தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்!
தென்காசி: தென்காசி ஆலங்குளம் அருகே, 9 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று, ரோட்டில் கண்ணில் பட்டவர்களை எல்லாம் அரிவாளால் வெட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆலங்குளம் அருகே நெட்டூர் எனும் பகுதியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இந்த குற்றத்தில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

என்ன நடந்தது?
இன்று மாலை சுமார் 5 மணியளவில், நெட்டூர் பகுதியில் 3 பைக்குகளில் 6 இளைஞர்கள் முகமுடி அணிந்துக்கொண்டு வேகமாக சென்றிருக்கிறார். இவர்கள் சென்ற பாதை முழுவதும் தெருவில் நின்றுக்கொண்டிருந்தவர்களை அரிவாளால் தாக்கியிருக்கின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடியிருக்கிறார்கள். அரிவாள் வெட்டியதில் 6 பேருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக அவர்களை மீட்ட பொதுமக்கள், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி, பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள ஆலங்குளம் போலீசார் 9 பேர் கொண்ட மர்ம கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மக்கள் போராட்டம்
முதற்கட்ட விசாரணையில் திருமண நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக ஒரு பிரிவினர் இப்படி செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பட்டியல் சமூகத்தினர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இக்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications