சென்னையில் நள்ளிரவில் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு..! கடந்த வருடம் மாதிரி இருக்காது என உறுதி
சென்னை: கடந்த ஆண்டு தண்ணீர் தேங்கிய இடங்கள் கண்டறியப்பட்டு மழை நீர் வடிகால் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுள்ளது. இம்முறை தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நள்ளிரவில் ஆய்வு செய்த பிறகு அளித்த பேட்டியில் கூறினார்.
சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இன்றும் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலையிலும் சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. மழையை எதிர்கொள்ள தேவையான முன்னேற்பாடுகளை தமிழக அரசு மேற்கோண்டுள்ளது. மழை தொடர்பான பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறும் மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதிகளில் மழை நீர்தேங்கினாலூம் அதை உடனுக்கு உடன் அகற்ற மாநகராட்சி ஊழியர்கள் 24 மணி நேரமும் ஷிப்ட் முறையில் பணியில் இருப்பார்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, சென்னையில் நள்ளிரவு கனமழை பெய்த நேரத்தில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரிக்கரை பகுதியில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
அப்போது அதிகாரிகளிடம் ஏரிக்கு மழை நீர் வந்து சேருகிற வழித்தடங்கள் தூர்வாரப்பட்டுள்ள விதம் குறித்து கேட்டறிந்தார். அதேபோல, திருவல்லிக்கேணி பகுதியிலும் உதயநிதி ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:- நள்ளிரவு 12 மணி, 1 மணி வரைக்கும் பலத்த மழை பெய்தது. பல இடங்களில் போய் ஆய்வு செய்து இருக்கிறேன். நிறைய இடங்களில் தண்ணீர் வற்றியுள்ளது.

இன்னும் மழை வந்தாலும் அதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். பள்ளிக்கரணை பகுதியில் போய் பார்த்து இருக்கிறேன். அங்குள்ள மக்கள் குறைகளை தெரிவித்து இருக்கிறார்கள். நாளை மீண்டும் ஆய்வுக்கு வருவதாக சொல்லியிருக்கிறேன். பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்தூறை அதிகாரிகளை வர சொல்லியிருக்கிறேன். கடந்த ஆண்டு என்ன பிரச்சினைகள் இருந்ததோ.. அது இந்த ஆண்டு வராத அளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications
