உறை பனியில் ஊட்டி, கொடைக்கானல்.. இவ்வளவு அழகாக மேகமலையை பார்ப்பது ஒரு தவம்.. மிஸ் பண்ணிடாதீங்க
தேனி: பலருக்கு ஊட்டியும், கொடைக்கானலும் ரொம்ப பிடிக்கும்.. காரணம் அங்கு ஆண்டு முழுவதும் நிலவும் கிளைமேட். ஆனால் மார்கழி மாதமான இப்போது கடும் குளிர் நிலவி வருகிறது. ஜனவரி மாததொடக்கத்தில் ஊட்டியிலும், கொடைக்கானல் பகுதியிலும் உறைபனி நிலவும். இப்படிப்பட்ட சூழலில் அங்கு செல்ல சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். அதேநேரம் உறைபனியை விரும்பாதவர்கள் வேறு இடங்களை தேடுவார்கள்.. அப்படி விரும்புவோர் மேகமலைக்கு போகலாம்..கிளைமேட் வேறலெவலில் இருக்கிறது.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே 35 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் மேகமலை, முற்றிலும் இயற்கையாக மட்டுமே இருக்கும் சிறந்த சுற்றுலா தலம் ஆகும். 18 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட இந்த மேகமலை இயற்கை விரும்பிகளின் சொர்க்கம் ஆகும். தேனி காத்தோட தேனை தெளிச்சாலே என்ற அனிருத் பாடலில் வரும் இடங்கள் மேகமலை தான்.. மேகங்கள் தவழ்ந்து செல்லும் இந்த மேகமலைக்கான பாதைக்கு கூகுளுக்கே இன்று வரை வழி தெரியாது. ஹைவேவிஸ் டேம் என்று போட்டால் தான் கூகுள் கூட வழி காட்டும். மிகமிக அமைதியான இயற்கை காடுகளையும், அணைகளையும் கொண்ட மேகமலை முழுமையாக தேயிலை எஸ்டேட்டுகள் நிறைந்த பகுதியாகும்.

மேகமலையில் ஆண்டு முழுவதும் குளுகுளுவென இருக்கும் என்றாலும், நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் சென்றால், அணைகளில் நிரம்பி வழியும் தண்ணீரையும், கூட்டம் கூட்டமாக வந்து மெர்சாலக்கும் மேகங்களையும், பனிமூட்டங்களையும் ரசிக்க முடியும். மேகமலை பாதையில் வாகனங்களில் பயணித்தப்படியே எழில் கொஞ்சும் இயற்கை காட்சிகளை ரசிக்கவே கேரளாவில் இருந்தும், சென்னையில் இருந்தும், பெங்களூரில் இருந்தும் ஏராளமானோர் வருகிறார்கள். மேகமலை தங்கி சுற்றி பார்க்க பெரிய அளவில் சுற்றுலா விடுதிகள் இல்லை.. சின்ன சின்ன விடுதிகள் உள்ளன. இரண்டு ஓட்டல்கள் உள்ளன. இயற்கை இன்னும் அப்படியே இருக்கும் கிராமமாக மேகமலை உள்ளது
மேகமலையை பொறுத்தவரை ஹைவேவிஸ், இரவங்கலாறு, மணலாறு, மேல்மணலாறு, வெண்ணியாறு, மகாராஜாமெட்டு உள்ளிட்ட மனதை மயக்கும் இயற்கை வளம் கொண்ட மலைக்கிராமங்கள் அமைந்துள்ளன. இவற்றை பார்ப்பதற்காகவும், அங்கு நிலவும் சீதோஷ்ண சூழலை அனுபவிக்கவும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். மேகமலை வனப்பகுதியை பொறுத்தவரை யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளன. அதிர்ஷ்டம் இருந்தால் யானைகள், கறுஞ்சிறுத்தை, புலி போன்றவற்றை பார்க்க முடியும்.
மேகமலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் வனத்துறையினர் அனுமதி அளித்து வருகின்றனர். ஏனெனில், இரவு நேரத்தில் மலைப்பாதையில் செல்லும்போது வனவிலங்குகள்-மனித மோதல் ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம் ஆகும். எனவே இரவில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக மேகமலைக்கு செல்லும் நுழைவு பகுதியான, தென்பழனி என்னுமிடத்தில் சோதனைச்சாவடி வனத்துறையால் அமைக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதிக்கு செல்லும் வாகனங்கள் இங்கு வனத்துறையினரின் அனுமதி பெறவேண்டும். அனுமதி இல்லாமல் போக முடியாது.
மேகமலையில் தற்போது குளிர் சீசன் நிலவுகிறது. இதனை அனுபவிப்பதற்காக சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்த வண்ணம் உள்ளனர். மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் தற்போது வருகை தருகின்றனர். சமீபத்தில் பெய்த மழையால் மேகமலையில் உள்ள தூவானம் உள்ளிட்ட 6 அணைகளும் நிரம்பி ரம்மியமாக காட்சி அளிக்கிறது. அவற்றை சுற்றுலா பயணிகள் அவற்றை பார்த்து ரசிக்கிறார்கள்.
மகாராஜாமெட்டுவில் உள்ள வியூ பாயிண்டுக்கு சென்று இயற்கை அழகை ரசிக்கும் சுற்றுலா பயணிகள், செல்போன், கேமராக்களில் புகைப்படம் எடுத்து மகிழ்கிறார்கள். வார இறுதியிலும், பொங்கல் பண்டிகையின் போதும், மேகமலைக்கு சுற்றுலா செல்ல விரும்புவோர் இப்போதே ரெடியாகுங்கள். மேகமலைக்கு சுற்றுலா வந்தால் வரும் வழியில், கும்பக்கரை அருவி, சுருளி அருவி, தேக்கடி அருவி, குரங்கனி, தேக்கடி என பக்கத்தில் உள்ள பகுதிகளையும் ரசிக்க முடியும். மிஸ் பண்ணிடாதீங்க..












Click it and Unblock the Notifications