இன்று தென்தமிழகத்தில் குளுகுளு மழை.. வடதமிழகத்தில் மண்டையை பிளக்கும் வெயில்! சென்னை கிளைமேட் என்ன
சென்னை: தமிழ்நாட்டில் குறிப்பாகத் தென்தமிழகத்தில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த பருவமழை காலத்தில் தமிழ்நாட்டில் நல்ல மழை இருந்தது. முதலில் சென்னை மற்றும் அண்டை வட மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக நல்ல மழை இருந்தது. நகரமே மூழ்கும் அளவுக்கு மழை கொட்டி தீர்த்தது.

தொடர்ந்து டிச இறுதியில் தென் தமிழகத்தில் மழை பெய்தது. புயல் இல்லாமலேயே அதி தீவிர கனமழை கொட்டியது. இதுவும் கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களை மழை பாதித்தது.
தமிழ்நாடு: இப்படியே ஜனவரி முதல் வாரம் வரை பருவமழை சிறப்பாக இருந்த நிலையில், மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் உள்ள நீர்நிலைகள் நிரம்பின. இருப்பினும், பருவமழை நின்ற உடன் மாநிலத்தில் வெப்பம் உச்சம் தொட ஆரம்பித்தது. பிப். மாதமே முதல் மாவட்டமாக ஈரோட்டில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்தது. தொடர்ந்து பல மாவட்டங்களில் வெப்பம் அதிகமாகப் பதிவானது.
தமிழகத்திலும் கூட வறண்ட ஒரு வானிலையே அதன் பிறகு நிலவியது. இந்தச் சூழலில் தான் நேற்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்தது. இந்நிலையில், இன்னும் கூட தென் தமிழகத்தில் மழை இருக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. அதேநேரம் வடதமிழகத்தில் வறண்ட ஒரு வானிலை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
தென் தமிழகம்: இது தொடர்பாகச் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
ஏப்ரல் 3ஆம் தேதி தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழக மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் ஏப்ரல் 4ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அதிகபட்ச வெப்பம்: அதிகபட்ச வெப்பம் என்று பார்க்கும் போது ஏப்ரல் 4ஆம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை அடுத்த ஐந்து தினங்களில் 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்த அளவில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மேலும், மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவுமில்லை" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications