கொடைக்கானலுக்கு இன்று போயிடாதீங்க.. மூங்கில்காடு ஆற்று வெள்ள வீடியோவை காட்டி வெதர்மேன் பதிவு
கொடைக்கானல்: கொடைக்கானலில் நேற்று முன்தினம் அதிகாலை சுமார் 2 மணி முதல் நேற்று மாலை வரை விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக மூங்கில்காடு ஆற்றில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக பள்ளங்கி கோம்பை மூங்கில்காடு கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொடைக்கானலுக்கு இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால், இன்று வரை யாரும் சுற்றுலா சென்றுவிட வேண்டாம் என்று தமிழ்நாடு வெதர்மேன் பதிவிட்டுள்ளார்.
வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து வருகிறது. வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதால், தமிழ்நாட்டில் திருவள்ளூர் தொடங்கி திருநெல்வேலி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. இதனிடையே சென்னையில் நேற்று மாலைக்கு பிறகு மழை ஓய்ந்தநிலையில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மலையால் அங்குள்ள ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சுற்றுலா நகரமான கொடைக்கானலில் நேற்று முன்தினம் அதிகாலை சுமார் 2 மணி முதல் நேற்று மாலை வரை விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. அவ்வப்போது பலத்த காற்று வீசியபடியும் இருந்தது. இதன் காரணமாக கொடைக்கானல் ஏரிச்சாலையில் நின்ற மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த நகராட்சி பணியாளர்கள் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சுமார் ஒருமணி நேரத்திற்கு பிறகு சரிசெய்தனர்.
இடைவிடாமல் பெய்த மழை மற்றும் குளிர் காரணமாக சுற்றுலா பயணிகள் தங்கள் அறைகளிலேயே முடங்கி கடந்தனர். மழை காரணமாக 2-வது நாளாக நட்சத்திர ஏரியில் படகு சவாரி நிறுத்தப்பட்டிருந்தது. மேக கூட்டங்கள் கொடைக்கானல் மலை முழுவதையும் மூடியபடியே இருந்தது. சாலைகளே தெரியாத அளவிற்கு தண்ணீர் நிறைந்த மஞ்சு மூட்டம் கடந்து சென்று கொண்டே இருந்தது. சாலையை இந்த மஞ்சு மூட்டம் மறைத்த காரணத்தால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். பகலிலேயே முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றார்கள்.
கொடைக்கானலில் நிலைமை சரியில்லை என்பதால் சுற்றுலா பயணிகள் தற்போது சுற்றுலா செல்வது உகந்ததாக இருக்காது என்கிறார்கள். ஏனெனில் கடுமையான மழை, சாலைகளில் மரங்கள் விழுந்தது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, சாலை துண்டிப்பு , பாறைகள் சாலைகளில் உருண்டு விழுவது, மின்சாரம் துண்டிப்பு போன்ற நிகழ்வுகள் அந்த பகுதிகளில் அதிகமாக உள்ளது. எனவே கொடைக்கானலுக்கு சுற்றுலாவை தவிர்ப்பது நல்லது. இந்நிலையில் கனமழை காரணமாக மூங்கில்காடு ஆற்றில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒட்டுமொத்தமாக ஒரே நாளில் கொடைக்கானலில் 13 செ.மீ. கனமழை கொட்டித்தீர்த்துள்ளது-
இதன் காரணமாக கொடைக்கானல் பள்ளங்கி கோம்பை மூங்கில்காடு கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொடைக்கானலுக்கு இன்றும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால், யாரும் சுற்றுலா சென்றுவிட வேண்டாம் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications