அதிரப்பள்ளி அருவியில் சாவையே வென்ற யானை.. வால்பாறை அருகே 2 மணி நேரம்.. மெய்சிலிர்க்க வைத்த காட்சி
கோவை: கடந்த 3 நாட்களாக தமிழக-கேரள எல்லைப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் இந்தியாவின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் வால்பாறை-சாலக்குடி சாலையில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் காட்டாற்று வெள்ளத்தில் காட்டுயானை அடித்து செல்லப்பட்டது. அது 2 மணி நேரம் போராடி நீந்தி கரைக்கு வந்து உயிர் தப்பியது. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
இந்த முறை தென்மேற்கு பருவ மழை நன்றாக பெய்துள்ளது.இதனால் கேரளா, கர்நாடகா மற்றும் கேரள எல்லையில் உள்ள தமிழக மாவட்டங்களில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேனி, திருப்பூர்,கோவை, நீலகிரி, தென்காசி போன்ற கேரள எல்லையில் உள்ள மாவட்டங்களில் நல்ல மழை பெய்து ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அணை, ஆறு, குளம், குட்டை, நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

அதன்படி கடந்த 3 நாட்களாக தமிழக-கேரள எல்லைப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், வால்பாறை-சாலக்குடி சாலையில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு வந்து அதனை கண்டு ரசித்து செல்கிறார்கள்.
அதிரப்பள்ளி அருவி
அதேநேரம் நீர்வரத்து பகுதியான வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் கனமழை காரணமாக மூடப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனால் வால்பாறைக்கு வந்தவர்களும் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி பகுதிக்கு செல்கிறார்கள். ஆனால் தொடர் மழை காரணமாக அதிரப்பள்ளியில் உள்ள ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து கரைபுரண்டு ஓடி வருகிறது.
கடந்த இரண்டு நாள் முன்பு அதிரப்பள்ளி அருகே உள்ள காலடி பிளாண்டேசன் பகுதியில் இருந்து ஆற்றை கடந்து பிள்ளைப்பாறை வனப்பகுதிக்கு செல்ல ஒரு காட்டுயானை முயற்சி செய்தது. அப்போது ஆற்றில் காட்டாற்று வெள்ளம் சென்றது. அதையும் பொருட்படுத்தாமல் காட்டுயானை ஆற்றை கடந்து அக்கரையில் உள்ள வனப்பகுதிக்கு செல்ல முயற்சி மேற்கொண்டது.
வெள்ளம்
ஆனால் யானை ஆற்றின் நடுப்பகுதியில் சென்றபோது வெள்ளம் அதிகமாக இருந்ததால் காட்டுயானை திடீரென கால்தவறி விழுந்துவிட்டது. இதனால் ஆற்று வெள்ளத்தில் காட்டுயானை மூழ்கி அடித்து செல்லப்பட்டது. ஆனால் காட்டு வெள்ளத்தை பொருட்படுத்தாமல் மெல்ல எழுந்த காட்டுயானை நீரோட்டத்திற்கு எதிராக நீந்தி கரைக்கு வர கடுமையாக போராடிக் கொண்டிருந்தது.
2 மணி நேர போராட்டம்
சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு காட்டுயானை நீந்தி அக்கரைக்கு சென்று உயிர் தப்பியது. தொடர்ந்து அங்குள்ள பிள்ளைப்பாறை வனப்பகுதிக்குள் சென்றது. இதற்கிடையே தகவல் அறிந்த கேரள வனத்துறையினர் அங்கு வந்து ஆற்று வெள்ளத்தில் சிக்கிய காட்டுயானையை மீட்க வந்தநிலையில், காட்டுயானையே நீந்தி கரைக்கு போய்விட்டது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோ செய்தியில் இணைக்கப்பட்டுள்ளது பாருங்கள்.












Click it and Unblock the Notifications