சென்னை டூ திருச்செந்தூர்-ராமேஸ்வரம்.. வாரம் வாரம் ஆன்மீக சுற்றுலா.. தமிழக அரசு சூப்பர் திட்டம்
சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் சென்னை, வாலாஜா சாலையிலுள்ள சுற்றுலா வளாகத்தில் இருந்து திருச்செந்தூர், ராமேஸ்வரத்திற்கு ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு சுற்றுலா வாகனம் புறப்பட்டு திருச்செந்தூர், உத்திரகோசமங்கை மற்றும் ராமேசுவரம், சென்று மீண்டும் திங்கட்கிழமை காலை சென்னை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தை வந்தடையும் என்று அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "சென்னை, வாலாஜா சாலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் செயல்படுகிறது. இந்த சுற்றுலா வளாகத்தில் இருந்து திருச்செந்தூர், ராமேஸ்வரத்திற்கு ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு புறப்படுகிறது. அந்த சுற்றுலா வாகனம் திருச்செந்தூர், உத்திரகோசமங்கை மற்றும் ராமேசுவரம், சென்று மீண்டும் திங்கட்கிழமை காலை சென்னை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தை வந்தடையும் வகையில் 3 நாட்கள் சிறப்பு ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்லப்படுகிறது.

முருக பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் கோவில், ராமநாதபுரத்தில் உள்ள உத்திரகோசமங்கை மங்களநாதர் கோவிலில், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சாமி கோவிலில் சிறப்பு தரிசனம், 22 தீர்த்தங்கள் தொடர்ந்து தனுஷ்கோடியையும் பார்வையிட வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தங்கும் விடுதிகளில் ஆன்மிக சுற்றுலா பயணிகளுக்கு தங்கும் வசதிகள் மற்றும் 3 வேளை உணவும் வழங்கப்படுகிறது. முன்பதிவு செய்ய www.ttdconline.com இணையதள பக்கத்திலும் அல்லது சென்னை வாலாஜா சாலையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நேரடியாகவும் முன்பதிவு செய்ய முடியும். கூடுதல் விவரங்களுக்கு 180042531111 (கட்டணமில்லா தொலைபேசி எண்) மற்றும் 044-2533 3333 மற்றும் 044-2533 3444 எண்களில் தொடர்பு கொள்ளலாம்" இவ்வாறு கூறியுள்ளார்.
திருப்பரங்குன்றம் கோவில் தெப்பத்திருவிழா: திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்க உள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் 10 நாட்கள் தெப்பத்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். அதே போல இந்த ஆண்டு தெப்பத்திருவிழா நாளை (புதன்கிழமை) காலை 6.45 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழா தொடர்ந்து 7-ந் தேதி வரை நடைபெறுகிறது. திருவிழாவின் விசேஷ நிகழ்ச்சியாக 7-ந் தேதி இரவு 8 மணியளவில் சன்னதிதெருவில் சொக்கநாதர் கோவில் முன்பு சூரசம்காரம் நடைபெறுகிறது.
பழனி தைப்பூசம்: தைப்பூசம் மற்றும் அதையொட்டி 2 நாட்கள் என 3 நாட்கள் பழனி முருகன் கோவிலில் தரிசன கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் சேகர்பாபு கூறினார். அதேபோல் தைப்பூச திருவிழாவையொட்டி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க போக்குவரத்து கழகத்துடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்ட பஸ்களில் கட்டணம் இல்லாமல் இயக்கவும் முதல்வரின் உத்தரவை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.












Click it and Unblock the Notifications