பாகிஸ்தான் உளவாளி.. கேரள அரசால் சுற்றுலா விருந்தினராக அழைக்கப்பட்ட யூடியூபர் ஜோதி.. பரபரப்பு தகவல்
திருவனந்தபுரம்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானாவை சேர்ந்த பிரபல பெண் யூடியூபர் ஜோதி மல்கோத்ரா அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், அவருக்கும், டெல்லியில் இருந்த பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவருக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இந்நிலையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நடவடிக்கைக்காக கேரள அரசால் பிரபல யூடியூபர் ஜோதி மல்கோத்ரா அழைக்கப்பட்ட சம்பவம் கேரளாவையே ஆடிப்போக வைத்துள்ளது.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானாவை சேர்ந்த பிரபல பெண் யூடியூபர் ஜோதி மல்கோத்ரா என்பவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். யூடியூபர் ஜோதியிடம் நடத்திய விசாரணையில், அவருக்கும், டெல்லியில் இருந்த பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவரை காதலித்து வந்ததும். அதன்மூலமாக பல முறை பாகிஸ்தானுக்கு சென்று வந்ததும் தெரியவந்தது. மேலும் பாகிஸ்தான் நாட்டுக்கு உளவு வேலை பார்த்ததும் தெரியவந்தது. இந்த விவகாரத்தில் பலர் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே கேரளாவில் சுற்றுலாத்துறை மிகவும் புகழ் பெற்றது. அங்கு சுற்றுலா தான் முக்கிய வருமானங்களில் ஒன்றாக உள்ளது. இந்நிலையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஏராளமான யூடியூபர்களை அழைத்து, அவர்களது பக்கத்தில் கேரளாவின் சுற்றுலா தலங்களை புகழ்ந்து போட வைத்தது கேரள அரசு. அப்ப கேரள அரசால் பிரபல யூடியூபர் ஜோதி மல்கோத்ரா அழைக்கப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மாநில அரசு அளித்த பதிலில், 'கேரள சுற்றுலாத்துறையை விளம்பரப்படுத்தும் நோக்கில் 41 பிரபல யூடியூபர்களுக்கு மாநில சுற்றுலாத்துறை அழைப்பு விடுத்திருந்துள்ளது. அவர்களின் பயணம், தங்குமிடம், உணவு ஆகியவற்றுக்கான செலவை கேரள சுற்றுலாத்துறை ஏற்றுக்கொண்டிருக்கிறது. அவ்வாறு வந்தவர்கள் கேரளாவின் முக்கிய சுற்றுலாத்தலங்களுக்கு சென்று வீடியோக்களை எடுத்து வெளியிட்டார்கள். அதில் ஜோதி மல்கோத்ராவும் ஒருவர் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த விவகாரம் கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கடுமையாக விமர்சிக்க தொடங்கி உள்ளன. ஒருவரின் பின்னணி பற்றி சரியாக தெரிந்து கொள்ளாமல் ஒரு அரசு எவ்வாறு அவருக்கு அழைப்பு விடுக்கலாம் என காங்கிரஸ், பாஜக ஆகியவை கேள்வி எழுப்பி உள்ளன.
இதுகுறித்து பா.ஜனதா தேசிய செய்தி தொடர்பாளர் ஷெஷாத் பூனவல்லா வெளியிட்ட 'எக்ஸ்' பதிவில், "பாரத மாதாவுக்கு தடை விதிப்பார்கள். ஆனால், பாகிஸ்தான் உளவாளிகளுக்கு சிவப்பு கம்பளம் விரிப்பார்களா?. சுற்றுலாத்துறை அமைச்சர் முகமது ரியாஸ், முதல்வர் பினராயி விஜயனின் மருமகன். அவரை பதவி நீக்கம் செய்து அவரிடம் விசாரணை நடத்த வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.
இதனிடையே சர்ச்சை குறித்து விளக்கம் அளித்த கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் முகமது ரியாஸ் கூறுகையில், "கேரள சுற்றுலாத்துறையை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட் நடவடிக்கையில் ஒன்று தான் இது. சமூக ஊடகங்களில் செல்வாக்கு மிக்க பலரை அழைத்தோம். அப்படி அழைக்கப்பட்டவர்களில் ஒருவர் தான் ஜோதி மல்ஹோத்ரா. அனைத்தும் வெளிப்படையாகவும், நல்ல நோக்கத்துடனும் செய்யப்பட்டது.
கேரளாவில் உள்ள இடது முன்னணி அரசு உளவு பார்க்க உதவும் அரசு அல்ல. அரசு அமைப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நடந்த நிகழ்வு முழுக்க முழுக்க கேரள சுற்றுலாத்துறையின் பிரசாரத்துக்கானது. உளவாளி என்று தெரிந்தே அரசு ஒருவரை அழைக்காது" என்று கூறினார்.
இதனிடையே கேரள அரசை விமர்சித்துள்ள பாஜகவிற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. சந்தோஷ் குமார் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும் போது, 'கேரள அரசா ஜோதியை பாகிஸ்தானுக்கு அனுப்பியது?. மத்திய அரசின் உளவுத்துறை செயலிழந்து விட்டது. தங்கள் மீதுள்ள குறையை மறைக்க மற்றவர்கள் மீது பழி சுமத்துவதா?' என்று ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications