நெல்லையில் சோடா பாட்டிலால் அரசு பஸ் டிரைவரை தாக்கிய.. பாஜக நிர்வாகி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்
நெல்லை: நெல்லையில், பேருந்து மீது தாமரை சின்னத்தை ஒட்ட முயன்றபோது, அரசு பேருந்து ஓட்டுநர் தடுத்ததால், அவரை சோடா பாட்டிலால் தாக்கிய பாஜக பிரமுகர் மருதுபாண்டியன் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், மருதுபாண்டியன் மீது தற்போது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

நெல்லை டவுனில் இருந்து மணக்கொடை வீடு என்ற இடத்திற்கு அரசு டவுன் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து கடந்த 12 ஆம் தேதி வழக்கம் போல் சென்று கொண்டிருந்த போது பேருந்தை மறித்த பாஜக நிர்வாகி மருதுபாண்டி, பேருந்தின் முன்பக்க கண்ணாடியில் பாஜக ஆதரவு தேர்தல் ஸ்டிக்கரை ஒட்ட முயன்றார்.
அரசு பேருந்தில் கட்சி தேர்தல் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது எனக் கூறி அதனை அரசு பேருந்து ஓட்டுநர் சுப்பிரமணியன் தடுக்க முயன்றார். இதையடுத்து, அரசு பேருந்து ஓட்டுநர் சுப்பிரமணியன் தலையில் சோடா பாட்டிலால் ஆவேசமாக மருதுபாண்டி தாக்கினார். இதில் தலையில் காயமடைந்த அரசு பஸ் டிரைவர் சுப்பிரமணியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய பாஜக பிரமுகர் மருதுபாண்டி கைது செய்யப்பட்டார். லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்பாக இந்த சம்பவம் நடைபெற்றது. லோக்சபா தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரசாரம் போய்க் கொண்டுஇருந்த போது, பாஜக நிர்வாகியான மருதுபாண்டி அரசு பேருந்து டிரைவரை பாட்டிலால் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அரசு பேருந்து ஓட்டுநரை சோடா பாட்டிலில் தாக்கிய புகாரில் பாஜக பிரமுகர் மருதுபாண்டியன் நெல்லை போலீசாரால் கைது செய்யபட்டார். இந்த நிலையில், மருதுபாண்டியன் மீது தற்போது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக குண்டர் சட்டத்தின் கீழ் மருதுபாண்டியன் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் அமைதியை சீர்குலைக்க முற்படலாம் என்பதால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு பிறப்பித்து இருப்பதாக நெல்லை மாநகராட்சி காவல் ஆணையர் மூர்த்தி பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications