செம ஃபீல்.. விஜய், அஜித், சூர்யா ஆடி, பாடிய இடம்! ஊட்டி சென்றால் இந்த சூட்டிங் ஸ்பாட்டை மறக்காதீங்க
நீலகிரி: விஜய் பிறந்தநாளை நேற்று விஜய் ரசிகர்கள் தொடங்கி திரையுலகினர், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் கொண்டாடிய நிலையில் விஜய் ஆடி பாடிய சூப்பரான சூட்டிங் ஸ்பாட் ஒன்றைதான் இன்றைய சுற்றுலா பகுதியில் பார்க்க உள்ளோம்.
மலைகளின் இளவரசியான நீலகிரி என சொன்ன உடனே குளிரும், விண்ணை தொடும் மலைகளும், நம்மை உரசிச் செல்லும் மேகங்களும், கண்களை குளிர்ச்சியாக்கும் தேயிலை தோட்டங்களும் நினைவுக்கு வரும். இதனை காண்பதற்காக பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தினந்தோறும் ஊட்டிக்கு சென்று வருகின்றனர்.

எத்தனை முறை சென்றாலும் திகட்டாத ரசனையை தன்னகத்தே கொண்டிருக்கிறது ஊட்டி. இப்படிப்பட்ட அழகான பகுதியை சினிமாகாரர்கள் விடுவார்கள். பல ஆண்டுகளாக தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி திரையுலகினர் ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் படிப்பிடிப்புகளை நடத்தி வருகிறார்கள்.
இப்படி ஏராளமான சூட்டிங் ஸ்பாட்டுகள் ஊட்டியில் உள்ள நிலையில், பெரும்பாலான திரைப்படங்களில் வரும் முக்கிய பகுதியைதான் தற்போது பார்க்க உள்ளோம். கூடலூர் வழியாக ஊட்டி வரும் சாலையில் அமைந்து உள்ள இந்த இடத்தை ஏராளமான திரைப்படங்களில் நீங்கள் பார்த்து இருக்கலாம்.

திரும்பும் திசையெங்கும் மலைக்க வைக்கும் உயரமான மலைகளை கொண்ட இப்பகுதி நிச்சயம் உங்கள் மனதுக்கு இதமான அனுபவத்தை தரும். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இப்பகுதியில் பல்வேறு ஏற்பாடுகளை சுற்றுலா துறை செய்து உள்ளது. உள்ளே செல்லும்போதே பழங்குடியின மக்கள் நம்மை வரவேற்பதை போன்ற பகுதி உள்ளது.
வென்லாக் டவுன்ஸ் 9வது மைல் என்று சொல்லப்படும் இந்த பகுதி பச்சை புட்கள் போர்த்திய மலை பகுதியாகும். ஊட்டிக்கு சென்றதற்கான திருப்தியை இப்பகுதி உங்களுக்கு நிச்சயம் ஏற்படுத்தும். முழுக்க முழுக்க நீலகிரி பழங்குடியின மக்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு அமைப்புகள் உள்ளே ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

நடிகர் விஜய் நடித்த சச்சின் திரைப்படத்தில் வரும் "வாவா வா என் தலைவா" பாடல் இங்குதான் காட்சிபடுத்தப்பட்டது. அதேபோல் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான அவள் வருவாளா திரைப்படத்தின் 'சிக்கி முக்கி' பாடலும் இங்குதான் படமாக்கப்பட்டது, சூர்யா நடித்த ஆறு படத்தில் வரும் 'பார்க்காத பார்க்காத' பாடல், விக்ரம் நடித்த சாமி திரைப்படத்தின் 'இதுதானா' பாடல் போன்றவற்றின் சூட்டிங்கும் இங்குதான் நடந்து இருக்கிறது.

இந்த அழகிய மலையை வெறும் கால்களால் சாதாரணமாக ஏரி உச்சிக்கு செல்ல முடியும். ஆனால், முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் ஏறுவது கடினம். அவர்கள் அமர்வதற்காக வெளியிலேயே இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஊட்டி நகரில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் இப்பகுதி அமைந்து இருக்கிறது.

டாக்சி, கார், பைக், சுற்றுலா வாகனங்கள் இப்பகுதிக்கு செல்லலாம். காலை 8 மணி முதல் மாலை 6:30 மணி இங்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், காலை 8:30 மணி முதல் மதியம் 2 மணி வரை இதை பார்வையிடுவதற்கான சிறந்த நேரமாகும். குறிப்பாக காலை 10 - 11 மணி வரை இதன் முழு அழகை உங்களால் ரசிக்க முடியும்.
பெரியவர்களுக்கு ரூ.30 நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கேமராவுக்கு தனியாக ரூ.50 நுழைவுக் கட்டணம் வசூலிக்கிறார்கள். இந்த பகுதிக்கு செல்லும்போதே பைகாரா ஏரி மற்றும் நீடிக் ராக் வியூ பாயிண்டுக்கு செல்லும் வகையில் நேரத்தையும் பயணத்தையும் திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.












Click it and Unblock the Notifications