சென்னையில் நைட்டு மழை கொட்டப்போகுது.. மொத்தம் 17 மாவட்டங்களில் வார்னிங்! வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, வட மாவட்டங்களில் நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. மழை மேலும் ஒரு வாரத்திற்கு தொடரும் என எச்சரிக்கப்பட்டிருக்கும் நிலையில், சென்னை உட்பட 17 மாவட்டங்களில் இன்றிரவு 10 மணி வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "செங்கல்பட்டு, சென்னை, கோயம்புத்தூர், கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, திருவள்ளூர், திருவாரூர், திருநெல்வேலி, விழுப்புரம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாவட்டங்களில் இரவு 10 மணி வரை லேசான மழை பெய்யும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக இன்று மதியம் விடுக்கப்பட்டிருந்த வானிலை அறிவிப்பில், "தெற்கு கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (டிச.06) கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை (டிச.07) தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
டிச.08 முதல் 12 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (06-12-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (07-12-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அதே நேரம் டிச.08 முதல் 10 வரை தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, இந்த நாளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications