இன்று முதல் ஊட்டி செல்பவர்கள் கவனிக்க வேண்டிய இரண்டு முக்கியமான விஷயங்கள்
ஊட்டி: இன்று முதல் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா செல்பவர்கள் கவனிக்க வேண்டிய இரண்டு முக்கியமான விஷயங்களை பார்ப்போம்.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டம் குளுகுளு காலநிலைய அனுபவிக்க சிறந்த சுற்றுலா தளமாக விளங்குகிறது. தமிழ்நாட்டிலேயே குறைந்த வெப்பநிலை பதிவாகுவது ஊட்டியில் தான். அவ்வப்போது இதமானமழையும், இரவில் நல்ல குளிரும் இப்போது ஊட்டியில் தான் இருக்கிறது. இதனால் இந்த இதமான சீதோஷ்ண காலநிலையை அனுபவிக்க பிற மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் தினமும் வருகிறார்கள்..

கோடை சீசன் தொடங்கிவிட்ட நிலையில் ஊட்டிக்கு தினமும் ஆயிரக்கணக்கான வானங்கள் வருகின்றன. இதனால் ஊட்டி-குன்னூர்-மேட்டுப்பாளையம், ஊட்டி நகர் உள்பட முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது..
இதனால் கோடை சீசனையொட்டி இன்று (சனிக்கிழமை) முதல் மே மாதம் இறுதிவரை நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நீலகிரி மாவட்ட போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , "கூடலூரில் இருந்து ஊட்டிக்கு வரும் அரசு பேருந்து தவிர அனைத்து சுற்றுலா பேருந்துகள், வேன் உள்ளிட்ட வாகனங்கள் எச்பிஎப், கோல்ப்ஸ் சாலை பகுதியில் நிறுத்தப்படும். அதில் வரும் சுற்றுலா பயணிகள் அரசு சுற்றுப்பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மசினகுடியில் இருந்து கல்லட்டி வழியாக ஊட்டி வரும் இலகு ரக வாகனங்கள் தலைக்குந்தா மட்டம், கோழிப்பண்ணை, புதுமந்து வழியாக ஸ்டீபன் தேவாலயம் வந்தடையும். அதில் தாவரவியல் பூங்கா செல்லும் சுற்றுலா பயணிகள் புதுமந்தில் இருந்து வண்டிச்சோலை வழியாக தாவரவியல் பூங்கா வரலாம்.
கூடலூரில் இருந்து ஊட்டி படகு இல்லம் மற்றும் கர்நாடகா பூங்கா வரும் சுற்றுலா பயணி வாகனங்கள் பிங்கர்போஸ்டில் இருந்து வலதுபுறம் திரும்பி காந்தல் முக்கோணம் வழியாக படகு இல்ல சாலை மற்றும் கர்நாடகா பூங்கா சாலையை அடையலாம்.
குன்னூரில் இருந்து ஊட்டி வரும் அரசு பேருந்து தவிர அனைத்து சுற்றுலா பஸ்கள், வேன்கள், ஆவின் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து சுற்றுலா பயணிகள் அரசு சுற்று பேருந்தை பயன்படுத்திக் கொள்ளலாம். கோத்தகிரியில் இருந்து ஊட்டி வரும் அனைத்து வாகனங்களும் கட்டபெட்டு சந்திப்பில் திருப்பி விடப்பட்டு குன்னூர் வழியாக வரவேண்டும்.
பால், பெட்ரோலியம், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய வாகனங்கள் தவிர அனைத்து கனரக வாகனங்களும் நாளை (சனிக்கிழமை) நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் கோடை விழாவினை ஓட்டி மே 1-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஊட்டி நகருக்குள் வர அனுமதி கிடையாது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரும் அனைத்து வாகனங்களும் குன்னூர் வழியாக ஊட்டிக்கும், ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து வாகனங்களும் கோத்தகிரி வழியாகவும் செல்ல வேண்டும்.
ஊட்டி மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் கமர்சியல் சாலையில் கடை வைத்திருக்கும் உரிமையாளர்கள் மற்றும் கடைகளில் வேலை செய்யும் பணியாளர்கள் தங்களது நான்கு சக்கர வாகனத்தை கடை எதிரே நிறுத்தக்கூடாது அதற்கு பதிலாக இரு சக்கர வாகனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்" இவ்வாறு நீலகிரி மாவட்ட போலீசார் அறிவித்துள்ளது.
அதேநேரம் ஊட்டி உள்பட நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் பயணிகள் எந்த காரணம் கொண்டும், சமையல் சிலிண்டர்களை வாகனங்களில் ஏற்றிக்கொண்டு வர வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக சொந்த வாகனங்களில் நீலகிரிக்கு படையெடுத்து வரும்நிலையில்,இங்கு சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதி கட்டணம், உணவு கட்டணம் ஆகியவை அதிகளவில் வசூலிக்கப்படுகிறது. இதனால் செலவுகளை கட்டுப்படுத்த நினைக்கும் சுற்றுலா பயணிகள் சிலர் வாகனங்களில் கேஸ் சிலிண்டர், அடுப்பு, பாத்திரம், மளிகை பொருட்கள் உள்ளிட்ட பொருட்களையும் கையோடு கொண்டு வருகிறார்கள். விரும்பிய இடங்களில் சமையல் செய்து சாப்பிட்டு செலவை மிச்சப்படுத்தி செல்லலாம் என்று நினைக்கிறார்கள்.
ஆனால் நீலகிரி மலையின் நிலையோ வேறாக உள்ளது. கிட்டத்தட்ட 65 சதவீதம் வனப்பகுதியை கொண்டது. அதனால் சாலையோரம் அல்லது வனப்பகுதியோரம் அவர்கள் வாகனங்களை நிறுத்தி சமையல் செய்தால், வறண்டு போன பகுதியில் தீ விபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகம். இதனால் சுற்றுலா பயணிகள் கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட தீ பிடிக்கக் கூடிய பொருட்களை எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி எடுத்து வந்தால், உள்ளே நுழையும் போதே, சிலிண்டர்களை பறிமுதல் செய்வதுடன், கடுமையான அபராதத்தையும் அதிகாரிகள் விதிக்கிறார்கள். எனவே சிலிண்டர்களை எடுத்து வர வேண்டாம்.












Click it and Unblock the Notifications