சாதி வெறி.. நிர்வாணமாக்கி, 5 மணி நேரம் பின்னாலேயே அடித்து.. நெல்லை எஸ்சி இளைஞர்களுக்கு நடந்த கொடுமை
திருநெல்வேலி: திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்ற பட்டியலினத்தவர்கள் 2 பேரை, 20 வயது கூட நிரம்பாத சாதி வெறி பிடித்த இளைஞர்கள், நிர்வமாணமாக்கி, பின்பக்கத்தில் பல மணி நேரம் தாக்கி உள்ளனர். இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் ஸ்ரீராம் நடுங்க வைக்கும் தகவலை வெளியிட்டுள்ளார்.
திருநெல்வேலி மாநகரில் தாமிரபரணி ஆற்றங்கரையில் திங்கள்கிழமை இரவு 7.45 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருவரை சித்திரவதை செய்து, நிர்வாணமாக்கி, சிறுநீர் கழித்ததாகவும், அவர்களது பணம் மற்றும் செல்போன்களை கொள்ளையடித்ததாக ஆறு இளைஞர்கள் (மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினைச் சேர்ந்தவர்கள்) திருநெல்வேலி நகர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட 19 வயதுடைய மாரியப்பன் மற்றும் 21 வயதாகும் மனோஜ் ஆகிய இரண்டு பேர் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே இந்த சம்பவத்தை ஒரு சாதாரண திருட்டு சம்பவமாக சித்தரிக்க போலீசார் முயற்சிப்பதாகவும், எஃப்ஐஆரில் பாதிக்கப்பட்டவர்களின் புகாரில் இருந்து பல விஷயங்களை தவிர்த்துவிட்டதாகவும் விசிகே நிர்வாகிகள் குற்றம் சாட்டினர். அவர்களின் குற்றச்சாட்டுகளை திருநெல்வேலி போலீஸ் கமிஷனர் திட்டவட்டமாக மறுத்தார்.
இதனிடையே திருநெல்வேலியில் நடந்துள்ள இந்த சம்பவம் அப்பட்டமான சாதி வெறியுடன் கூடிய சம்பவம் என்றும், 20 வயது கூட ஆகாத இந்த இளைஞர்கள் சாதி வன்மத்தில் இது போல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் ஸ்ரீராம் வெளியிட்டுள்ள பதிவு கொடூரத்தை அப்படியே வெளிப்படுத்தி உள்ளது. சாதிய வெறியில் இப்படியெல்லாம் நடந்து கொள்ள முடியுமா என்று கேட்போரை நடுங்க வைத்துள்ளது. வாருங்கள் அவர் பதிவினை அப்படியே பார்க்கலாம்.
"அவனின் பெயர் மனோஜ்.வயது 21. அரசு கேபிளில் காண்டிரக்ட் பணி . அவனது நண்பன் மாரியப்பனும் (19) அக்.31 இரவில் வழக்கம்போல பணிமுடித்து தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். அங்கு இருந்த ஒரு கும்பல் அவர்களை பைத்தியம் என சொல்வது மனநோயாளிகளை கேவலப்படுத்திவிடும்.
ஏலேய் இங்க வாங்கலே நீங்க என்ன சாதில. என கேட்டுவிட்டு.. பட்டியலினத்தவர் என சொன்ன மறு நிமிடம் அடித்து கத்திமுனையில் அருகாமையில் உள்ள தோட்டத்திற்கு இழுத்துச் சென்றுள்ளனர்.
இருசெல் போன்களையும் பறித்துவிட்டு, ATM கார்டையும் பிடிங்கியுள்ளனர். வங்கி க/கு பணம் இல்லையான்னு கேட்டு அவர்களின் மனேஜருக்கு போன் செய்து இவர்களை பேச வைத்து வங்கி கணக்கில் 5000 ரூ போடச் சொல்லி பணத்தையும் திருடியுள்ளனர். இருவரின் முகத்திலும் மாறி மாறி ஆறு பேரும் மூத்திரம் பெய்துள்ளனர். இவர்களின் உடைகளை களைய செய்து அம்மணமாக்கியுள்ளனர். இரவு 7.30 மணி முதல் 1.30 மணி வரை கம்பு, கட்டை, அறிவாளின் பின்புறத்தால் திரும்ப திரும்ப தாக்கியுள்ளனர்.
மனோஜ் கண்களில் இருந்து நீர் வடிந்து கொண்டே இருக்கிறது. நெற்றியின் இடதுபுறம் காயத்திற்கு தையல் போடப்பட்டுள்ளது.
இரண்டு கண்களும் வெளியே துருத்திக் கொண்டு இருக்கிறது. கண்களையும் தாக்கியுள்ளனர்.
மனோஜ் என்னப்பா நடந்துச்சுன்னு முதுகில் கைவைத்தேன். உடல் சற்றே நடுங்கியது, யாரோ துரத்திட்டு வர்ற மாதிரி இருக்கின்னே. அம்மா சாப்பாடு வாங்க போன எடத்திலேயும் யாரோ பாளோப் பன்றாங்கன்னே. அவங்கள இதுவரைக்கும் நான்பார்த்ததே இல்லன்னே. யாருன்னே தெரியாது. என்ன நடந்துச்சுன்னே புரியாமல் அதிர்ச்சியில் இருந்தான் மாரியப்பன். இருவரும் நிர்வாணமாகவே வீடு வந்து சேர்ந்துள்ளனர்.
PCR வழக்குபதிவு செய்யப்ட்டு 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் சராசரி வயதும் 20 தான்.
சாதிவெறி -கஞ்சா போதை இங்கு (திருநெல்வேலி) பொது அமைதியை சீர்குலைத்துக் கொண்டிருக்கிறது. பக்கத்தில் பெட்ல இருந்த 50 வயது மதிக்கத்தக்க ஒரு அம்மா ஏ பையனையும் பார்த்துட்டு போங்கன்னு அழைத்தார். சிவந்திபட்டி மாரியப்பன் அக் 30ம் தேதி மாலையில் ரோட்டு
ஓரமா நடந்து போய்க்கொண்டிருந்திருக்கிறான்.
பைக்ல வந்த இருவர் ஏலே......... சாதிப் பயலே.. நாங்க வர்றது தெரியலயா கையில் வைத்திருந்த கிரிக்கெட் மட்டையால் பின் மண்டைல அடித்து சென்றுள்ளனர். சிவந்திபட்டி காவல் துறை இது PCR ல வராதுன்னு நமக்கு சொல்றாங்க... தென்மாவட்டத்தில் சமீபமாக இளைஞர்களிடம் அதிகரித்து வரும் Cast Concious குறித்து, சாதிய மோதல்களில் நியமிக்கப்ட்ட கமிசன்களின் பரிந்துரைகள் குறித்து, அறிவியலுக்கு புறம்பாக வளர்ந்து வரும் பிற்போக்கான மூடப்பழக்க வழக்கங்கள் குறித்தான..புரிதலும் - எதிர்வினையும் வேகமாய் தேவைப்படுகிறது." இவ்வாறு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications