பெங்களூரில் வெள்ளம்! அப்படியே வேலூருக்கு வந்தா.. 108 டிகிரி வெயில்! தலைகீழ் வானிலை!
சென்னை: கடந்த 2 நாட்களாக பெங்களூரில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. பார்க்கும் இடமெல்லாம் வெள்ளம் ஓடுகிறது. ஆனால், பெங்களூரில் 200 கி.மீ தள்ளி இருக்கும் வேலூரில் வெயில் மண்டையை பிளக்கிறது. இந்த குழப்பமான வானிலையால் மக்கள் கடுமையாக பாதிப்படைந்திருக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. குறிப்பாக வேலூரில் நேற்று 108 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் கொளுத்தியிருக்கிறது. இந்நிலையில், மே.5 வரை வேலூர், சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

வெயிலின் தாக்கம்
வெயில் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது x பக்கத்தில், "பல நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, கரூர், தர்மபுரி, ஈரோடு மற்றும் சேலம் பகுதிகளில் தீவிர இடியுடன் கூடிய மழை பதிவாகியுள்ளது. உள்நாடு, தெற்கு மற்றும் மேற்கு தமிழ்நாட்டில் மேலும் மழை எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில்,
வேலூர் - 42.4°C : இந்த ஆண்டின் அதிகபட்ச வெப்பநிலை
சென்னை மீனம்பாக்கம் - 40.2°C : இந்த ஆண்டின் முதல் 40°C+ பதிவு
சென்னை நுங்கம்பாக்கம் - 38°C : இந்த ஆண்டின் அதிகபட்சம்
திருத்தணி - 40.6°C : இந்த ஆண்டின் அதிகபட்சம்
அடுத்த 5 நாட்கள் (மே 5 வரை), வேலூரிலிருந்து KTCC (சென்னை) வரை கடும் வெப்பம் நிலவும். அதன் பிறகு வெப்பநிலை குறையும்" என தெரிவித்திருக்கிறார்.
வெயில் + மழை
என்னதான் சென்னை, வேலூரில் வெயில் தீவிரமாக இருந்தாலும் தமிழகத்தின் சில பகுதிகளில் மழையும் பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கோவை, தேனியில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்றிரவு டெல்டா மாவட்டங்களிலும் மழை லேசாக எட்டிப்பார்த்திருக்கிறது.
குளுகுளு பெங்களூரு
பெங்களூரை பொறுத்தவரை, நேற்று ஒரே நாளில் 110 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இது ஏப்ரல் மாதத்தில் பெய்த மிக அதிகப்படியான மழையாகக் கருதப்படுகிறது. இதற்கு முன் 2001-ஆம் ஆண்டு ஏப்ரல் 19 அன்று பதிவான 108.6 மி.மீ மழையே சாதனையாக இருந்தது.
கோடை வெயிலால் தகித்துக் கொண்டிருந்த பெங்களூரை இந்த மழை சட்டென குளிர்வித்தது. நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விடக் குறைந்து 18 டிகிரி செல்சியஸுக்கு சென்றது. சில பகுதிகளில் வெப்பநிலை ஒரே அடியாக 10 டிகிரி வரை குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications