வெயிலை தவிர வேலூரில் ஏதும் இல்லையா.. இருக்கு ஜில்லுன்னு இடம் இருக்கு.. பெஸ்ட் சம்மர் டூர் ஸ்பாட்
வேலூர்: வேலூர் என்பதற்கு பதில் வெயிலூர் என்று பெயர் மாற்றியிருக்கலாமோ? அல்லது வெயிலூர் என்பதுதான் மருவி வேலூராக மாறியிருக்குமோ? என்று அம்மாவட்ட மக்கள் நீண்ட காலமாக சிந்தித்து வருகின்றனர். ஆனால் வேலூரில் வெயிலை தவிர டூரிஸ்ட் ஸ்பாட்கள் பல இருக்கின்றன. உண்மையை சொல்வதெனில் இந்தியாவின் முதல் சுதந்திர போராட்டம் இங்குதான் நடைபெற்றுள்ளது.
வேலூர் மாவட்டத்திலிருந்து சமீபத்தில்தான் திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. அதற்கு முன்னர் திருவண்ணாமலை தனியாக பிரிக்கப்பட்டது. அதற்கும் முன்னர் வேலூர் மாவட்டம் என்பதற்கு பதிலாக வட ஆற்காடு மாவட்டம் என்பார்கள். இந்த மாவட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் சுற்றிபார்க்க ஏராளமான இடங்கள் கிடையாது. ஆனால் இருக்கும் சில இடங்கள் சுற்றிப்பார்க்க நல்ல வொர்த்தான இடம்தான்.

இந்த பட்டியலில் முதலில் இருக்கும் இடம் வேலூர் கோட்டை. 16 நாயக்கர் காலத்தில் (விஜயநகர பேரரசு) கட்டி முடிக்கப்பட்ட இந்த கோட்டை தற்போது வரை கம்பீரம் குறையாமல் காட்சியளிக்கிறது. இந்தியாவின் முதல் சுதந்திர போராட்டம் எனப்படும் சிப்பாய் கலகம் 1806ம் ஆண்டு இந்த கோட்டையில்தான் நடைபெற்றது. திப்புவுக்கும் இந்த கோட்டைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அவரது உறவினர்கள் பலர் இந்த கோட்டையில்தான் சிறை வைக்கப்பட்டனர்.
133 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோட்டை வேலூர் பழைய பேருந்து நிலையத்திற்கு எதிரே அமைந்திருக்கிறது. சென்னையிலிருந்து ஒரு நாள் சுற்றுலா செல்ல வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த கோட்டை நல்ல அனுபவத்தை கொடுக்கும். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோவை, பெங்களூரு, மைசூரு, திருவனந்தபுரம் போன்ற இடங்களுக்கு செல்லும் ரயில் மூலம் காட்பாடி ரயில் நிலையத்தை அடையலாம். அங்கிருந்து டவுன் பஸ்ஸில் பழைய பஸ் ஸ்டான்ட் போய் விடலாம். அதிகபட்சம் 15 நிமிடங்கள் ஆகும்.

