‘இ-பாஸ்’ முறையால் ஸ்தம்பித்த ஊட்டி, கொடைக்கானல்.. ரத்து செய்யக்கோரி வியாபாரிகள் இன்று கடையடைப்பு
ஊட்டி: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு நேற்று முதல் கட்டுப்பாடு அமலுக்கு வந்தது. இதனால் இ பாஸ் உள்ளதா என்று சோதனை தீவிரப்படுத்தப்பட்டதால் மலைப்பாதையில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருந்தன. இதனிடையே 'இ-பாஸ்' முறையை ரத்து செய்யக்கோரி வியாபாரிகள் இன்று ஊட்டி, கொடைக்கானலில் கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
பொதுவாக ஏப்ரல்,மே ஆகிய 3 மாதங்களில் வெயில் உக்கிரமாக இருக்கும். இந்த மாதங்களில் கோடை விடுமுறையும் தொடங்கிவிடும்.இதன் காரணமாக பலரும் குளுகுளுவென இருக்கும் மலைப்பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்வார்கள்.. தமிழ்நாட்டை பொறுத்தவரை மிகவும் குளுகுளுவென இருக்கும் இரண்டு ஊர் என்றால் அது ஊட்டி, கொடைக்கானல் தான்..

பொதுவாகவே இந்த இரண்டு ஊர்களுக்கும் மக்கள் அதிகஅளவில் வருவார்கள்.. சுற்றுலா பயணிகள் சொர்க்க பூமியாக திகழ்கின்றன. கோடைகாலத்தை பொறுத்தவரை சுற்றுலா பயணிகள் அதிக அளவில் ஊட்டி, கொடைக்கானல் வருவார்கள். இதன் காரணமாக கோடை விடுமுறை தான் ஊட்டி, கொடைக்கானலில் வாழும் மக்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கிறது.
இபாஸ் நடைமுறை
அதேநேரம் கோடை விடுமுறை சீசனில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும் என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும் வழக்கமான ஒன்று. இந்நிலையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், நீலகிரிக்கு சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, கடந்த ஆண்டு மே மாதம் 7-ந்தேதி முதல் நீலகிரிக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறை அமலில் கொண்டுவரப்பட்டது.
நீலகிரிக்கு கட்டுப்பாடு
ஏப்ரல் மாதம் ஆரம்பித்துவிட்டதால், திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வாரநாட்களில் 6 ஆயிரம் சுற்றுலா வாகனங்களும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டது.
கல்லாறு சோதனை சாவடி
இந்த கட்டுப்பாடு ஏப்ரல் 1ம் தேதியான நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி, மேட்டுப்பாளையத்தில் இருந்து கல்லாறு மற்றும் கோத்தகிரி வழியாக ஊட்டி செல்லும் வாகனங்களை இ-பாஸ் பதிவு செய்யப்பட்டு உள்ளதா என அங்குள்ள சோதனை சாவடிகளில் போலீசாரும், வருவாய்த்துறையினரும் சோதனை செய்தபின்னரே அனுமதி அளிக்கிறார்கள். இதேபோல் கேரள, கர்நாடக மாநிலங்களின் எல்லையில் உள்ள கூடலூர் நாடுகாணி, சோலாடி, தாளூர், பாட்டவயல், நம்பியார் குன்னு, கக்கநல்லா ஆகிய சோதனை சாவடிகளிலும் சுற்றுலா வாகனங்கள் சோதனை செய்யப்படுகின்றன.
வாகனங்கள் ஸ்தம்பித்தது
இந்த சோதனையால் ஏராளமான வாகனங்கள் மலைப்பாதையில் முடங்கி நின்றன. இ பாஸ் சோதனைக்கு சரியான அளவில் ஊழியர்களை நியமிக்காதது மற்றும் சோதனை செய்யும் பகுதிகளில் உடனே எடுத்து கொள்ளும் வகையில் கியூஆர் கோடு உடன் இபாஸ் முறையை எளிமையாக்காதது போன்ற காரணங்களால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
வாகன ஓட்டிகள் அவதி
இ-பாஸ் பதிவு செய்யாமல் வந்த சுற்றுலா பயணிகளின் வாகனங்களை, ஊட்டிக்கு செல்ல போலீசார் அனுமதி மறுத்த காரணத்தால் வாகன போக்குவரத்து முடங்கியது. மலைப்பகுதி என்பதால் ஊட்டியை ஒட்டியுள்ள மாநில எல்லைகளில் இணையதள சேவை சரிவர கிடைக்கவில்லை.. இதனால் சுற்றுலா பயணிகள் இபாஸ் எடுக்க முடியாமல் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.
