கொடைக்கானல் வர இ-பாஸ்.. ஒரு நாளில் மொத்தமே இவ்வளவு தானா.. 2 முக்கியமான விஷயங்கள்
கொடைக்கானல்: கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு ஒரே நாளில் 16 ஆயிரம் வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில், இன்று மட்டும் வருவதற்கு 3 ஆயிரத்து 792 வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டு உள்ளது.
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானல் சர்வதேச அளவில் புகழ் பெற்ற கோடைவாசல் தலமாகும். இங்கு ஆண்டு முழுவதும் குளுகுளு கால நிலை நிலவும். வெயில் காலமான ஏப்ரல் மே மாதங்களிலும், மற்ற ஊர்களை ஒப்பிடும் போது, அற்புதமாக இருக்கும்.

வெயிலின் தாக்கம் குறைவு, நல்ல மழை பெய்திருப்பதால், ஆறுகள் மற்றும் அருவிகளில் தண்ணீர், வழிஎல்லாம் அடர்ந்த மரங்கள், பசுமை போர்த்திய புல்வெளிகள், திரும்பிய பக்கம் எல்லாம் ஆக்ஸிஜனை அள்ளி வழங்கும் காடுகள், படகு சவாரி, பூங்கா, ரம்மியமான மலை முகடுகள் என பலருக்கும் பிடித்த இடங்கள் கொடைக்கானலில் இருக்கின்றன.
இதன் காரணமாக ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். குறிப்பாக கோடைகாலங்களில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். வார இறுதி நாட்களாக வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இதன் காரணமாக பல கிலோ மீட்டர் துரத்திற்கு நெரிசலும் ஏற்படுகிறது.
கொடைக்கானலை பொறுத்தவரை பார்க்கிங் பெரிய பிரச்சனையாக உள்ளது. சுற்றி பார்க்கும் இடங்களில் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவதால் சிக்கல் ஏற்படுகிறது. இந்நிலையில் ஏராளமான பயணிகள் வந்து செல்லும் நிலையில், அவர்களுக்கு தேவையான வசதிகளை அளிக்கும் நோக்கத்தில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, கொடைக்கானலுக்கு வரும் வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட வாகனங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 30.06.2024 வரை இ-பாஸ் பெற்று வர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி கொடைக்கானலுக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் 'epass.tnega.org' என்ற இணையதளத்தின் மூலம் நேற்று முதல் இ-பாஸ் வழங்கப்படுகிறது. முதல் நாளான நேற்று இரவு 8 மணி வரை 15 ஆயிரத்து 945 வாகனங்கள் வெவ்வேறு தேதிகளில் கொடைக்கானலுக்கு வருவதற்காக விண்ணப்பிக்கப்பட்டிருக்கிறது.
அந்த வாகனங்கள் அனைத்துக்கும் இ-பாஸ் வழங்கப்பட்டது. இதன் மூலம் 3 லட்சத்து 61 ஆயிரத்து 919 பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தர உள்ளனர். இதில் கொடைக்கானலுக்கு இன்று மட்டும் வருவதற்கு 3 ஆயிரத்து 792 வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது. அதன்மூலம் 28 ஆயிரத்து 168 சுற்றுலா பயணிகள் வருகை தர இருக்கிறார்கள்.
இதனிடையே கொடைக்கானலுக்கு சொந்த வாகனங்களில் வருபவர்களுக்கு மட்டும் தான் இபாஸ் வழங்கப்படுகிறது. மற்ற அரசு பேருந்துகளில் வருவோருக்கு எந்த தடையும். அரசு பேருந்துகளில் வருவோர், திண்டுக்கல், மற்றும் வத்தலக்குண்டுவில் இருந்து பேருந்து மூலம் கொடைக்கானல் வரலாம்.
கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் 150 ரூபாய் கட்டணம் செலுத்தி முக்கிய சுற்றுலா தலங்களான மோயர் சதுக்கம், பைன் மரக்காடுகள், குணா குகை, தூண் பாறை, அப்பர் லேக் வியூ, சைலன்ட் வேலி உள்ளிட்ட 12 சுற்றுலாத் தலங்களை ரசிக்கலாம்.. சிறுவர்களுக்கு வெறும் 75 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. காலையில் 9:00 மணி முதல் கூட்டத்தை பொறுத்து சுற்றுலா தலங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் இயக்கப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications