தமிழகத்தில் இன்று வெளுக்க போகும் கனமழை.. குட்நியூஸ் இனிமேல் தான்.. சென்னை வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் அக்டோபர் 24ம்தேதியான இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க போகிறது.. இனி வரும் நாட்கள் சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை கனமழை கொட்ட போகிறது. தற்போதைய தமிழகத்தில் பெரிய அளவில் மழைக்கான வாய்ப்பு இல்லை என்றாலும், ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுளளது.

சென்னை வானிலை மையம் நேற்று வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூறியுள்ளதாவது, "மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய அதி தீவிர 'தேஜ்' புயல் திங்கள்கிழமை காலை 08.30 மணி அளவில் வலு குறைந்து மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மிக தீவிர புயலாக நிலவுகிறது. இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து 24-10-2023 அன்று மிகத் தீவிர புயலாக ஏமன் கடற்கரையை கடக்கக்கூடும். அந்த சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 125 முதல் 135 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 150 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இதே போல், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று 17.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து நேற்று(23-10-2023) காலை 08.30 மணி அளவில் அதே இடத்தில் நிலவுகிறது.
இது ஒடிசாவிற்கு தெற்கே சுமார் 360 கிலோ மீட்டர் தொலைவிலும், டிகா (மேற்கு வங்காளம்)விற்கு தெற்கே - தென்மேற்கே சுமார் 510 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலவுகிறது. இது வடக்கு - வடகிழக்கு திசையில் திரும்பி வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்கு வங்க கடலோரப் பகுதிகளை நோக்கி அடுத்த மூன்று தினங்களில் நகரக் கூடும்.
கனமழை எச்சரிக்கை: தென் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், அக்டோபர் 26ஆம் தேதி வரை, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில், இன்று சூறாவளி காற்று மணிக்கு 125 முதல் 135 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 150 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் பகலில் படிப்படியாக குறைந்து மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110 கி.மீ., வேகத்திலும், மாலையில் படிப்படியாக குறைந்து மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னை வானிலை: சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்ப நிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.












Click it and Unblock the Notifications