பாதை வழியாக ஒரு வழியும், உடுமலைப்பேட்டை வழியாக ஒரு வழியும் இருக்கிறது.. இதில் மூணாறு மக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் பிரதான வழியாக தேனி மாவட்டம் போடி மெட்டு பாதை இருக்கிறது.

இந்த பாதையில் 24 மணிநேரம் எளிதாக மூணாறு போக முடியும். சென்னையில் இருந்து திண்டுக்கல் வரையில் நான்கு வழிச்சாலையும், திண்டுக்கல் முதல் தேனி வழியாக மூணாறு வரை மிகத்தரமான மிகவும் அகலமான இருவழிச்சாலையும் இருக்கிறது. புதுப்பிக்கப்பட்ட போடிமெட்டு மூணாறு சாலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
போடியின் எல்லையான முந்தலில் தொடங்கும் இந்த பாதை ஏறும் போது கடும் வெயிலை கடக்க வேண்டியதிருக்கும்.. மேலே செல்ல செல்ல, மெய்சிலிர்க்க வைக்கும் அளவிற்கு இயற்கை வரவேற்கும்.. போடிமெட்டுவை நெருங்கும் போது எல்லாம், நீங்கள் இந்த பிறவி பயனையே அடைந்துவிடுவீர்கள்.. தேனி மாவட்டத்தின் மொத்த அழகும் போடி மெட்டில் இருந்து அற்புதமாக தெரியும்..

அதன்பிறகு நீங்கள் கேரளாவிற்குள் நுழையும் போது, முற்றிலும் வித்தியமான கிளைமேட்டிற்குள் போய்விடுவீர்கள். போடி மெட்டு மூணாறு பாதையின் அழகும், வழிநெடுகிலும் உள்ள தேயிலை தோட்டங்களும் உங்களை வசப்படுத்திவிடும்.. போடி மெட்டு முதல் பூப்பாறை வரை 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்படியே கீழ்நோக்கி செல்லும் பாதை, அதன்பிறகு மீண்டும் பூப்பாறையில் இருந்து மூணாறு வரை மேல்நோக்கி செல்லும். மலையில் இவ்வளவு அழகான பாதையை போட முடியுமா என்று அதை பார்த்து நிச்சயம் மிரண்டு போவீர்கள்..
மூணாறு போகிறவர்கள் நேராக சென்றால் மூணாறு போகலாம்.. இல்லை நான் கொச்சி போக வேண்டும் என்றால், பூப்பாறை வழியாக அடிமாலி சென்று அதன்வழியாக கொச்சி போகலாம். அந்த பாதையும் அற்புதமாக இருக்கும். இல்லைப்பா.. நான் கொழுக்குமலை போக வேண்டும் என்று விரும்புறீங்களா... போடிமெட்டில் இருந்து நேராக சூரியா நெல்லி போக வேண்டும். அங்கிருந்து ஜீப் மூலம் கொழுக்குமலை டீ எஸ்டேட் போகலாம். இது தமிழகத்தின் பகுதியாகும். இங்கு அதிகாலை சூரிய உதயத்தை மேகங்களுக்கு நடுவே பார்ப்பது சிறப்பான அனுபவமாக இருக்கும். போய் பார்த்துவிட்டு சொல்லுங்கள்..












Click it and Unblock the Notifications