தூத்துக்குடியில் இவ்வளவு இடங்கள் இருக்கா! இத்தனை நாள் தெரியாம போச்சே.. அறியப்படாத 'முத்து நகரம்'!
தூத்துக்குடி: கோடை வெயில் தொடங்கியிருந்தாலும் தற்போது வானம் மேகம் மூட்டத்துடன்தான் காணப்படுகிறது. இது சம்மர் ட்ரிப்புக்கு ஏற்ற நேரமாகும். தமிழ்நாட்டின் தென்கோடி மாவட்டமான தூத்துகுடி கோடை விடுமுறையை கழிக்க சிறப்பான இடமாகும். ஆனால் வழக்கமான இடங்களை விட பல அறியப்பட்டாத இடங்கள் உங்களை நிச்சயம் ஈர்க்கும்.
தூத்துக்குடி மாவட்டம் என்றாலே திருச்செந்தூர் முருகன் கோயில், உப்பள்ளங்கள்தான் நம் நினைவுக்கு வரும். ஆனால் இந்தியாவின் வரலாறு வடக்கிலிருந்து எழுதப்பட்டபோது, இந்தியாவின் வரலாறு தெற்கிலிருந்துதான் தொடங்குகிறது என்று அனைவருக்கும் பாடமெடுத்த ஊர்தான் ஆதிச்சநல்லூர். இந்த ஆதிச்சநல்லூர் தூத்துக்குடி மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். இவ்வளவு தொன்மை வாய்ந்த நகரத்தில் பார்க்க வேண்டிய கவனம் பெறாத இடங்கள் ஏராளமாக இருக்கின்றன.

ஆதிச்சநல்லூர்: திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் 24 கி.மீ தொலைவில் ஆதிச்சநல்லூர் அமைந்திருக்கிறது. இந்தியாவின் மிகவும் பழமையான வரலாறு சிந்து சமவெளி நாகரீகம் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் அதற்கு இணையாக தென்னிந்தியாவில் ஒரு சமூகம் வாழ்ந்து வந்திருக்கிறது. அது வரலாற்று சிறப்பு மிக்க தமிழ் சமூகம் என்பதை இந்த ஆதிச்சநல்லூரில் கிடைத்த தொல் பொருட்கள் உறுதி செய்துள்ளது. இது கிடைப்பதற்கு முன்னர் வரை சிந்து சமவெளி பகுதியை நோக்கி படையெடுத்த வரலாற்றாசிரியர்கள், ஆதிச்சநல்லூரின் பெருமை தெரிந்த பின்னர் இங்கு படையெடுக்க தொடங்கினர்.
இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் கார்பன் டேட்டிங் எனப்படும் வயது அறியும் சொதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதாவது ஒவ்வொரு பொருளிலும் கார்பன் இருக்கும். இந்த கார்பன் எவ்வளவு பழையதாக இருக்கிறது என்பதை கண்டுபிடித்துவிட்டால் அந்த பொருளின் தொன்மை தெரிந்துவிடும். இவ்வாறு ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை அனுப்பி வைத்தபோது அது கிமு 905 மற்றும் கிமு 791 காலத்தை சேர்ந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது 2,700 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து இந்த பகுதியில் மக்கள் பண்பட்டு வாழ்ந்து வந்திருக்கின்றனர் என்பதைதான் இது உணர்த்துகிறது.
தாமிரபரணி நதியின் கரையில் சுமார் 144 ஏக்கர் பரப்பளவில் ஆய்வு களம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வாழ்ந்த மக்கள் போர் விரர்களாகவும், குதிரையேற்றம் பழகியவர்களாகவும், இரும்பு கொண்டு ஆயுதங்களை செய்யும் திறனையும் அறிவையும் பெற்றிருந்தனர். இந்த ஆய்வு களத்தில் பார்ப்பதற்கு எதுவும் வித்தியாசமாக இருக்காது. ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பண்பாடு கொண்ட நம் மூதாதையர்கள் வாழ்ந்த இடத்தில் நாம் நின்றுக்கொண்டிருக்கிறோம் என்பது நிச்சயம் கிளர்ச்சியை உண்டாக்கும்.
கழுகுமலை சமண கோயில்: இது கோவில்பட்டிக்கும் சங்கரன்கோவில் பகுதிக்கும் இடையில் அமைந்திருக்கிறது. இங்கு மூன்று முக்கியமான கோயில்கள் இருக்கின்றன. ஒன்று கழுகுமலை வெட்டுவான் கோயில். முற்கால பாண்டியர்கள் காலத்தில் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டதாகும். ஆதிச்சநல்லூரில் பழந்தமிழர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ள நிலையில், அவர்கள்தான் பின்நாட்டிகளில் அரசர்களாகவும், குடிமக்களாகவும் பரினமித்திருக்கலாம். அதாவது பாண்டியர்களாக பரினமித்திருக்கலாம் என்று ஒரு கருத்து நிலவி வருகிறது.
அந்த வகையில் இங்கு அமைந்துள்ள சமணர் கோயில் தனிச்சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இதுபோன்ற சிற்பம் இரண்டு இடங்களில்தான் காணப்படுகிறது. ஒன்று கழுகுமலை வெட்டுவான் கோயில், மற்றொன்று அஜந்தா, எல்லோரா குகை கோயில். செங்குத்தான மலை பாறையை குடைந்து அதில் கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலில் உள்ள சிலைகளில் கசியும் ஈரம் 1200 ஆண்டுகளாக பழமை மாறாமல் அப்படியே இருக்கிறது.

கொற்கை பழைய துறைமுகம்: தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் சுமார் 29 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பழைய கொற்கை. இங்கு துறைமுகத்திற்கான எந்த தடயமும் தற்போது இல்லை. ஆனால் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தூத்துக்குடி வந்த கிரேக்க மாலுமி பெரிப்ளஸ் கொற்றை துறைமுகம் இருந்ததாகவும், அது பாண்யர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் தனது பயண குறிப்புகளில் கூறியுள்ளார். தற்போது இங்க வெற்றிவேலம்மன் கோயில் மட்டுமே எஞ்சி இருக்கிறது.
கயத்தார்: ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து தீரமுடன் போராடியதற்காக தூக்கிலிடிப்பட்டவர்கள்தான் வீர பாண்டிய கட்டபொம்மன். அவர் தூக்கிலிடப்பட்ட இடம்தான் கயத்தார். இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் சிற்றரசர்களின் பங்கு எத்தகையது, தங்கள் மக்கள் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கை எத்தகையது என்பதை இந்த நிகழ்வு சுட்டிக்காட்டுகிறது. தலைவன் மக்களை அடமானம் வைத்துவிட்டு மறைந்திருக்க மாட்டான் என்றும், மக்களுக்காக தனது உயிரையே கொடுப்பான் என்றும் இதன் மூலம் வீர பாண்டிய கட்டபொம்மன் தெளிவாக உணர்த்தினார். அவர் தூக்கிலப்பட்ட பிறகு மக்களின் விடுதலை உணர்வு கொழுந்துவிட்டு எரிந்தது. அந்த தீயின் வெப்பத்தை அங்கு இன்றும் நம்மால் உணர முடியும்.
இந்த இடங்கள் தவிர மணப்பாடு, மெஞ்ஞனபுரம், காயல்பட்டிணம், பனிமயமாதா ஆலயம், குலசேகரபட்டிணம், அய்யனார் சுணை போன்ற இடங்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்களாகும்.












Click it and Unblock the Notifications