பால் வாங்க யாருமே வரலைங்க! 400 பாக்கெட் வெள்ளத்துல அடிச்சிட்டு போயிடுச்சி..ஆவின் முகவர் குமுறல்
சென்னை: சென்னையில் ராயப்பேட்டையில் பால் வாங்க யாரும் வராததால் 400 பால் பாக்கெட்டுகள் வெள்ளத்தில் அடித்துச் சென்றுவிட்டதாக ஆவின் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
சென்னையில் நேற்று காலை முதல் மிக்ஜாம் புயல் தாண்டவம் ஆடியது. இதனால் பயங்கர காற்று, மழையால் பெரும்பாலான இடங்களில் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை.

முகவர்களும் வெள்ள நீரில் சென்ற வீடுகளுக்கு கொடுக்க இயலாத சூழல் எழுந்தது. அது போல் வாகனங்களில் உள்ளே சென்றால் வாகனங்கள் பழுதடைந்து நின்றுவிடுகின்றன. இதனால் பால் முகவர்கள் வெள்ள நீரில் வாகனத்துடன் செல்ல முடியாத சூழல் எழுந்துள்ளது.
இதனால் வெள்ள நீர் இல்லாத ஒரு இடத்தில் நின்று கொள்கிறார்கள், அங்கு வந்து பாலை நுகர்வோர் பெற்றுக் கொள்ளுமாறு கூறுகிறார்கள். ஆனால் சிலருக்கு இந்த தகவல் போய் சேராததால் அவர்களால் வந்து வாங்க முடியவில்லை. பல இடங்களில் அரை லிட்டர் பால் பாக்கெட்டுக்காக நீண்ட தூரம் வெள்ளத்தில் நடந்து சென்று வெறுங்கையோடு வந்தவர்களும் இருக்கிறார்கள்.
இதனால் குழந்தைகளுக்கு பால் கொடுக்க முடியாமல் அவதிப்பட்டனர். காய்கறி, அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாதவர்கள், இந்த பாலை வைத்து டீ, காபி குடித்து வயிற்றை நிரப்ப முடிவு செய்து அதுவும் நடக்காமல் பசியுடனும் பட்டினியுடனும் இருந்தனர். இந்த நிலையில் ராயப்பேட்டையில் நேற்றைய தினம் பால் பாக்கெட்டுகளை கொண்டு வரும் போது அது வெள்ளத்தில் அடித்துச் சென்றதாக முகவர் ஒருவர் தெரிவித்தார்.
இதனால் சுமார் 400 பாக்கெட்டுகள் அடித்துச் சென்றதாம். அது போல் இன்று வெள்ள நீர் இருக்கும் இடத்திற்கு தெரியாமல் கோபாலபுரத்தை சேர்ந்த முகவர், தண்ணீர் இல்லாத இடத்தில் நின்று கொண்டிருக்கிறார். அந்த இடத்தில் நிற்பதாக பால் வாங்கும் நுகர்வோருக்கு தகவல் தெரிவித்தும் யாரும் வந்து வாங்கவில்லை என்கிறார்.

நிவாரண முகாம்களுக்குக் கூட செல்ல முடியாமல் பலர் தவித்து வருகிறார்கள். சென்னை புறநகர் பகுதிகளில் மோசமான பாதிப்பு இருந்து வருகிறது. அங்கெல்லாம் 15 அடிக்கு தண்ணீர் இருப்பதால் மக்கள் வெளியேற முடியாமல் அவதிப்படுகிறார்கள். இதனால் ஹெலிகாப்டர் மூலம் உணவு, மருந்து உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
இதுவரை 18 லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. நாளையும் 20 லட்சம் உணவுகள் தயார் செய்யப்படுவதாகவும் அவை மாடிகளில் தஞ்சமடைந்துள்ள மக்களுக்கு கொடுக்கவுள்ளதாகவும் சொல்கிறார்கள். புறநகர் பகுதிகளுக்கு வரும் படகுகளில் பாதிக்கப்பட்டவர்கள் வந்து சொந்த ஊர்களுக்கு புறப்படுகிறார்கள். 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பை விட இது மோசமானதாகவே இருக்கிறது என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications