மழை இன்னும் முடியல.. 12 மாவட்டங்களில் இன்றும் கொட்ட போகுது கனமழை.. வானிலை மையம் தந்த எச்சரிக்கை
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பெஞ்சல் புயல் காரணமாகக் கனமழை கொட்டி தீர்த்தது. இப்போது தான் மழை ஓய்ந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே மழை இன்னும் முழுமையாக முடியவில்லை என்றும் இன்றும் 12 மாவட்டங்களில் கனமழை கொட்டும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. வடதமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவையில் லேசான மழைப் பதிவாகி உள்ளது. காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

கொட்டும் மழை: குறிப்பாக தோகமலை (கரூர்) 130 மிமீ மழை பெய்துள்ளது. கிருஷ்ணராயபுரம் (கரூர்), சோளிங்கர் (ராணிப்பேட்டை), திருப்பத்தூர் (திருப்பத்தூர்), ஏற்காடு (சேலம்) தலா 100 மிமீ மழை பெய்துள்ளது. வட தமிழகம், மேற்கு தமிழகம் ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. வெப்பத்தைப் பொறுத்தவரை அதிகபட்சமாகத் தூத்துக்குடியில் 34.2° செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்சமாக ஈரோட்டில் 17.0° செல்சியஸ் வெப்பமும் பதிவாகியுள்ளது.
வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நேற்று (02-12-2024) காலை வடதமிழக உள் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மாலை காற்றழுத்த தாழ்வு பகுதியாக வடதமிழக மற்றும் தெற்கு கர்நாடக உள் பகுதிகளில் நிலவியது. இது இன்று (03-12-2024) காலை கடலோர கர்நாடக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது.
12 மாவட்டங்களில் கனமழை: இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் டிச. 5 முதல் டிச. 9ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை கிளைமேட்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகள் & வங்கக்கடல் பகுதிகளில் வரும் டிச. 7ம் தேதி வரை எச்சரிக்கை ஏதுமில்லை. அதேநேரம் அரபிக் கடல் பகுதிகளை பொறுத்தவரை இன்று கேரள - கர்நாடக கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள், அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
நாளை லட்சத்தீவு பகுதிகள், அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வரும் டிச. 5ம் தேதி மத்தியகிழக்கு அரபிக்கடலின் தெற்கு பகுதிகள், அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
போக வேண்டாம்: டிச.6ம் தேதி தெற்கு அரபிக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். டிச. 7ம் தேதி தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications