பயமுறுத்தும் ஹீட் ஸ்ட்ரோக்.. வெயிலில் வெளியே சென்றுவிட்டு வந்து கூல் வாட்டர் குடிக்க கூடாதா? ஆபத்தா?
சென்னை; இணையத்தில் டிரெண்டாகும் சில போஸ்டுகளில் இந்த குளிர்ந்த நீர் காரணமாக ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும் என்றும் இணையத்தில் போஸ்டுகள் பரவ தொடங்கி உள்ளன
நாடு முழுக்க வெப்ப அலை தீவிரம் அடைந்து வருகிறது. சில இடங்களில் கடுமையான வெப்பநிலை காரணமாக மக்கள் பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கு உள்ளாகும் சூழ்நிலையும் ஏற்பட்டு உள்ளது.

இணையத்தில் தற்போது வெயிலில் வெளியே சென்றுவிட்டு வந்து வீட்டில் அவசர அவசரமாக கூலான தண்ணீர் குடித்தால் ஆபத்து ஏற்படும் என்று பல போஸ்டுகள் சுற்றி வர தொடங்கி உள்ளன.
இணையத்தில் டிரெண்டாகும் சில பதிவுகளில்... ஜாக்கிரதை! 40 - 50 டிகிரி செல்சியஸ் வரை செல்லும் வெப்ப அலைக்கு தயாராகுங்கள். ஆரோக்கியமாக இருக்க அறை வெப்பநிலையில் இருக்கும் தண்ணீரை மட்டுமே கண்டிப்பாக குடிக்கவும். ப்ரிட்ஜில் வைக்கப்பட்ட குளிர்ந்த நீரைக் குடிப்பதைத் தவிர்க்கவும், ஏனெனில் அது நம் உடலில் உள்ள சிறிய இரத்த நாளங்களை வெடிக்கச் செய்யலாம். வெளியே வெப்பநிலை 40 டிகிரிக்கு அதிகரிக்கும் போது வெளியே சென்றுவிட்டு வந்து வீட்டில் குளிர்ந்த நீரை குடிக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
மிகவும் வெப்பமான நாளில் வெளியிலிருந்து வீட்டிற்குள் நுழைபவருக்கு இயற்கையாகவே தாகம் ஏற்படும். அதிக வியர்வையுடன் இருக்கும் , மேலும் அவர்களின் உடலை குளிர்விக்க சிறிது குளிர்ந்த நீரை குடிக்க விரும்புவார். ஆனால், குளிர்ந்த நீரில் கை, கால், முகம் ஆகியவற்றைக் கழுவினால், அவர் நிலைகுலைந்து போக வாய்ப்புள்ளது. வெளியில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸாக இருக்கும்போது, குளிர்ந்த நீரை அருந்த வேண்டாம்; அதற்கு பதிலாக, எப்போதும் வெதுவெதுப்பான நீரை குடிக்கவும் என்று இணையத்தில் வைரலாகும் சில போஸ்டுகள் கூறுகின்றன.
இன்னும் சில போஸ்டுகளில் இந்த குளிர்ந்த நீர் காரணமாக ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும் என்றும் இணையத்தில் போஸ்டுகள் பரவ தொடங்கி உள்ளன.
சென்னை சம்பவம்: இப்படிப்பட்ட நிலையில்தான் சென்னையில் கட்டுமானப் பணியின் ஏற்பட்ட ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக உடல் பாதிக்கப்பட்ட கூலி தொழிலாளி பலியாகி உள்ளார். உ.பியை சேர்ந்த சச்சின் மீஞ்சூர் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தபோது மயங்கி விழுந்தார். சென்னை மீஞ்சூர் இந்த சம்பவம் நடந்து உள்ளது. ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளார்.
இவர் கட்டுமான பணியில் ஈடுபடும் போதே மயங்கி விழுந்துள்ளார். இந்த நிலையில் அவருடன் வேலை பார்த்தவர்கள் அலறியபடி அவரை தூக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். நீண்ட நேரம் வேலை பார்த்த நிலையில் மயங்கி விழுந்து பின்னர், ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு பலியாகி உள்ளார்.
ஹீட் ஸ்ட்ரோக் என்றால் என்ன?: ஹீட் ஸ்ட்ரோக் என்பது கடுமையான வேலை காரணமாக உடலில் நீர் இழப்பு ஏற்பட்டு, இதயம் தொடங்கி பல்வேறு உறுப்புகள் செயல் இழப்பது ஆகும். அதிக வெப்பநிலை மற்றும் கடுமையான சூடு ஆகியவற்றுள் நீண்டகாலம் இருந்தால் உடலின் வெப்பநிலை ஒழுங்குமுறை அமைப்பு செயல் இழப்பதை குறிக்கும்.
குளிர்ந்த நீர்: சரி குளிர்ந்த நீர் காரணமாக உண்மையில் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுமா? இதன் உண்மைத்தன்மை என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.
கடுமையான வெயிலில் வெளியே சென்றுவிட்டு வந்த உடனே குளிர்ந்த நீரை குடிப்பதால் மாரடைப்பு அல்லது வெப்ப பக்கவாதம் எனப்படும் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படாது. உடல் வெவ்வேறு காலநிலை மற்றும் வெப்பநிலைக்கு ஏற்ப இயற்கையான திறனைக் கொண்டுள்ளது. இருப்பினும், குளிர்ந்த நீர் உட்பட எந்த வகையான திரவத்தையும் குடிக்கும் முன் சிறிது ஓய்வெடுப்பது நல்லது. வெப்பமான காலநிலையில் குளிர்ந்த நீரைக் குடித்தால், வயிற்றில் உள்ள இரத்த நாளங்கள் உடனடியாக சுருங்கலாம். இதனால் வயிற்று வலி அல்லது தலைவலி ஏற்படலாம். ஆனால், ஆனால் இதனால் வெப்ப பக்கவாதம் ஏற்படாது.
கடுமையான வெயில் காலத்தில் நீரிழப்பு மற்றும் சோர்வைத் தடுக்க வெப்பமான காலநிலையில் உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது முக்கியம். ஓய்வு எடுப்பது அல்லது நிழல்களைத் தேடுவது உங்கள் உடலை நிதானமாக வைத்திருக்கும். குமட்டல், வாந்தி, அல்லது இதயத் துடிப்பு அதிகரித்தால் மருத்துவரை அணுகுவதை உறுதி செய்யவும்.
மற்றபடி குளிர்ந்த நீர் காரணமாக ஹீட் ஸ்ட்ரோக் உடல்நிலை பாதிப்பு எல்லாம் ஏற்படாது. லேசான வயிற்று வலி, குமட்டல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.












Click it and Unblock the Notifications