பாளையங்கோட்டையில் வரும் பெரிய மாற்றம்.. நெல்லைக்கு மேலும் பெருமை சேர்க்கும் இஸ்ரோ!
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரியில் இஸ்ரோவின் உந்தும வளாகம் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் நிலையில், பாளையங்கோட்டையில், கட்டுப்பாட்டு மையம் அமைக்கும் பணிகளை இஸ்ரோ முடுக்கி விட்டிருக்கிறது. இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டத்திற்கு மேலும் ஒரு பெருமை சேர இருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் நாட்டின் 2-வது ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில், கட்டுப்பாட்டு மையம் அமைக்கும் பணிகளை இஸ்ரோ தீவிரப்படுத்தியிருக்கிறது.

தற்போது பாளையங்கோட்டையில் சுமார் ரூ.71 கோடி செலவில் புதிய 'விண்கலக் கட்டுப்பாட்டு மையம்' அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளியை இஸ்ரோ கோரியுள்ளது. விண்ணில் செலுத்தப்படும் செயற்கைக்கோள்கள் மற்றும் விண்கலங்களை கண்காணிப்பது, கட்டளைகள் பிறப்பிப்பது, தகவல்களைப் பெறுவது போன்ற முக்கியமான பணிகளை இந்த மையம் மேற்கொள்ளும். சிவில், எலக்ட்ரிக்கல் உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் சேர்த்து 9 மாதங்களுக்குள் இந்த மையத்தைக் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் சுமார் 2,350 ஏக்கர் பரப்பளவில், ரூ.986 கோடி மதிப்பில் இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிக்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டினார். தற்போது, சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நிறைவடைந்து, ஏவுதளம் அமைப்பதற்கான முக்கிய கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களுக்குத் தேவையான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், விண்வெளி தொடர்பான ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் ஆகியவை இப்பகுதியில் அமைய ஆர்வம் காட்டி வருகின்றன. இதனை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசும் 2,000 ஏக்கர் பரப்பளவில் 'விண்வெளி தொழில் மற்றும் உந்துசக்தி பூங்கா' அமைக்கப்படும் என அறிவித்துள்ளது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும்.
ஏன் குலசேகரப்பட்டினம் முக்கியம்?
ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்படும் ராக்கெட்டுகள், செயற்கைக்கொள்கை தென்துருவ திசையில் நிலை நிறுத்தும். இதற்காக தெற்கு நோக்கி செல்ல வேண்டும். ஆனால் தெற்கில் இலங்கை இருப்பதால் அப்படி போக முடியாது. ராக்கெட் நேராகத் தெற்கு நோக்கிப் பயணித்தால், அதன் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை எஞ்சின் பாகங்கள் இலங்கையில் உள்ள மக்கள் வசிக்கும் பகுதிகளில் விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே தென்கிழக்கு திசையில் வங்காள விரிகுடா கடல் பகுதிக்கு சென்று, அங்கிருந்து இலங்கை நாட்டின் நிலப்பகுதியைத் தவிர்த்து, சிறிது வளைந்து தெற்கு திசையை நோக்கிப் பயணிக்கும். இந்த வளைவான பாதை காரணமாகவே பயண தூரம் அதிகரிக்கிறது.
ஆனால், குலசேகரப்பட்டினத்தில் இருந்து சிறிய வகை செயற்கைக்கோள்களைச் சுமந்து செல்லும் எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள், எந்தவிதத் தடையுமின்றி நேரடியாக தெற்கு நோக்கி சீறிப்பாயும். இதனால் பயண தூரம் குறைவதோடு, எரிபொருளும் மிச்சமாகும்.












Click it and Unblock the Notifications