கொடைக்கானல்
இதேபோல் கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கும் நேற்று முதல் கட்டுப்பாடு அமலுக்கு வந்தது. அதன்படி நேற்று முதல் வருகிற 30.6.2025 வரை தினமும் 4 ஆயிரம் வாகனங்களும், வார இறுதி நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களும் கொடைக்கானலுக்குள் வருவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
வத்தலக்குண்டு
கொடைக்கானலுக்கு செல்லும் வாகனங்கள் இ-பாஸ் சோதனைக்கு பின்னரே நேற்று அனுமதிக்கப்பட்டன. வத்தலக்குண்டு வழியாக கொடைக்கானலுக்கு சென்ற வாகனங்களுக்கு மலை ஏறுவதற்கு முன்பு உள்ள காமக்காப்பட்டி சோதனைச்சாவடியில் இ-பாஸ் சோதனை நடத்தப்பட்டது.
பழனி
பழனி வழியாக கொடைக்கானலுக்கு வந்த வாகனங்களும் மலை ஏறுவதற்கு முன்பே அய்யம்புள்ளி சோதனைச்சாவடியிலும் இ-பாஸ் சோதனை செய்யப்பட்டது. இ-பாஸ் பெற்ற வாகனங்கள் மட்டுமே மலையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இந்த இ-பாஸ் சோதனை காரணமாக சோதனைச்சாவடிகளில் நீண்டவரிசையில் வாகனங்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப்பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.
நீலகிரியில் கடையடைப்பு
இதற்கிடையே தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணை தலைவர் ஏ.ஜே.தாமஸ், மாநில இணை செயலாளர் அப்துல் ரசாக், மாவட்ட கூடுதல் செயலாளர் பாதுஷா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் . அப்போது அவர்கள் கூறும் போது, நீலகிரி மாவட்டத்துக்கு வாகனங்களில் வர இ-பாஸ் நடைமுறை அமலில் உள்ளது.
வேலை நிறுத்தம்
இந்த நடைமுறையை முழுமையாக ரத்துசெய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 24 மணி நேர கடையடைப்பு உள்பட பொது வேலைநிறுத்தம் இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது.
மேல்முறையீடு
நீலகிரி மாவட்டத்தில் கடைகள், ஓட்டல்கள் உள்பட அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்படுகிறது. அதோடு ஆட்டோ, ஜீப், கார், வேன் உள்பட சுற்றுலா வாகனங்கள் ஓடாது. இதனால் நீலகிரிக்கு வருவதை சுற்றுலா பயணிகள் தவிர்க்க வேண்டும். மேலும் இ-பாஸ் நடைமுறைக்கு எதிராக 15 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என நீலகிரி மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. இதேபோல் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பிலும் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று கூறினார்கள்.
மக்கள் கவலை
உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தும் விதத்தில் ஏதாவது குளறுபடி ஏற்பட்டு, அதனால் மக்கள் வராமல் போய்விடுவார்களோ என்ற அச்சத்தில் கொடைக்கானல் மற்றும் நீலகிரி மாவட்ட மக்கள் இருக்கிறார்கள்.. ஏனெனில் கடந்த ஆண்டு இ பாஸ் முறை அமல்படுத்தப்பட்டதால் பலரும் கோடை சீசனில் வரவில்லை..நன்றாக வந்து கொண்டிருந்த மக்கள், இபாஸ் திட்டத்தால் வராமல் போய்விட்டார்கள். அதேபோல் இபாஸ் குறித்து தவறான தகவல்கள் பரவியதாலும் பலரும் வரவில்லை.. அப்படியான நிலை இப்போது வரக்கூடாது என்று மக்கள் நினைக்கிறார்கள்.
கொடைக்கானல் பார்க்கிங்
பொதுவாக நீலகிரி மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தங்கும் விடுதி வசதிகளை தாண்டி, பார்க்கிங் என்பது பெரிய பிரச்சனையாக உள்ளது. ஒரே நேரத்தில் பல ஆயிரம் வாகனங்கள் வந்தால் நிறுத்த வசதிக இருப்பது இல்லை. குறிப்பாக கொடைக்கானலில் பார்க்கிங் வசதி போதிய அள கிடையாது. ஏரியை சுற்றியைத்தான் வாகனங்கள் நிறுத்தப்படும். இதனால் வாகன நெரிசல் ஏற்படுவது வழக்கம்.
கொடைக்கானல் பஸ் ஸ்டாண்ட்
இதனால் வாகன நெரிசலை தவிர்க்க கொடைக்கானல் பஸ் நிலையம் அருகில் 1 ஏக்கர் பரப்பளவில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த தற்காலிக பேருந்து நிலையம் அமலுக்கு வந்த உடன் ஓரளவு தீரும் என தெரிகிறது. இதுதவிர கொடைக்கானலில் அப்சர்வேட்டரி, ரோஸ் கார்டன், பிரையண்ட் பூங்கா சாலை ஆகிய பகுதிகளில் வாகனம் நிறுத்துமிடங்களும், சில காலி இடங்களில் தற்காலிக வாகன நிறுத்தமும் அமைக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications