ஊட்டி போறீங்களா.. இன்று முதல் தொட்டபெட்டா சிகரத்திற்கு செல்ல முடியாது! எவ்வளவு நாள் தடை இருக்கும்?
நீலகரி: ஃபாஸ்ட்டேக் சோதனைச் சாவடி பணிகள் காரணமாக இன்று முதல் தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடை காலம் ஆரம்பித்தாலே ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் படையெடுத்துவிடுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் வெப்பம் அதிகரிப்பதால் அதை தணிக்க பொதுமக்கள் இதுபோன்ற மலை பிரதேசங்களுக்கு செல்வார்கள்.

இந்தாண்டும் கூட அதற்கு விதிவிலக்கு இல்லை. கோடை காலம் தொடங்கியது முதலே பொதுமக்கள் மலை பிரதேசங்களுக்கு அதிகம் செல்ல தொடங்கியுள்ளனர்.
ஊட்டி சுற்றுலா: அதன்படி பொதுமக்கள் பலரும் விரும்பி செல்லும் பகுதிகளில் ஒன்றாக ஊட்டி இருக்கிறது. மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்திற்கு கோடை காலம் வந்துவிட்டாலே ஒவ்வொரு ஆண்டும் அதிகப்படியான மக்கள் செல்வார்கள். கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் இதமான வானிலை இருக்கும் என்பதால் பலரும் ஊட்டிக்கு செல்வார்கள். அப்படி வரும் சுற்றுலா பயணிகளை கவர அங்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கும்.
மலர் கண்காட்சி: குறிப்பாக மலர் கண்காட்சி.. இந்தாண்டு அங்கு 126ஆவது மலர் கண்காட்சி கடந்த 10ஆம் தேதி முதல் தாவரவியல் பூங்காவில் தொடங்கி நடந்து வருகிறது. இந்தாண்டு ஒரு லட்சம் ரோஜா மலர்களை கொண்டு உதகை மலை ரயில் தொடங்கி பல்வேறு அலங்காரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதை பார்க்கவே பொதுமக்கள் அங்கு ஆர்வமாக குவிந்து வருகிறார்கள். இது தவிர நாய்கள் கண்காட்சி தொடங்கி பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஏற்கனவே ஊட்டிக்கு இ பாஸ் நடைமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. விண்ணிப்பிக்கும் அனைவருக்கும் இ பாஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், எங்கு கெடுபிடிகள் அதிகமாக இருக்குமோ என நினைத்தே பலரும் ஊட்டி செல்ல தயங்குகிறார்கள்.
தொட்டபெட்டா: இந்த சூழலில் அங்குள்ள தொட்டபெட்டா மலை சிகரத்திற்கும் சுற்றுலா பயணிகள் அடுத்த ஒரு வாரம் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தொட்டபெட்டா சாலையில் பொதுவாக வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் டிராபிக் பாதிப்பு ஏற்படும். இதை தடுக்க அந்த சாலையில் ஃபாஸ்ட்டேக் சோதனைச் சாவடியை மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. நுழைவாயில் பகுதியில் இருந்து சிகரத்திற்கு செல்லக்கூடிய சாலையில் பாஸ்ட் டேக் நுழைவு கட்டண வசூல் மையத்தை மாற்றி அமைக்க உள்ளனர். வனத் துறை சார்பில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எவ்வளவு நாட்கள் தடை: இதன் காரணமாக இன்று மே 16ஆம் தேதி முதல் மே 22ஆம் தேதி வரை ஒரு வாரத்திற்கு தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த காலகட்டத்தில் தொட்டபெட்டா செல்ல திட்டமிடும் மக்கள் அதற்கேற்ப பிளான் செய்து கொள்ளவும்.
தொட்டபெட்டா எங்கே இருக்கிறது: தொட்டபெட்டா என்பது ஊட்டி- கோத்தகிரி சாலையில் 9 கி.மீ. தூரத்தில் உள்ள ஒரு மலை சிகரமாகும். தென்னிந்தியாவில் மிகவும் உயரமான ஒரு சிகரமாக தொட்டபெட்டா இருக்கிறது. இது சுமார் 2637 மீட்டர் உயரம் கொண்டதாகும். தொட்டபெட்டா என்றால் கன்னட மொழியில் பெரிய மலை என்று அர்த்தம். இந்த பகுதியில் பல அரிய மூலிகைகள் இருப்பதாக நம்பப்படுகிறது. சுற்றுலா பயணிகளை கவரும் இடங்களில் ஒன்றான இந்த தொட்டபெட்டாவுக்கு ஒரு வாரம் மக்கள் செல்ல முடியாது.












Click it and Unblock the Notifications