வங்கக் கடலில் திடீர் மாற்றம்.. சென்னை + 8 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு! கனமழை அலர்ட்
சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது, வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. இந்நிலையில் சென்னை உட்பட 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுகிறது.
பருவமழை காலங்களில் புயல்கள் உருவாகி மழை பொழிவை கொடுக்கும். அந்த வகையில், தற்போது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அதாவது கடல் பரப்பில் வெப்பம் அதிகரிக்கும் போது, நீர் ஆவியாகி மேகமாக மாறுகிறது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் இது தொடர்ந்து நடக்கும் பட்சத்தில் அந்த இடத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுகிறது.

கடலில் வெப்பம் அதிகம் உள்ள பகுதிகளில் அதிக நீராவி இருக்கும், எனவே இந்த பகுதியை நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலம் பயணித்து மேகங்களை அதிகமாக சேர்த்து புயலாக உருவாகிறது. நடப்பாண்டில் தற்போது வரை எந்த புயலும் தமிழகத்தை தாக்கவில்லை. வங்கக்கடலில் தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றிருக்கிறது. இது ஒடிசா நோக்கி நகரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வட தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. சென்னையில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால், சென்னை விமான நிலையத்தில் 9 வருகை விமானங்கள், 10 புறப்பாடு விமானங்கள் என மொத்தம் 19 விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை கடந்த ஜூன் 1ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் வரை 64% கூடுதலாக மழை பொழிவை தென்மேற்கு பருவமழை கொடுத்திருக்கிறது. இந்த காலங்களில் ஒட்டுமொத்தமாக சராசரியாக 204.4 மி.மீதான் மழை பொழிந்திருக்க வேண்டும். ஆனால் 335.4 மி.மீ மழை பெய்திருக்கிறது. அதிகபட்சமாக நீலகிரியில் 1158.5 மி.மீ, கோவையில் 845.4 மி.மீ என மழை பெய்திருக்கிறது.

குறைந்தபட்சமாக தூத்துக்குடியில் 50.4 மி.மீ, நாகப்பட்டினத்தில் 91.7 மி.மீ என மழை பதிவாகியுள்ளது. நாகையில் பெய்த மழை இயல்பை விட -39 சதவிகிதம் குறைவாகும். மற்ற மாவட்டங்களை விட ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டங்களில் மழை குறைவாகவே பெய்திருக்கிறது.
இந்நிலையில் தமிழகத்தில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி, சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், புதுச்சேரி, காரைக்கால், தூத்துக்குடி துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுகிறது.












Click it and Unblock the Notifications