இந்த கோட்டையை சுற்றி மூன்று பக்கமும் அகழி வெட்டப்பட்டுள்ளது. ஒரே ஒரு பக்கம் மட்டும் வாசல் இருக்கிறது. இதில்தான் உள்ளே போக முடியும், வெளியே வர முடியும். கோட்டைக்குள் ஜலகண்டேஸ்வரர் கோயில், தேவாலயம், பள்ளிவாசல், அரசு அருங்காட்சியகம் உள்ளது. 1947க்கு பின்னர் இந்த கோட்டை இந்திய தொல்லியல்துறை வசம் வந்தது. அதற்கு முன்னர் நாயக்கர்கள்-பீஜப்பூர் சுல்தான்-மராட்டியர்கள்-கர்நாடக நவாப்கள் என இறுதியாக ஆங்கிலேயர் வசம் இருந்தது.
இந்த முக்கியமான கோட்டையை தவிர இதர சில கோட்டைகளும் இருக்கின்றன. வேலூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ தூரத்தில் சஜ்ரா மற்றும் கோஜ்ரா மலை கோட்டைகள் அமைந்துள்ளன. இந்த கோட்டைகள் 1678 ஆம் ஆண்டில் சத்ரபதி சிவாஜியின் இராணுவத்தால் கட்டப்பட்டுள்ளது. பெரும்பாலும் வேலூர் கோட்டைக்கு அச்சுறுத்தல் ஆற்காடு பகுதியிலிருந்தே வந்தது. எனவே இதனை கண்காணிக்க இந்த கோட்டை கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த கோட்டைக்கு செல்ல படிக்கட்டுகள் ஏதும் கிடையாது. எனவே கரடு முரடான பாதையில்தான் ஏறி போக வேண்டும்.
மலையின் உச்சியில் சிதிலமடைந்த கோட்டை இருக்கும். அதேபோல பாழடைந்த கிணறு ஒன்று இருக்கிறது. இந்த கிணற்றில் நீர் இல்லை. ஆனால் உள்ளே இறங்கி இதனை பார்க்கலாம் கிணற்றின் பக்கவாட்டு சுவர்களில் புடைப்பு சிற்பங்கள் இருக்கின்றன. அதேபோல வேலூர் மற்றொரு சிறப்பான இடம் ரத்தனகிரி முருகன் கோயிலாகும். வேலூர் நகரிலிருந்து 12 கி.மீ தொலைவில் ஒரு சிறிய குன்றின் மேல் இந்த ரத்தனகிரி முருகன் கோயில் அமைந்துள்ளது. இது 14ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயிலாகும்.
அதேபோல வேலூர் நகரிலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ள அமிர்தி காடும் சிறப்பான சுற்றால தலமாகும். பருவமழை காலத்தில் இங்குள்ள மலைகளில் அருவிகள் தோன்றும். கோடைக்காலங்களில் செல்வதற்கு ஏற்ற இடமாகும். இது தவிர வள்ளி மலை கோயில் சுற்றி பார்க்க ஏற்ற இடமாகும். வேலூரிலிருந்து பொன்னை செல்லும் வழியில் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த வள்ளிமலை ஒரு சமண கோயிலாகும்.

கி.பி 9ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த கோயிலில் சமண சமயத்தில் 23வது தீர்த்தங்கரரான பார்சுவநாதரின் புடைப்பு சிற்பமும் பத்மாவதி இயக்கி அம்மனின் புடைப்பு சிற்பங்களும் காணப்படுகிறது. காலப்போக்கில் இதனை இந்து சமயம் தனதாக்கிக்கொண்டது. அதன் பின்னர் இந்த மலை வள்ளிமலையாக பெயர்மாற்றம் பெற்றது. அதேபோல மற்றொரு குறிப்பட பட வேண்டிய இடம் டெல்லி கேட். இது தற்போதைய ராணிப்பேட்டை மாவட்டத்தின் ஆற்காடு பகுதியில் அமைந்திருக்கிறது.
ஆற்காடு நவாப் கட்டுப்பாட்டில் இருந்த வட ஆற்காடு பகுதியை ஆங்கிலேயரான ராபர்ட் கிளைவ் கைப்பற்றினார். இதனையடுத்து இந்த வெற்றியின் சின்னமாக நுழைவு வாயில் ஒன்று கட்டப்பட்டது. 1751ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த நுழைவு வாயில் டெல்லி கேட் என்று அழைக்கப்படுகிறது. அப்போது இந்த நுழைவு வாயிலை கடந்துதான் மக்கள் ஆற்காடு பகுதிக்குள் நுழைவார்கள். தற்போது இது இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது.
இது தவிர விரிஞ்சிபுரம் வழித்துணைநாதர் கோயிலும் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாகும். இந்த கோயில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னதாக கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்தகோயிலில் நேரம் காட்டும் சூரிய கடிகாரம் ஒன்றும் இருக்கிறது. அந்த காலத்தில் கடிகாரத்தில் நேரம் பார்க்கும் பழக்கம் பெரியதாக யாருக்கும் கிடையாது. அரசர், தளபதிகள் உள்ளிட்ட முக்கிய ஆட்கள் மட்டுமே நேரம் பார்க்கும் பழக்கத்தை கொண்டிருந்தனர். எனவே இந்த கோயில் அரசருக்கு மிகவும் நெருக்கமான கோயிலாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது தவிர பொற்கோயில், வானியல் ஆய்வு மையம், ஏலகிரி, ஜவ்வாது மலை ஆகியவையும் சிறப்பான சுற்றுலா தலமாகும்.












Click it and Unblock the Notifications