கடவுளே வாழ விரும்பும் பூமியில்.. கற்பனையில் கூட பார்க்க முடியாத அபூர்வ கார்கள்.. மெய்சிலிர்த்த தேனி
தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மலைப்பாதையில் ஜாகுவார், போர்சே உள்ளிட்ட பழமையான கார்களில் வலம் வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், கையில் கேமராக்களுடன் புகைப்படம் எடுத்தும், வீடியோ எடுத்தும் இயற்கையை ரசித்தனர். போர்ச்சுக்கல், பிரான்ஸ், பின்லாந்து, ரஷ்யா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த 52 பேர் தேனி மாவட்டத்திற்கு மிக பழமையான கார்களில் நேற்று முன்தினம் சுற்றுலா வந்தனர்.
தமிழ்நாட்டில் முப்போகம் விளையும் பூமி என்றால் அது தேனி மாவட்டம் தான்.. வற்றாத நதியாம் முல்லை பெரியாறு பாய்ந்தோடுகிறது. முற்றிலும் மலைகளால் சூழப்பட்ட மாவட்டமாக தேனி மாவட்டம் இருக்கிறது. வத்தலக்குண்டு வழியாக வந்தால் மட்டுமே தேனி மாவட்டத்திற்குள் சமவெளியாக இருக்கும். மற்ற பகுதிகள் எல்லாமே மேற்கு தொடர்ச்சி மலைகள் அரணாக அமைந்துள்ளது. கொடைக்கானலுக்கு பிரதான வழியில் செல்ல வேண்டும் என்றால் தேனி மாவட்டத்திற்கு நுழைந்து தான் போக முடியும்.

இதேபோல் கடவுள் தேசமான கேரளாவில் புகழ் பெற்ற சுற்றுலாதலமான மூணாறுக்கும், இடுக்கி மாவட்டத்தி பல்வேறு சுற்றுலா தலங்களுக்கும் செல்ல பிரதான வழி என்றால் அது தேனி வழி தான். தேனியில் இருந்து கூப்பிடும் தூரத்தில் கொடைக்கானலும், மூணாறும் இருக்கிறது. இதுதவிர இயற்கை காதலர்களை சிலிர்க்க வைக்கும் கொழுக்குமலை, வாகமன், தேக்கடி, மேகலை போன்ற சுற்றுலா தலங்ளும் தேனியை ஒட்டித்தான் உள்ளன.
இதேபோல் மலைத்தொடர்களை தாண்டி ஏராளமான அருவிகளும் உள்ளன. கும்பக்கரை அருவி, மேகமலை அருவி, சுருளி அருவி, எலிவால் அருவி, கண்ணாக்கரை அருவி, குரங்கணி அருவி என பல அருவிகள் உள்ளன. இதேபோல் வைகை ஆறு, வராகதி, பாம்பாறு, கொட்டக்குடி ஆறு, சுருளி ஆறு, முல்லை பெரியாறு, மஞ்சளாறு, வரட்டாறு, என தேனி மாவட்டத்தில் ஓடும் ஆறுகளின் எண்ணிக்கையும் மிக அதிகம். வைகை அணை, மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணை, முல்லைபெரியாறு அணை, சண்முகாநதி அணை, ஹைவேவிஸ் அணை என அணைகளும் அதிகம்.

இதேபோல் உலகப்புகழ் பெற்ற சபரிமலை செல்லவும் தேனி, குமுளி தான் பிரதான வழியாகும். தேனி மாவட்டத்தில் கிளைமேட் எப்போதுமே அருமையாக இருக்கும். குறிப்பாக அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய ஐந்து மாதங்கள் தேனி மாவட்டம் சுற்றிப்பார்க்க மிக அருமையாக இருக்கும். எனவே தேனி மாவட்டத்தில் உள்ள கண்களுக்கு விருந்து படைக்கும் இந்த சுற்றுலாதலங்களை பார்த்து ரசிப்பதற்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, வெளிமாநில, வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம்.

இந்தநிலையில் போர்ச்சுக்கல், பிரான்ஸ், பின்லாந்து, ரஷ்யா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த 52 பேர், இந்தியாவில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களை கார்களில் சென்று சுற்றிப்பார்க்க விரம்பனிர். இதற்காக அவர்கள் கடந்த 14-ந்தேதி தங்களது நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்தனர். முன்னதாக இவர்கள், தங்களது நாடுகளில் இருந்து தாங்கள் பயன்படுத்துகிற பழமையான கார்களை கப்பல் மூலம் இந்தியாவுக்கு கொண்டு வந்தனர்.. அதன்படி சுமார் 100 ஆண்டுகள் பழமையான பெண்ட்லி, ஜாகுவார், போர்சே, ஆஸ்டின் ஹீலி உள்ளிட்ட மாடல் கார்கள் இந்தியாவுக்கு வந்தன.

அந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் 100 ஆண்டு பழமையான கார்களில் வலம் வந்து இந்தியாவில் உள்ள பல்வேறு இடங்களை சுற்றிபார்த்தனர். கோவாவில் தங்களது சுற்றுலா பயணத்தை தொடங்கி கர்நாடகா, ஆந்திரா வழியாக கேரளாவுக்கு வந்தனர். அங்குள்ள இடங்களை கார்களில் சென்றபடியே சுற்றிப்பார்த்தனர். நேற்று முன்தினம் இவர்கள், தேனி மாவட்டத்துக்கு சுற்றுலா வந்தனர். தேனி மாவட்டத்தில் பல இடங்களில் சுற்றிப்பார்த்தனர்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு வழியாக மலைப்பாதைகளில் இவர்கள் கார்களில் பயணித்தனர். அங்கு நிலவிய இதயத்தை வருடும் இதமான சீதோஷ்ண நிலையை அனுபவித்து மகிழ்ந்த அவர்கள், இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை பார்த்து ரசித்தார்கள். 20-க்கும் மேற்பட்ட பழமையான கார்களில் வெளிநாட்டினர் வந்ததை கண்ட கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்ந்தனர். வெளிநாடுகளை சேர்ந்த இந்த சுற்றுலா பயணிகள் தங்களது பயணத்தை முடித்து கொண்டு அடுத்த மாதம் (டிசம்பர்) 1-ந்தேதி தங்களது நாடுகளுக்கு திரும்ப உள்ளதாக தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications