தெருநாய் கடித்ததில் நெல்லை இளைஞர் உயிரிழப்பு.. ரேபிஸ் தொற்று.. மனைவிக்கும் தடுப்பூசி
நெல்லை: நெல்லை வள்ளியூர் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு தெருநாய் கடித்த நிலையில் தற்போது ரேபிஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டு 31 வயது வாலிபர் பலியாகி உள்ளார். அவசர சிகிச்சையில் இருந்தபோது அந்த வாலிபர் மனைவியை தாக்கியதாகவும், இதனால் அவருக்கு ரேபிஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்கான தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
நாய் கடித்து அஜாக்கிரதையாக விட்டதால் தற்போது அந்த நபர் உயிரிழக்க நேரிட்டுள்ளது. தெருநாய்கள் கடித்தால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லலாம். பாதிப்பு இருப்பின் ரேபிஸ் தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

தெருநாய் கடித்து இளைஞர் உயிரிழப்பு
சமீப நாட்களாகவே தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. சாலையில் நடந்து செல்பவர்களை கடித்து வைப்பதால் சிறு குழந்தைகளை கூட தனியாக அனுப்ப பெற்றோர்கள் பயந்து வருகிறார்கள். இது சென்னை மட்டும் இன்றி பல்வேறு ஊர்களில் நடந்து வருகிறது.
அப்படித்தான் நெல்லையை சேர்ந்த 31 வயது கூலித் தொழிலாளி ஒருவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு தெருநாய் கடித்துள்ளது. தற்போது அவர் ரேபிஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நெல்லையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள்
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே சிதம்பரபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஐயப்பன் (வயது 31). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி ஒரு மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். அப்பகுதி சுற்றுவட்டாரத்தில் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் இதேபோல் அருகில் உள்ள ஊருக்கு வேலை சென்றுள்ளார்.
வேலை பார்த்த இடத்தில் தெருநாய் ஒன்று ஐயப்பனை கடித்துள்ளது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. எனினும் இது என்ன செய்யும் என்று அஜாக்கிரதையாக விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. எந்த வேலையும் செய்ய முடியாமல் சோந்துள்ளார். இதனால் மருத்துவமனைக்கு செல்ல முடிவெடுத்தார்.
மனைவியையும் தாக்கியுள்ளார்
அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு குமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு டாக்டர்கள் ஐயப்பனுக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்தனர். இதில் அவருக்கு ரேபிஸ் நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருக்கு அதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் அவரது உடல்நிலை மோசமடைந்ததாக கூறப்படுகிறது.
மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது ரேபிஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட ஐயப்பன் தன் மனைவியையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கும் ரேபிஸ் நோய்த்தொற்று தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று ஐயப்பன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கணவர் உயிரிழந்ததை பார்த்து மனைவி கதறி அழுதார்.
சமூக ஆர்வலர்கள் அட்வைஸ்
தெருநாய் கடித்து 31 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஆரம்பத்திலேயே நாய் கடித்த சமயத்திலேயே அதற்கு தடுப்பூசியோ, அதற்கான சிகிச்சையோ மேற்கொண்டிருந்தால் இவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்டிருக்காது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications