உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து... விடைபெற்ற விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் ஐஏஎஸ் போட்ட சூப்பர் பதிவு
விருதுநகர்: "நேற்றிலிருந்து நண்பர்கள் அழைத்து என்னடா விருதுநகர் கலெக்டராக இருந்து இப்படி இன்டர்நேஷனல் Exotic Destination கூமாபட்டிய எங்களிடம் காட்டாமல் விட்டு விட்டாய் என்று கோபித்துக் கொண்டார்கள் ! எனக்கே கொஞ்சம் அதிர்ச்சியாதான்டா இருக்கு பொறுங்க நாளைக்கு சும்மாதான் இருப்பேன். போய் பார்த்து போட்டோ எடுத்து போடுறேன் என்று சொன்னேன்." என்று கூறி ஒரு பதிவினை விருதுநகர் கலெக்டராக இருந்து விடைபெற்ற ஜெயசீலன் ஐஏஎஸ் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
இன்ஸ்டா முழுவதும் அண்மைக்காலமாக டிரெண்டிங் ஆகி வருவது விருதுநகர் மாவட்டம் 'கூமாப்பட்டி' தான். 'கூமாப்பட்டி'. dark_ night_ tn84 என்ற இன்ஸ்டா ஐடியில் உள்ள ஒருவர் வெளியிட்ட வீடியோவில், "மன அழுத்தமா? விடுமுறையை கொண்டாட வேண்டுமா? கூமாப்பட்டிக்கு வாங்க... கூமாப்பட்டி ஒரு தனித் தீவு... இந்த ஊரின் தண்ணீர் மூலிகை தண்ணீர்..." என்று அந்த இளைஞர் தனக்கே உரித்தான மொழியில், பேசுவது மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த வீடியோவில் கூமாப்பட்டியை சுற்றியுள்ள இயற்கையையும் காட்டியிருந்தார். இதனால் பலரும் கூமாப்பட்டியை கூகுள் மேப்பில் தேடினர். ஆனால் கூமாப்பட்டி மழைக்காலத்தில் தான் அப்படி இருக்கும் என்பது தெரியவந்தது.

இந்நிலையில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் இந்த டிரெண்டிங் குறித்து பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் கூறுகையில், "உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து... நேற்றிலிருந்து நண்பர்கள் அழைத்து என்னடா விருதுநகர் கலெக்டராக இருந்து இப்படி இன்டர்நேஷனல் Exotic Destination கூமாபட்டிய எங்களிடம் காட்டாமல் விட்டு விட்டாய் என்று கோபித்துக் கொண்டார்கள் !
எனக்கே கொஞ்சம் அதிர்ச்சியாதான்டா இருக்கு பொறுங்க நாளைக்கு சும்மாதான் இருப்பேன். போய் பார்த்து போட்டோ எடுத்து போடுறேன் என்று சொன்னேன்..
கூமாபட்டி, ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டி அமைந்துள்ள அழகான ஊர். பிளவக்கல் கோவிலாறு அணைகளுக்கு அருகில்,இரண்டு மிகப்பெரிய கண்மாய்களையும் கொண்ட ஆயக்கட்டுகள் நிறைந்த ஊர். மழைக்காலத்தில் கம்மாய்கள் நிரம்பி, கடல் போல் நிறைந்து, இயற்கை எழில் சூழ மிகுந்த ரம்மியமாய் காட்சியளிக்கும்.
அந்த வைரல் வீடியோவில், தலைவன் சொன்னதை போல் காதல் தோல்விக்கு தீர்த்தமாகவோ, இல்லை காதல் செட்டாவதற்கு தைலமாகவோ இருக்குமா என்பது குறித்து எந்த ஆவணக் குறிப்புகளும் இல்லை. தலைவனின் மற்ற தகவல்கள் 'ரீல்'ஸ்காக மட்டுமே!
மற்றபடி, இது போன்ற கிராமப்புற பகுதிகளில் இயற்கை எழில் சூழ்ந்த இடங்களில் கிராம சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும், அழுத்தமான நகர்ப்புற வாழ்வியலில் இருந்து இளைப்பாறவும் 100 சதவீத கியாரண்டி உள்ளஇடம். எதிர்காலத்தில் இது கிராமச் சுற்றுலா வசதிகளுடன் மேம்பாடு அடையும் என எதிர்பார்க்கலாம்!
கூமாபட்டி கண்மாயின் இன்றைய புகைப்படங்கள், கடைசி படம் கடந்த ஆண்டு நீர் நிரம்பியிருந்தபோது நான் எடுத்தது! மிகவும் ரம்மியமான பகுதி !!" இவ்வாறு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications