10 ரூபாய் போதும்.. ராமேஸ்வரத்தின் மொத்த அழகையும் பார்க்கலாம்.. சுற்றுலா பயணிகளுக்கு சூப்பர் சான்ஸ்
ராமேஸ்வரம்: பள்ளி, கல்லூரி மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோர் பாம்பன் கலங்கரை விளக்கத்தை காணும் வகையில் 33 ஆண்டுகளுக்கு பின்னர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இங்கு சிறுவர்களுக்கான பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர்களால் பாம்பன் கலங்கரை விளக்கம் 1846 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இந்த கலங்கரை விளக்கத்தில் இருந்து கிழக்கில் உள்ள ராமநாத சுவாமி கோவிலையும், மேற்கில் உள்ள பாம்பன் பாலங்களையும், ராமேஸ்வரம் தீவின் ஒட்டுமொத்த அழகையும் காணலாம். ஆரம்பத்தில் இந்த கலங்கரை விளக்கத்துக்கு மீன் எண்ணெய், தாவர எண்ணெயும்தான் எரிபொருளாக பயன்படுத்தப்பட்டன.

1923 ஆம் ஆண்டு பாம்பன் கலங்கரை விளக்கம் புதுப்பிக்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு மின்சாரம் மூலம் இயங்கும் விளக்குகள் கலங்கரை விளக்கத்தில் பொறுத்தப்பட்டன. 1991 ஆண்டுக்கு முன்பு வரை இந்த கலங்கரை விளக்கத்தை பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டது. மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி கொலை சம்பவத்துக்குப் பின்னர் கலங்கரை விளக்கத்தைப் பார்வையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த கலங்கரை விளக்கம் 2003 ஆம் ஆண்டு மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த கலங்கரை விளக்கத்தின் வெளிச்சத்தை கரையில் இருந்து 14 நாட்டிகல் மைல் தொலைவு வரை பார்க்க முடியும. 100 அடி உயரம் கொண்ட இந்த கலங்கரை விளக்கத்தில் 9 நொடிக்கு ஒருமுறை வெளிச்சம் தரும் சக்திவாய்ந்த 1,000 கேண்டில் சக்தியுள்ள விளக்கை கொண்டது.
2021 இல் நாட்டில் உள்ள 65 கலங்கரை விளக்கங்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள 11 கலங்கரை விளக்கங்களில் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் அனுமதி வழங்கப்பட்டது. 2021 பிப்ரவரி மாதத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை கலங்கரை விளக்கமும், கடந்த ஆண்டு தனுஷ்கோடி கலங்கரை விளக்கத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், கூடுதல் மகிழ்ச்சியாக தற்போது 33 ஆண்டுகளுக்குப் பின்னர் பாம்பன் கலங்கரை விளக்கம் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வளாகத்தில் சிறுவர் விளையாடும் வகையில் பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது.
பாம்பன் சாலை பாலம், ரயில் பாலம், மண்டபம், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில், கெந்தமாதன ராமர் கோயில், மன்னார் வளைகுடா கடல் பகுதி, பாக்ஜலசந்தி கடல் பகுதி, பாம்பன் தீவு, கோரி தீவு, குருசடை உள்ளிட்ட குட்டி தீவுகளையும் இந்த கலங்கரை விளக்கத்தில் இருந்து நம்மால் பார்க்க முடியும்.
செவ்வாய்க்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையிடலாம். திங்கள்கிழமை விடுமுறை. கலங்கரை விளக்கத்தை பார்வையிடுவதற்கு சிறியவர்களுக்கு ரூ. 5, பெரியவர்களுக்கு ரூ. 10 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. போட்டோ மற்றும் வீடியோ எடுப்பதற்கு தனி கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications