குற்றாலத்தில் தொடங்கிய குளு குளு சீசன்.. வந்த சுற்றுலாப்பயணிகள்.. கடைசியில் இப்படி ஆகிடுச்சே
தென்காசி: சுற்றுலாப்பயணிகள் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டு இருந்த குற்றாலம் சீசன் தொடங்கியுள்ளது. ஆனாலும் நேற்று அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் போலீசார் குளிக்க தடை விதித்தனர். இதனால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் உள்ளது. இங்குள்ள இயற்கை சூழலும் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், இருக்கும். குற்றால அருவிகளில் விழும் தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் ஆனந்த குளியல் போட குவிவதுண்டு. ஒவ்வொரு ஆண்டும், ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் குற்றாலத்தில் சீசன் களை கட்டும்.

இந்த மாதங்களில் இங்குள்ள அருவிகளில் தண்ணீர் ஆ ர்ப்பரித்துக் கொட்டும். சாரல் மழை விட்டு விட்டு பெய்யும் என்பதாலும், இதமான சூழல் நிலவும் என்பதாலும் இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருவதுண்டு. இங்குள்ள இயற்கை காட்சிகளையும் ரசித்தபடி சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்தில் உற்சாக குளியலை போட்டுவிட்டு செல்வதை காண முடியும்.
தமிழகம் மட்டும் இன்றி வெளிமாநில சுற்றுலா பயணிகளும் குற்றாலத்துக்கு வருகை தருவதை பார்க்க முடியும். தென்காசிக்கு அருகில் உள்ள மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாப்பயணிகள் மட்டும் இன்றி வட மாவட்டங்களில் இருந்து கூட கார், வேன் என போன்ற வாகனங்களில் உறவினர்களுடன் ஜாலியாக குற்றாலத்திற்கு மக்கள் டூர் அடிப்பதை காண முடியும்.
வழக்கமாக ஜூன் தொடக்கத்திலேயே குற்றால சீசன் களை கட்டிவிடும். இதனால் ஜூன் மாதம் தொடங்கியதில் இருந்தே குற்றால சீசனை எதிர்பார்த்துக் கொண்டு இருந்தனர். ஆனால், தென்மேற்கு பருவமழை துவங்க தாமதம் ஆனதாலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை இல்லாததாலும் குற்றாலத்தில் ஜூன் முதல் வாரத்தில் வெறும் பாறைகளே தென்பட்டன. இதனால், சுற்றுலாப்பயணிகள் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாகினர்.
நடப்பு ஆண்டில் ஜூன் மாதம் 2 வாரங்களை கடந்த நிலையிலும் சீசன் தொடங்காமல் இருந்த நிலையில், குற்றால சீசன் எப்போது தொடங்கும் என சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தனர். இந்த நிலையில், ஜூன் 3-வது வாரத்தில் குற்றாலத்தில் சீசன் தொடங்கியுள்ளது. குற்றாலத்தில் குளிர்ந்த காற்று மற்றும் சாரல் மழையோடு இதமான சூழல் நிலவியது. குற்றாலத்தின் மெயின் அருவியிலும் லேசாக தண்ணீ கொட்ட தொடங்கியது.
ஆனால் குறைந்த அளவே நீர் கொட்டியது. குற்றாலம் ஐந்தருவியில் தண்ணீர் விழுந்ததால் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் குளித்து மழிந்தனர். இதற்கிடையே குற்றாலத்தில் சீசன் தொடங்கிவிட்டது என்று அறிந்து பல்வேறு ஊர்களில் இருந்து குற்றாலத்திற்கு சுற்றுலாப்பயணிகள் வருகை புரிந்தனர். இந்த நிலையில், நேற்று மாலையில் ஐந்தருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சுற்றுலாப்பயணிகளுக்கு போலீசார் குளிக்க தடை விதித்தனர்.
இரவு 7 மணியளவில் மெயின் அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், அங்கும் சுற்றுலாப்பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால், குளிப்பதற்காக ஆர்வத்துடன் வந்த சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியிருப்பதால் குற்றத்திலும் சீசன் களை கட்ட தொடங்கி விடும். இதனால், சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications